மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

நீட் தேர்வை காங்கிரஸ் திணித்ததா? எடப்பாடிக்கு அழகிரி பதில்!

நீட் தேர்வை காங்கிரஸ் திணித்ததா? எடப்பாடிக்கு அழகிரி பதில்!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி ஜூன் 26 ஆம் தேதி விடுத்த அறிக்கையில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்து இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்,

“இந்த குற்றச்சாட்டுக்குப் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாகப் பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்பத் திரும்பப் பிரச்சனையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அ.தி.மு.க. முயல்கிறது. நீட் தேர்வு குறித்து இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு அ.தி.மு.க.வினருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. தமிழகத்தில் நீட் தேர்வைத் திணித்தது பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களைக் கூற முடியும்” என்றவர் நீட் பற்றி விளக்கியுள்ளார்.

“உச்ச நீதிமன்ற ஆணையின் படி கடந்த 2013 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவக் கல்லூரி படிப்பிற்கு நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்தது. இந்த முடிவுக்கு எதிராக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 18 ஜூலை 2013 இல் நீட் தேர்வுகளை ரத்து செய்தது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு நடத்துவது அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் 2013 இல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் 11 ஏப்ரல் 2016 இல் சீராய்வு மனுத் தாக்கல் செய்தது. இதில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலமாக 2016 முதல் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்தியில் பா.ஜ.க.வும், மாநிலத்தில் அ.தி.மு.க.வும் தான் ஆட்சியிலிருந்தன.

நீட் தேர்வில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கு 20 மே 2016 இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த விலக்கு ஓராண்டிற்குப் பிறகு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நீட் தேர்வை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாயமாக்குகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு மக்களவையில் 18 ஜூலை 2016 இல் மசோதாவை நிறைவேற்றியது. அதேபோல, 1 ஆகஸ்ட் 2016 அன்று மாநிலங்களவையில் அதே மசோதா குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது”என்று குறிப்பிட்டுள்ளார் அழகிரி.

மேலும் அவர், “இந்தியா முழுவதும் நீட் தேர்வைக் கட்டாயமாக்குகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா - 2016 மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறுவதை எதிர்த்து அ.தி.மு.க. வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது ஏன் ? பா.ஜ.க. அரசின் சட்டபூர்வமான நீட் திணிப்பை எதிர்த்து வாக்களிக்க மக்களவையில் 39 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் கொண்ட அ.தி.மு.க.விற்கு துணிவில்லாமல் போனது ஏன்? மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது மசோதாவை ஆதரிப்பதற்கு சமமாகும். இது தமிழகத்திற்கு அ.தி.மு.க. செய்த பச்சை துரோகமாகும்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகத்தை எடப்பாடி பழனிசாமி ஆயிரம் அறிக்கைகள் விட்டாலும் மூடிமறைக்க முடியாது. எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மத்தியில் 2014 இல் இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு தமிழகத்தில் 2017 இல் எடப்பாடி ஆட்சியில் தான் நீட் தேர்வு முதல் முறையாகத் திணிக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது”என்று குறிப்பிட்டுள்ளார் அழகிரி.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 28 ஜுன் 2021