மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

எதிர்க்கட்சி தலைவரிடம் அறிக்கை கேட்கும் சேகர்பாபு

எதிர்க்கட்சி தலைவரிடம் அறிக்கை கேட்கும் சேகர்பாபு

கடந்த ஆட்சியில் 8700 கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருந்தால், அதுகுறித்த பட்டியலை எதிர்க்கட்சி தலைவர் வெளியிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று(ஜூன் 29) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “முதல்வர் வழிகாட்டுதலின்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகம் தூய்மையாக, சிறந்த முறையில் பராமரிக்கப்படுவதற்கு துறை சார்ந்த அதிகாரிகள்,இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், இக்கோயிலின் தக்கர் ஆகியோருக்கு இந்து அற நிலையத் துறை சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.3500 கோடி மதிப்புள்ள 8700 கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். நான் அவருக்கு வைக்கின்ற கேள்வி என்னவென்றால், அப்படி கோயில் நிலங்களை மீட்டிருந்தால், அதனுடைய பட்டியலை வெளியிடுங்கள்; பல கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருந்தால் சிவகங்கையில் உள்ள கௌரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலங்களில் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெறுகின்ற கட்டுமான பணிகளை நிறுத்த நீங்கள் ஏன் முற்படவில்லை?

இன்றைய ஆட்சியில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும், அந்த நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின்பேரில் எந்தெந்த நிலங்கள், எந்த தேதியில் மீட்கப்படுகிறது என்பதை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்படுகிறது. 55 நாட்கள் ஆட்சியில் 79.05 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருக்கிறோம். இந்த நிலங்களின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 520 கோடியாகும். இதை நாங்கள் வெளிப்படையாக அறிவித்திருக்கிறோம்.

அறிக்கை வெளியிட்டு இருக்கிற எதிர்க்கட்சி தலைவர், கடந்த காலங்களில் தேதி வாரியாக, மீட்கப்பட்ட நிலங்கள், அந்நிலங்களின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட வேண்டும். அதில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். தங்களுடைய கட்சிக்காரர் அபகரித்த நிலங்களை அவர்களுக்கு அறிவுரை கூறி மீட்க முடியாத ஆட்சி கடந்த கால ஆட்சி என்பதற்கு நேற்றைய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே சாட்சி”என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,” அறிவிக்கின்ற அறிவிப்புகளை செயல்படுத்துகின்ற அரசாக இந்த அரசு இருக்கும். பொறுத்திருங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரப் பணியாளராக மாற்ற பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தளர்வுகளின் அடிப்படையில், விதிமுறைகளுக்கு உட்பட்டு 50 பேருக்கு மிகாமல் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 29 ஜுன் 2021