மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

மோடியிடம் துரைமுருகன் வைத்த வேண்டுகோள்!

மோடியிடம் துரைமுருகன் வைத்த வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 17ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது பிரதமரிடம் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிய 25 கோரிக்கைகளை உள்ளடக்கிய விரிவான மனுவை அளித்தார்.

முதல்வரின் டெல்லி பயணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டாலும் தமிழ்நாட்டின் திமுக எம்.பி.க்களிடையே முதல்வரின் பயணம் பற்றிய சில செய்திகள் இன்னும் விவாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இதுகுறித்து திமுக எம்.பி.க்கள் சிலரிடம் விசாரித்தபோது, “பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தபோது கூடவே திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு ஆகியோர் இருந்துள்ளனர்.

மோடியைச் சந்தித்து தமிழகத்துக்கான கோரிக்கை மனுக்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதுபற்றி பேச்சு சென்ற நிலையில் மோடியிடம் நேருக்கு நேராகப் பேசிய துரைமுருகன், ‘நீங்களும் நாங்களும் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாகப் போட்டியிட்டோம். தேர்தல் களத்தில் கடுமையாக மோதிக் கொண்டோம். இப்போது நாங்கள் ஜெயித்து தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக அரசாக உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம். பழையதை எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளாமல், நாம் நட்புறவோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்’ என்று பிரதமரிடம் கூறியிருக்கிறார். துரைமுருகனின் இந்த நேருக்கு நேர் வேண்டுகோளை எதிர்பாராத பிரதமர் மோடி, அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

பிரதமர் சந்திப்பு முடிந்ததும் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசோடு எப்படி தமிழக அரசின் நிலை இருக்கும் என்ற கேள்விக்கு, ’உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்று கூறினார். ஆனால் பிரதமர் மோடிக்கு எதிரிலேயே இதை தெரிவித்து விட்டார் துரைமுருகன்.

துரைமுருகன் முதல்வரை வைத்துக்கொண்டு பிரதமர் மோடியிடம் இப்படிப் பேசியது சரியா, தவறா என்றுதான் எம்.பி.க்கள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மோடியிடம் பணிவது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்திவிடும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், பிராக்டிகலான அரசியலை மூத்த அரசியல்வாதி துரைமுருகன் சாதுர்யமாக பிரதமரிடமே செய்திருப்பதாக சில எம்.பி.க்கள் சொல்கிறார்கள்” என்கிறார்கள் திமுக எம்.பி.க்கள்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 28 ஜுன் 2021