மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: அகில இந்திய அண்ணா தி.மு.க-வின் எதிர்காலம்

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: அகில இந்திய அண்ணா தி.மு.க-வின் எதிர்காலம்

ராஜன் குறை

தமிழில் ஒரு வார்த்தைக்கு முன்னால் ‘அ’ என்ற எழுத்து சேர்க்கப்படும்போது அது அந்தச் சொல்லுக்கு எதிர்மறையான பொருளைத் தருவது வழக்கம். ‘நீதி’ என்ற சொல்லுக்கு முன் ‘அ’ சேர்த்தால் ‘அநீதி’ என்ற சொல்லாக மாறும். அதுபோல பேரறிஞர் அண்ணாவின் பெயரின் முதல் எழுத்தாக ‘அ’ இருந்தாலும் அதிமுக என்பது தி.மு.க-வின் எதிர்ச்சொல்லாகவே மாறியது. அதற்கேற்றாற்போல அது திராவிடத்துடன் ‘அகில இந்திய’ என்பதையும் சேர்த்து அதன் எதிர்த்தன்மையை அதிகரித்துக்கொண்டது. ஆனாலும் அது தி.மு.க-வின் கொள்கைகளிலிருந்து முற்றாக மாறுபட்டால் மக்கள் ஆதரவை இழந்துவிடலாம் என்ற பிரச்சினையும் இருந்தது. அதனால் தி.மு.க-வுக்கு மாற்றாகவும் இருக்க வேண்டும்; அதற்கு எதிர்த்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் அது இயங்கத் தொடங்கியது. பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்து பெரும் வெற்றிகண்ட எம்.ஜி.ஆருக்கு இது இயல்பாகவே கூடி வந்தது எனலாம். எனவே அ.இ.அ.தி.மு.க ஒரு “மாற்று தி.மு.க” + “எதிர் தி.மு.க” ஆகிய இரண்டும்தான். எந்த பொருளில் அது மாற்று தி.மு.க-வாக இயங்கியது, எந்த பொருளில் அது எதிர் தி.மு.க-வாக இயங்கியது என்பது புரிந்தால்தான் அதன் எதிர்காலம் குறித்த ஐயப்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

மாற்று தி.மு.க

அகில இந்தியக் கட்சிகளுடன் கொள்ளும் உறவில் தமிழகத்தினுள் தன்னுடைய பிடியை விடாமல் இருப்பதில் அ.இ.அ.தி.மு.க ஒரு மாற்று தி.மு.க-வாக செயல்பட்ட தருணங்களைப் பார்க்கலாம். நெருக்கடி நிலைக்குப் பிறகான தேர்தலில் இந்திரா காந்தியுடன் எம்.ஜி.ஆர் கூட்டணி வைத்தாலும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் விலகிக் கொண்டார். பின்னர் ஜனதாவுடன் நெருங்க முயற்சி செய்தார். பின்னர் இந்திரா பதவிக்கு வந்தவுடன் அனுசரித்தார். இந்திராவுக்குப் பிறகு ராஜீவ் காந்திக்கு தூது விட்டார். அவருக்குத் தமிழகத்தில் தனக்கு இருந்த வெகுஜன செல்வாக்கு குறித்த நம்பிக்கை இருந்ததால் சுயேச்சையாக முடிவுகளை எடுத்தார். மாநில நலன்களை விட்டுக்கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை.

அவருக்குப் பின் ராஜீவ் காந்தியின் துர்மரணம் ஏற்படுத்திய அனுதாப அலையால் ஆட்சிக்கு வந்தாலும், ஜெயலலிதா, நரசிம்மராவைக் கண்டு அஞ்சவில்லை. பின்னர் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தார். அவர்கள் தி.மு.க அரசை கலைக்க மறுத்ததால் அத்வானிக்கு அம்னீஷியா என்று விளாசினார். சோனியாவுடன் சேர்ந்து பாரதீய ஜனதா ஆட்சியை கவிழ்த்தார். எந்த தேசிய கட்சி தலைவரும், பிரதிநிதியும் தன் இல்லத்துக்கு வந்துதான் சந்திக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார். லேடியா, மோடியா என்று சவால் விட்டார்.

