மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

ஒன்றியம் என்று குறிப்பிட்டது புதுச்சேரியைதான்: துணைநிலை ஆளுநர் விளக்கம்!

ஒன்றியம் என்று குறிப்பிட்டது புதுச்சேரியைதான்: துணைநிலை ஆளுநர் விளக்கம்!

புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடவில்லை. புதுச்சேரி அரசைதான் ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டதாக துணைநிலை ஆளுநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதிலிருந்து ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு என்ற சொல்தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசை, ஒன்றிய அரசு எனச் சொல்பவர்கள் மீது தேவைப்பட்டால் வழக்கு தொடருவோம் என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறியிருந்தார். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? என நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருந்தார்.

அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றிய அரசு என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இனியும் இந்த வார்த்தையைதான் பயன்படுத்துவோம். ஒன்றிய அரசு என்ற சொல்லைக் கேட்டு யாரும் மிரள வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருந்தார்.

புதுச்சேரி முதல்வராக என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மே 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டாலும், பல்வேறு இழுபறிக்குப் பிறகு ஜூன் 27ஆம் தேதிதான் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என்ற சொல்லை பயன்படுத்தி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக சார்பில் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜனே ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதாக வீடியோவும், செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு ஆளுநர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டப்படி பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழிப் படிவத்தில் எந்த மாறுதலும் செய்யப்படாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. ஒன்றிய அரசு என்று ஆளுநர் கூறியதாகத் திரித்துக் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் பதவியேற்கும்போது, தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்கிறோம் என்று கூறுகிறார்களோ அதேபோல் "Indian union Territory of puducherry" என்ற வாசகம் "இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு" என மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இப்படிவம்தான் வெகுகாலமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை "Indian Union Territory" என்று பயன்படுத்தி வருகிறோம்.

அதனால் ஒன்றியம் எனக் குறிப்பிட்டது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயும் மத்திய அரசு என்று குறிப்பிடவில்லை. மாநில அரசுகளின் பதவியேற்பு படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம் பெறாது. அவ்வாறு இருக்கையில் புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது. அதனால்தான் இந்த விளக்கம் தேவைப்படுகிறது.

மத்திய அரசை, ஒன்றிய அரசு என ஆளுநர் கூறியதாகத் திரித்து கூறுவது கண்டிக்கத்தக்கது. தேவையற்ற சலசலப்புகளால் இந்திய இறையாண்மையை குலைக்க முயல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

புதன் 30 ஜுன் 2021