மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

தென்றலில் இருந்து தொடங்கிய புயல்: திமுகவில் களையெடுப்பு!

தென்றலில் இருந்து தொடங்கிய புயல்: திமுகவில் களையெடுப்பு!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது.

இதுபற்றி கோவை தோல்வி - திமுகவின் விசாரணை மேலிடப் பொறுப்பாளர் யார்? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஜூன் 6ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் உள்ளடி வேலைகள், வேலுமணியோடு தொடர்பு, நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு என்று பல காரணங்களை சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின் முதல் நடவடிக்கையாக கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான தென்றல் செல்வராஜை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, பொள்ளாச்சி வேட்பாளரான வரதராஜனைப் பொறுப்பாளராக ஜூன் 28ஆம் தேதி அறிவித்துள்ளது திமுக தலைமை.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக கோவை மாவட்டத்தை 5 ஆக பிரித்து இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டப் பொறுப்பாளர்கள் 2020 ஆகஸ்டில் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளை உள்ளடக்கிய கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.

சட்டமன்றத் தேர்தலின்போது செல்வராஜ் தனக்காக பொள்ளாச்சி தொகுதியைக் கேட்டு வலியுறுத்தினார். ஏற்கனவே பொள்ளாச்சி நகர மன்றப் பொறுப்பாளராக இருந்தவர் என்பதால் பொள்ளாச்சியில் நன்கு அறிமுகமானவர் என்ற அடிப்படையில் அவர் அத்தொகுதியைக் கேட்டார். ஆனால், கட்சித் தலைமைக்கு கிடைத்த ரிப்போர்ட் வேறு மாதிரி இருந்ததால் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தாலும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. பொள்ளாச்சியில் திமுக சார்பில் டாக்டர் வரதராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக திமுக தொடர் போராட்டங்கள் நடத்திய நிலையில் இத்தொகுதியில் திமுகவுக்கே வெற்றி உறுதி என்ற நிலையே இருந்தது. ஆனால் தேர்தல் முடிவில் வெறும் 1,782 வாக்குகள் வித்தியாசத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் வெற்றி பெற்றார். இது தலைமைக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

“கோவை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தபோது அதில் தங்களுக்கு சீட் கிடைக்காத மாவட்டப் பொறுப்பாளர்களின் அலட்சியம் முக்கிய காரணியாக தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு முன்பே நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘சில மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் அவர்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் மாவட்டத்தில் நம் வேட்பாளர்களை வெற்றிபெற வைத்துக் கொண்டு வாருங்கள், உங்களுக்கு ஆட்சி அமைந்ததும் வேறு வகையான பதவிகள் தரப்படும்’ என்று ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே தெரிவித்திருந்தார். ஆனாலும் கூட கோவை மாவட்டத்தில் திமுக தலைவரின் பேச்சை மதிக்காமல் உள்ளடி வேலைகளில் தீவிரமாக இருந்தார்கள். அதனால்தான் மெல்லிய இழையில் கணிசமான தொகுதிகள் திமுகவின் கைவிட்டுப் போயின. அப்படிப்பட்ட தொகுதிகளில் ஒன்று பொள்ளாச்சி.

தேர்தல் முடிவுக்குப் பின் வேட்பாளராகத் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பொள்ளாச்சி வேட்பாளர் வரதராஜனும் தலைமையிடம் பகிர்ந்துகொண்டார். இந்த நிலையில்தான் கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, டாக்டர் கி.வரதராஜன் கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்கிறார்கள் திமுக தலைமைக்கு நெருக்கமான கோவை பிரமுகர்கள்.

முதல் அறிவிப்பு நேற்று வந்ததுமே கோவை திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மற்ற மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு பயம் வந்துவிட்டது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 25ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், ‘இன்னும் சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. திருத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஆனால் சில நாட்களில் ஸ்டாலினே திருத்த ஆரம்பித்துவிட்டார். இந்தத் திருத்தம் தொடரும்.

விரைவில் வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலிலும் இதே நிர்வாகிகள் இருந்தால் சட்டமன்றத் தேர்தல் போன்றே நடந்துகொள்வார்கள் என்ற அடிப்படையில்தான் இந்த நீக்கம் தொடங்கியிருக்கிறது. தென்றலில் இருந்து தொடங்கியிருக்கிறது திமுகவில் வீசப் போகும் புயல்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 29 ஜுன் 2021