மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

சிறுபான்மையினர் ஆணையத்தை சீர்திருத்துவாரா பீட்டர் அல்போன்ஸ்?

சிறுபான்மையினர் ஆணையத்தை சீர்திருத்துவாரா பீட்டர் அல்போன்ஸ்?

தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்று (ஜூன் 29) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழி சிறுபான்மையினரின் நலன்களை பேணி காத்திட 1989 டிசம்பர் 13 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

சிறுபான்மையினரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்து அதன் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் செயல்படுவார். பீட்டர் அல்போன்ஸ் கடந்த 1989, 1991 தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் 2006 இல் கடையநல்லூர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவிலேயே சிறுபான்மை ஆணையத் தலைவர் பதவியை எதிர்பார்த்துப் பலர் காத்திருந்தும் கலைஞர் காலத்தில் இருந்தே திமுக தலைமையின் பிரியத்துக்குரிய பீட்டர் அல்போன்ஸுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பீட்டர் அல்போன்ஸுக்கு வாழ்த்துகளும், ஆலோசனைகளும் பலர் தெரிவித்து வருகிறார்கள்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ள வாழ்த்தில், “தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மரியாதைக்குரிய சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இது வரை இந்த ஆணையத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் அதனை ஒரு சம்பிரதாய ஆணையமாகவே செயல்பட வைத்தார்கள். அனுபவம் வாய்ந்த சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் சிறுபான்மை ஆணையத்தைச் செயலாற்றல் மிக்க ஒன்றாக மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது”என்று குறிப்பிட்டிருக்கிறார். சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணிச் செயலாளருமான வானதி சீனிவாசனும் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுபோல சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்களில் தமிழ் சமணர்களையே இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பீட்டர் அல்போன்ஸிடம் வைக்கப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் இருக்க கூடிய தமிழ் சமணர்களும் சிறுபான்மையினர் பிரிவில் தான் வருகிறோம், ஆணையத்தில் உறுப்பினராக தமிழ் சமணர் ஒருவர் தற்சமயம் பொறுப்பில் இருக்கிறார், வடமாநிலத்து ஜெயின் சமூகத்தை சார்ந்தவரும் தமிழ்நாட்டில் அந்த ஆணையத்தில் உறுப்பினராக இருக்கிறார், இதுநாள் வரை அந்த ஆணையத்தால் என்னென்ன நன்மைகள் யார் யார் பயன்பெற்றார்கள் என்று தெரியாது, இனியாவது அந்த ஆணையத்தால் சிறுபான்மையினர் பிரிவில் வரும் தமிழ் சமணர்களுக்கு சிறுபான்மையினர் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் முழுமையாக சரியானவர்களுக்கு சென்று சேர்ந்திட வழிவகை செய்ய வேண்டும்

அதுபோல் ஆணைய உறுப்பினர் பொறுப்புக்கு வடமாநில ஜெயின் சமூகத்தவர்களுக்கு கொடுப்பதை விட காலம் காலமாய் தமிழ் மண்ணிலேயே வாழும் தமிழ் சமணர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கிட வேண்டும்” என்று கோரிக்கைகளும் தமிழ் சமணர்கள் தரப்பில் இருந்து வைக்கப்பட்டிருக்கிறது.

தனக்கு தரப்பட்டுள்ள பதவி குறித்து செய்தி வெளியிட்டுள்ள பீட்டர் அல்போன்ஸ், “தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு எனது நெஞசார்ந்த நன்றி. அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவனாக இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 29 ஜுன் 2021