மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

அமமுகவில் அடுத்த விக்கெட்!

அமமுகவில் அடுத்த விக்கெட்!

சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் படுதோல்விக்குப் பின் இதுவரை அக்கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கூட்டமோ ஆய்வோ நடைபெறவில்லை. அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும் 66 சீட்டுகளைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாகிவிட்டது.

இதற்கிடையே சசிகலா அதிமுக, அமமுக பிரமுகர்களுடன் பேசும் உரையாடல்கள் வெளியான நிலையில் டிடிவி தினகரன் இனி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி அமமுக பிரமுகர்களுக்குள் இருக்கிறது. ஆனால் மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட டிடிவி தினகரனை தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்நிலையில்தான் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பொன்.ராஜா, சந்தானகிருஷ்ணன், லட்சுமிநாராயணன் உள்ளிட்ட மூவர் நேற்று (ஜூன் 28) சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களை திமுகவில் சேர்க்க அமைச்சர் சேகர்பாபு மூலமாக ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் எடப்பாடியின் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலையிட்டு இவர்களை அதிமுகவுக்குக் கொண்டு போயிருக்கிறார்.

இப்படி இவர்கள் அதிமுகவுக்குச் சென்றுவிட்டார்கள் என்றால் அமமுகவின் சட்டமன்ற வேட்பாளர்களும் தினகரனுக்காக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுமான மானாமதுரை மாரியப்பன் கென்னடி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தனர்.

செந்தில்பாலாஜி ஏற்கனவே அமமுகவில் இருந்த பழக்கத்தின் காரணமாக அங்கிருந்து மேலும் பலரையும் திமுகவுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில்தான் சென்னை அமமுக மாவட்டச் செயலாளர்களை நேற்று எடப்பாடி அதிமுகவில் அதிரடியாக இணைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஜூன் 25 ஆம் தேதி இன்னுமொரு சுவாரஸ்யமும் நடந்திருக்கிறது. திமுகவில் இணைய செந்தில்பாலாஜி மூலம் ஸ்டாலினிடம் தேதி வாங்கிய மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரை அன்று மதியம் தனது இல்லத்துக்கு வருமாறும் அங்கே மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பிற்பகல் ஸ்டாலினைச் சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார் செந்தில்பாலாஜி. அதன்படியே அன்று பகல் 12 மணிக்கு சென்னையிலுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பங்களாவுக்கு சென்றிருக்கிறார் மாரியப்பன் கென்னடி.

‘உள்ளே ஒரு மீட்டிங்கில் இருக்கிறார் அமைச்சர். சில நிமிடங்கள் காத்திருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே சில நிமிடங்கள் காத்திருந்தார் மாரியப்பன் கென்னடி. சில நிமிடங்கள் கழித்து செந்தில்பாலாஜியை சந்தித்துவிட்டு வெளியே வந்திருக்கிறார் அமமுகவின் வேலூர் மண்டலப் பொறுப்பாளரும், முன்னாள் சோளிங்கர் எம்.எல்.ஏ.வுமான பார்த்திபன். செந்தில்பாலாஜி வீட்டில் மாரியப்பன் கென்னடியைப் பார்த்த பார்த்திபன் அதிர்ச்சியாகிவிட்டார். மாரியப்பனுக்கும் அதிர்ச்சி.

‘என்னன்ணே இந்தப் பக்கம்?’என்று அவர் கென்னடியிடம் கேட்க, ‘இன்னிக்கு திமுகவுல ஜாயிண்ட் பண்றேன்னே... என்று போட்டு உடைத்துவிட்டார் மாரியப்பன் கென்னடி. பதிலுக்கு நீங்க என்ன இந்தப் பக்கம் என்று பார்த்திபனிடம் கேட்க, ‘எங்க உறவினருக்கு ஒரு வேலை ஆக வேண்டியிருக்கு. அதான் நம்ம பழைய நண்பராச்சேனு செந்தில்பாலாஜிய பார்க்க வந்தேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் சோளிங்கர் பார்த்திபன்.

அவர் சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் ஜெயந்தி பத்மநாபன் செந்தில்பாலாஜியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரிடம் கென்னடி இந்த விஷயத்தைச் சொல்ல, ‘அவர் டார்ச்சர் தாங்கமுடியலைனுதான் நானே திமுகவுக்கு வர்றேன். அவரும் திமுகவுக்கு வர்றாரா என்ன?’ என்று ஆச்சர்யமாகக் கேட்டிருக்கிறார்.

இவ்வாறாக செந்தில்பாலாஜி தனக்குள்ள பழைய அமமுக தொடர்புகள் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலரை திமுகவுக்குக் கொண்டுவர கடுமையான முயற்சியில் இருக்கிறார்.

இந்த வகையில் அமமுகவின் மண்டலப் பொறுப்பாளரும் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனிடமும் செந்தில்பாலாஜி பேசிவிட்டார், விரைவில் அவரும் திமுகவில் ஐக்கியமாக இருக்கிறார் என்று தகவல் வந்து அமமுகவில் பரபரப்பானது.

இதுபற்றி பழனியப்பன் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “செந்தில் பாலாஜியை விட பழனியப்பன் சீனியர். அவர் எப்படி செந்தில்பாலாஜி மூலமாக முயற்சி செய்வார்? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அவர் இப்போது அமைதியாக யோசித்துக்கொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

ஏதோ நடக்கிறது....

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 29 ஜுன் 2021