வேறு எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் மாநில அரசியலின் பிடியைத் தளர விடாமல் தேசிய கட்சிகளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் கையாண்டார்கள் என்றே கூறலாம். அந்த விதத்தில் தி.மு.க-வுக்கு ஒரு மாற்றாக அ.இ.அ.தி.மு.க இருந்ததே தவிர, மாநில அரசியலின் முதன்மையை காவு கொடுத்து தேசிய கட்சிக்குப் பல்லக்குத் தூக்கிகளாக மாறவில்லை. அதனால் இட ஒதுக்கீடு, சத்துணவு, மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் பலவற்றிலும் தி.மு.க-வுக்குப் போட்டியாக அ.இ.அ.தி.மு.க இயங்கியது. மாநில அரசியலின் பிடி நழுவாமல் பார்த்துக்கொண்டது. இதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கை நம்பியே தேர்தலைச் சந்தித்தார்கள். மக்களை ஈர்க்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார்கள். ஆரோக்கியமான காரணங்களோ, பிற்போக்கான காரணங்களோ... ஆனால் மக்கள் ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததால் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும்கூட தேசிய கட்சிகளிடம் தங்களை அடகு வைக்கவில்லை. தி.மு.க-வுடன் அரசியலில் போட்டியிட வேண்டும் என்பதால் பல்வேறு கொள்கைகளில் தி.மு.க ஆட்சியின் தொடர்ச்சியாகவும் விளங்கினார்கள். திராவிட ஆட்சி என்ற அடைமொழிக்கு முற்றிலும் வெளியே போகவில்லை.

எதிர் தி.மு.க

தேசிய கட்சிகளின் தயவு இல்லாமலேயே பிற்போக்கு சிந்தனைகளைப் புகுத்தக் கூடியவர்களாகத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருந்தார்கள். இட ஒதுக்கீட்டில் பொருளாதார அம்சத்தைப் புகுத்த எம்.ஜி.ஆர் முயற்சி செய்தது முக்கிய உதாரணம். இது தனது அரசியலுக்கு சமாதி கட்டிவிடும் என்று புரிந்ததால் பின்வாங்கினார். அதேபோல ஜெயலலிதாவும் மதமாற்ற தடை சட்டம், கிராம கோயில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை என்று பார்ப்பனீய சட்டங்களைக் கொண்டுவந்தார். தேர்தல் தோல்விக்குப் பின் திரும்பப் பெற்றார்.

பொதுவாகவே தி.மு.க-வின் முற்போக்கு சமூக மாற்றக் கொள்கைகள் பிடிக்காத பிற்போக்கு மனோபாவம், கன்சர்வேடிவ் எனப்படும் மரபுவாத பார்வை கொண்டவர்கள், சாதீய பார்வை கொண்டவர்கள் எல்லாம் தேசிய கட்சிகளுக்குப் போகாமல் இருக்க அ.இ.அ.தி.மு.க ஒரு முகாம் அமைத்துத் தந்தது எனலாம். முக்குலத்தோர் ஆதரவு ஒரு நல்ல உதாரணம். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசியம், தெய்விகம் என்று இருந்தவர், அவருடைய செல்வாக்கால் முக்குலத்தோரிடம் தி.மு.க கணிசமாக வேரூன்ற முடியவில்லை. அவர் காலத்துக்குப் பிறகு எம்.ஜி.ஆரும், அதற்குப் பின் ஜெயலலிதாவும் பெருமளவு அவர்களை அ.இ.அ.தி.மு.க ஆதரவு தளமாக மாற்றிக்கொண்டார்கள். பல்வேறு சாதிகளிலும் பிற்போக்கு மனோபாவம் கொண்டவர்கள் தி.மு.க-வுக்குச் சரியான மாற்றாக அ.இ.அ.தி.மு.க-வைப் பார்த்து அதில் இடம்பெற்றார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தனி நபர் செல்வாக்கையே நம்பியதால் அவர்களால் யாரை வேண்டுமானால் அமைச்சராகவும், பிடிக்காவிட்டால் தூக்கியடிக்கவும் முடிந்தது.

