~சி.வி.சண்முகம் புகார்: சசிகலா மீது வழக்கு பதிவு!

politics

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியலிலிருந்து விலகுவதாகத் தேர்தலுக்கு முன்பு சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கடந்த மாதம் இறுதியிலிருந்து தொண்டர்களிடமும், கட்சி பிரமுகர்களிடமும் அவர் பேசும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சசிகலாவுக்கு, ஆதரவாகவும் எதிராகவும் அதிமுகவினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் 9ஆம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா மீது போலீஸில் புகார் அளித்திருந்தார்.

திண்டிவனத்தில் உள்ள ரோஷணை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் அளித்த புகாரில், “கடந்த ஜூன் 7ஆம் தேதி சசிகலா குறித்து சில கருத்துகளை ஊடகங்களிடம் பேட்டியாகக் கொடுத்தேன். அதற்கு சசிகலா நேரடியாகப் பதிலளிக்காமல், அடியாட்களை வைத்து கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள்.

மேலும், கைப்பேசியில் என்னை அச்சுறுத்தும் வகையில், கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இன்றுவரை சுமார் 500 போன் அழைப்புகள் செய்துள்ளனர். இன்னும் கைப்பேசி, சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

சசிகலா பற்றிப் பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் என மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். இதற்கு சசிகலாவின் தூண்டுதல்தான் காரணம். எனவே சசிகலா மற்றும் எனது அலைபேசிக்குக் கால் செய்த மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த புகார் மீது போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சசிகலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 506(1)-கொலை மிரட்டல், 507 – எங்கு இருந்து பேசுகிறோம் என்று குறிப்பிடாமல் அநாகரிகமாகப் பேசுதல், 109 – அடுத்தவரைத் தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், 67 (ஐ.பி. சட்டம்) – தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலான தகவலைப் பதிவிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *