மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

தூத்துக்குடி போல சேலத்திலும் சசிகலாவுக்கு ஆதரவுத் தீர்மானம்?

தூத்துக்குடி போல சேலத்திலும்  சசிகலாவுக்கு ஆதரவுத் தீர்மானம்?

சசிகலாவுக்கு எதிராக அதிமுகவின் ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதையடுத்து கணிசமான மாவட்ட அமைப்புகளில் தீர்மானம் இயற்றியுள்ளனர்.

சசிகலா கடந்த ஒரு மாதமாகவே அதிமுகவின் நிர்வாகிகள், தொண்டர்களுடன் போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டு வருகிறார், ஒவ்வொரு ஆடியோவிலும் இன்றைய அதிமுக பற்றிய தனது கருத்தையும், நான் கட்சியை நிச்சயம் சரிப்படுத்த வருவேன் என்றும், எம்.ஜி.ஆர். மறைவின் போது ஏற்பட்ட குழப்பத்தையே சரிசெய்த அனுபவம் இருக்கிறது என்றும் பேசி வருகிறார். இந்த ஆடியோ அரசியல் அதிமுகவுக்குள் விவாதத்தை அதிகரித்து வந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும், எடப்பாடி தொகுதியிலும் உள்ள நிர்வாகிகளுடனே பேச ஆரம்பித்தார். இதன் பிறகே சசிகலாவை எதிர்த்து முதன் முதலில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் எப்படி நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து, ‘சசிகலாவின் முதல் கூட்டம் எடப்பாடியில்’ என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். சேலத்தைத் தொடர்ந்து விழுப்புரம், மதுரை, கடலூர் என்று தொடர் தீர்மானங்கள் சசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜூன் 27) ஆம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அதிமுகவின் இன்னொரு தரப்பு நிர்வாகிகள் கூடி, ‘சசிகலாதான் பொதுச் செயலாளர்’ என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

விளாத்திகுளத்தில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ரூபம்.கே.வேலவன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா மீண்டும் வர வேண்டும், அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க இருப்பது வரவேற்க கூடியது, சசிகலாவுடன் பேசியவர்கள் நீக்கப்படுவது கண்டிக்கத்தக்கது, சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவோம்’ என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கும் இப்போதைய நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இதேபோல அடுத்தது அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகத் தீர்மானம் போடுவதற்கு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

“சேலம் மாவட்டத்தில் இதுவரை சுமார் பத்து நிர்வாகிகளோடு சசிகலா அலைபேசியில் பேசியிருக்கிறார். ஆனால் எடப்பாடி ராமகிருஷ்ணன் என்ற ஒருவர்தான் இதுவரை நீக்கப்பட்டிருக்கிறார். மற்றவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தொடர்ந்து போன் செய்து, ‘அண்ணனை வந்து பாருங்க. ஏன் இப்படி அவங்களோடல்லாம் பேசறீங்க. வருத்தம் தெரிவிச்சு ஒரு கடிதம் கொடுங்க’ என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். ஆனால் அதுவரை இப்படி யாரும் கடிதம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் சேலம் மாவட்டத்திலுள்ள பத்து தொகுதிகளிலும் உள்ள எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் தற்போதைய நிர்வாகிகளை ஒன்று திரட்டி தூத்துக்குடியை போல சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் இயற்றுவதற்கான வேலைகள் தீவிரமாக நடக்கின்றன.

சேலம் புறநகர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட ஒன்றிய செயலாளர்கள், சசிகலா தரப்பினருடன் பேசியிருக்கிறார்கள். அப்போது அவர்கள், ‘நாங்கள் இப்போது வெளிப்படையாக வரமுடியாது. எல்லா ஆதரவும் தருகிறோம்’என்று சொல்லியிருக்கிறார்கள். ஜூலை முதல் வாரத்தில் ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் நகரத்தில் இருந்தும் நிர்வாகிகளைக் கூட்டி சசிகலாதான் பொதுச் செயலாளர் என்று தீர்மானம் போடுவதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் எந்தெந்த நிர்வாகிகளுடன் இன்றைக்கு பேசப்பட்டது என்ற தகவல் சசிகலாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் சேலத்தில் எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்படும்” என்கிறார்கள் சசிகலாவுடன் அலைபேசியில் பேசிய நிர்வாகிகள்.

-வேந்தன்

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

திங்கள் 28 ஜுன் 2021