27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்!

politics

தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி முதல், 27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு, கூடுதல் தளர்வுகள் அளித்து ஜூலை 5ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், வகை மூன்றில் உள்ள நான்கு மாவட்டங்களில் நகை, துணிக்கடைகளை திறக்கவும், வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதல்வர், கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக அமலில் உள்ள, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை, ஜூலை 5ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவில், வகை இரண்டில் குறிப்பிட்டுள்ள, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 27 மாவட்டங்களில், வரும் 28ஆம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் உள்ள 19,290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 365 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 513 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,153 பேருந்துகள் என மொத்தமாக 9,333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து உரிய வழிமுறைகளைப் பின்பற்றி இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணம் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *