மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

கனிம திருட்டு: அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு!

கனிம திருட்டு: அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு!

கனிம திருட்டை முற்றிலும் தடுக்கவும், அனுமதியின்றி செயல்படும் குவாரிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் பணி ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் இந்த நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரையில் கனிம வருவாய் ரூ.161 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இனிவரும் மாதங்களில் அதிக வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தருமபுரி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக பொது ஏலத்துக்குக் கொண்டு வந்து அரசுக்கு மேலும் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டலப் பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு, அதிக அளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டி தருமாறும், உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளைக் கண்டறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சட்ட விரோதமாகக் கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அந்தப் பகுதிகளை கள ஆய்வு மேற்கொண்டு, தேவைப்படின், ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மகி மண்டலம், ரெண்டாடி, கொடக்கல் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் தொடங்கப்படவுள்ள கருப்பு கிரானைட் குவாரி பணிகளை விரைந்து தொடங்க உரிய நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும். தற்போது இயக்கத்தில் உள்ள குவாரிகள், சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தியினை அதிகரித்து கூடுதல் வருவாய் ஈட்டி லாபகரமாக இயக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். புதிய கனிம வளப்பகுதிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு சுரங்க குத்தகையை தரவும் அதனை லாபகரமாகச் சந்தைப்படுத்தவும் அலுவலர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் 238 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் மேக்னசைட் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் கச்சா மேக்னசைட், சுழற்சூளைப் பிரிவு மற்றும் நிலைச்சூளைப் பிரிவு ஆகிய இரு தொழிற்சாலைகளில் பல்வேறு தரங்களாக முழு எரியூட்டப்பட்ட மேக்னசைட், மித எரியூட்டப்பட்ட மேக்னசைட் பொருட்களாகத் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

செயல்படாமல் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையை சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

ஞாயிறு 27 ஜுன் 2021