தி.மு.க-வின் பகுத்தறிவு சார்பின் காரணமாக புனிதக் குறியீடுகளுடன் அந்தக் கட்சிக்கு ஒரு விலக்கம் இருந்தது. வெகுஜன மனநிலை இதை ஒரு நெருடலாக உணர்ந்தது. இன்றும் ஆங்கில தினசரியில் மண வாழ்வு இணையரைத் தேடுபவர்கள் “God fearing”- ஆக, கடவுளுக்கு அஞ்சுபவராக இருக்க வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கும் சமூகத்தில் கடவுளுக்கு அஞ்சாதவர்கள் மீது ஒரு விலக்கம் ஏற்படத்தானே செய்யும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர் மாங்காட்டுக்குப் போனால், இவர் மகாமகம், யாகம், ஜோசியம், பரிகாரம் என்று அமர்க்களப்படுத்திவிட்டார். எம்.ஜி.ஆர் பார்ப்பனர்களிடம் அணுக்கம் காட்டினார் என்றால், ஜெயலலிதா அவரே பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர். இந்திய வெகுஜன மனநிலையில் பார்ப்பன பூசாரி வர்க்கம் புனித குறியீட்டு சங்கிலியின் ஓர் அங்கம்.

இது போன்ற பல இன்னும் ஆராயப்பட வேண்டிய சமூக உளவியல் காரணங்களால் எம்.ஜி.ஆராலும், ஜெயலலிதாவாலும் மாற்று தி.மு.க ஆகவும், எதிர்-தி.மு.க ஆகவும் செயல்பட முடிந்தது.

எடப்பாடி பழனிசாமியின் சரிவு

ஏற்கனவே தேர்தல் களத்தில் நிறுவப்பட்ட மாற்று - எதிர் தி.மு.க கூட்டுப் பிம்பத்தால் எடப்பாடி பழனிசாமி தன் கூட்டணிக்கு நாற்பது சதவிகித வாக்குகளைப் பெற்று, 75 தொகுதிகளையும் வென்றுவிட்டார். அ.இ.அ.தி.மு.க மட்டுமே 33% சதவிகித வாக்குகளையும், 66 தொகுதிகளையும் பெற்றது. ஆனால் முன்னம் ஒரு கட்டுரையில் சொன்னபடி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது மட்டுமே தலைமைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்; ஓட்டுக்கள், தொகுதி பெறுவதெல்லாம் கட்சி அமைப்பு, வாக்காளர்களின் வழக்கங்கள், விருப்பு வெறுப்புகளால் நிகழ்வது. நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அனைவருமே வெற்றிக்கோட்டை நெருங்கிவிடுவார்கள். ஆனால் வெல்பவர் மட்டுமே விநாடியின் மிகச்சிறிய பகுதியில் முந்திச்சென்று வெற்றிக் கோட்டை தொடுவார். தலைமை என்பது அந்த தனித்துவம்தான். வெற்றி மட்டுமே அதை நிரூபிக்கும்.

பழனிசாமியின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் அவரால் பாரதீய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவர முடியுமா என்பதுதான். இதுவரை தமிழக அரசியலில் காணாத அளவு பாரதீய ஜனதாவுக்கு எடுபிடியாக ஆட்சி செய்துள்ளார் எடப்பாடி. உதாரணமாகப் பல்கலைக்கழகங்களில் அந்த கட்சியின் அப்பட்டமான ஊடுருவலை அனுமதித்துள்ளார். அவர் பாஜக-வின் பிடியிலிருந்து விலக ஏதாவது முயற்சி செய்தால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியைப் பிளந்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடுவார். இரட்டை இலை இல்லாமல் இவர்கள் தனிப்பட்ட செல்வாக்கால் அரசியல் கட்சியாக நிலைநிற்க முடியுமா என்பது அவர்களுக்கே மிகப்பெரிய ஐயம்தான். அப்படி மக்களைக் கவரக்கூடிய பேச்சாளரோ, போராளியோ, ஈர்ப்புமிக்கவரோ கிடையாது பழனிசாமி. பன்னீர்செல்வமும் அப்படித்தான். பணபலம் மட்டுமே இவர்களைத் தாங்கிப் பிடிக்கிறது. இவர்கள் பாரதீய ஜனதாவுக்குக் கட்டுப்பட்டு இருக்கும்வரை, மாற்று தி.மு.க என்ற பிம்பத்தை அ.இ.அ.தி.மு.க வேகமாக இழக்கும். அப்படி இழந்தால் அது வெறும் எதிர்-தி.மு.க-வாகச் சுருங்கும்போது பாரதீய ஜனதா கட்சி அதை விழுங்கிவிட நினைக்கும். இரட்டைத் தலைமை பிரச்சினை இருக்கும்வரை அ.இ.அ.தி.மு.க சரிவுப் பாதையிலிருந்து மீள முடியாது.

