மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

காவிரி உபரி நீர் சென்னைக்குக் கொண்டுவரப்படும்:  அமைச்சர் கே.என்.நேரு

காவிரி உபரி நீர் சென்னைக்குக் கொண்டுவரப்படும்:  அமைச்சர் கே.என்.நேரு

காவிரி ஆற்றின் உபரி நீர், சென்னை குடிநீர் தேவைக்காகக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நடைபெற்றது.

இதில், சென்னையில் குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தப்பட்ட இணைப்பைக் கண்டறிந்து துண்டிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுறுத்தினார். மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்துப் பரிசோதித்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் இந்த  கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு,   சென்னையின் மொத்த குடிநீர் தேவை 1150 எம்எல்டி ஆகும்.  குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. நாளொன்றுக்கு 240 முதல் 250 எம்எல்டி  குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

அதற்காக 400 எம்எல்டி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளோம்.  5,250 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம்  தொடங்கப்படவுள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் மிகை நீர் இருக்கும் பட்சத்தில் அதனைச் சென்னைக்குக் கொண்டு வரும் திட்டம்  போடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டிலே இவ்வாறு திட்டமிடப்பட்டது. வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வந்து பாலாற்றில் சேமித்து வைத்து, பாலாற்றிலிருந்து தேவைப்படும் போது ஏரிகளுக்குக் கொண்டு வந்து, அதைச் சுத்திகரித்து குடிநீர் வழங்கத் திட்டம் போடப்பட்டுள்ளது.  இது நடைமுறைக்கு வருவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

லாரிகளில் குடிநீரை விநியோகம் செய்வதை முழுவதுமாக நிறுத்தி குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும், சென்னையில் 8.60 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் முன்னுரிமை அளித்துத் தூர் வாரும் பணி நடந்து வருகிறது.  பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்படும்.  கழிவு நீர் குழாய்களை அடைப்பெடுக்கும் பணிக்காக 76 நவீன இயந்திரங்கள் 3 மாதத்துக்குள் கொண்டு வரப்படும்.

சென்னையில் 850 எம்எல்டி கழிவுநீர் வெளியேறுகிறது. இதில் 450 எம்எல்டி கழிவுநீர்  சுத்திகரிக்கப்படுகிறது.  மீதமுள்ள கழிவுநீரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதனால் கூவத்தில் கழிவு  நீர் கலப்பது குறையும். கூட்டுக்குடிநீர் திட்டங்கள் , பாதாளச் சாக்கடை திட்டங்கள் என 72 திட்டங்கள் 13 ஆயிரம் கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 29 ஜுன் 2021