பாரதீய ஜனதா கட்சிக்கும் இது பெரிய பிரச்சினைதான். கட்சி என்ற அளவில் அதனால் சுலபமாக அ.இ.அ.தி.மு.க தலைவர்களை விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால் தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் அதற்குப் பிரச்சினை. தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர்களே மோடி பெயரை தங்கள் விளம்பரங்களிலிருந்து நீக்கி அம்மாவின் ஆதரவு பெற்றவர்களாகக் கூறிக்கொண்டதை மறக்க முடியாது. அதனால் அ.இ.அ.தி.மு.க-வின் சரிவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பாஜக கனவு காண முடியாது. தி.மு.க-வை எதிர்க்க அ.இ.அ.தி.மு.க-வை அரணாகப் பயன்படுத்துவதே அதற்கு நல்லது. அப்போது அ.இ.அ.தி.மு.க வலுப்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்வது, யாரைத் தலைவராக்குவது என்பதுதான் இப்போது பிரச்சினை.

தீர்வு என்ன?

அ.இ.அ.தி.மு.க கட்சி விதிகளின்படி அடிப்படை உறுப்பினர்கள் ஓட்டளித்து புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதுதான் ஒரே வழி. அந்தத் தேர்தலில் சசிகலாவையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும். ஏனெனில் ஜெயலலிதா இறந்த பிறகு மொத்த பொதுக்குழுவும் அவரை தாற்காலிக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்து அவர் காலில் விழுந்தார்கள் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அவர் சிறை சென்ற பிறகு பாரதீய ஜனதாவின் தூண்டுதலால் அவரை பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கிவிட்டு, பொதுச்செயலாளர் பதவியையே நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இவர்கள் பதவி ஏற்றார்கள். இதையெல்லாம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது என்பது வெளிப்படை. கட்சியின் முழு அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

எனவே, ஜெயலலிதா மறைந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு அன்றைய அவைத்தலைவர் மதுசூதனன் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவிப்பதும், கட்சி அடிப்படை உறுப்பினர் பட்டியலை அறிவித்து மாவட்டம் தோறும் தேர்தல் நடத்துவதும், அதனடிப்படையில் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதும்தான் ஒரே வழி. தேர்தலைத் தவிர்க்க வேண்டும் என்றால் அனைவரும் பேசி ஒரே ஒரு வேட்பாளரை நிற்கவைத்து, போட்டியின்றி தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், சசிகலாவை இணைத்துக்கொள்ளாத எந்தத் தீர்வும் நிரந்தரத் தீர்வாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஜெயலலிதாவுடன் இணைபிரியாமல் முப்பதாண்டுகள் வாழ்ந்தவரை, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவதில் ஜெயலலிதாவுடன் பங்கேற்றவரை கிள்ளுக்கீரையாக அப்புறப்படுத்த முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

இதெல்லாம் நடந்து மீண்டும் ஓர் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் உருவாகி, பாரதீய ஜனதாவின் பிடியிலிருந்து கட்சியை விடுவித்து வெகுஜன ஆதரவைப் பெற்றால்தான் அதனால் தேர்தல் களத்தில் தி.மு.க-வை வெல்ல முடியும்.

இல்லாவிட்டால் அ.இ.அ.தி.மு.க டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்குவதைப் போல மெல்ல, மெல்ல மூழ்கி மறைவதைத்தான் அடுத்த பத்தாண்டுகளில் பார்க்க வேண்டியிருக்கும். மாநில அரசியலின் தனித்துவத்துக்கு அது நல்லதா என்பதும் ஒரு கேள்விதான்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

திங்கள் 28 ஜுன் 2021