மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

50 லட்சம் வேலைவாய்ப்பு, இலவச பேருந்து : பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை!

50 லட்சம் வேலைவாய்ப்பு, இலவச பேருந்து : பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை!

2021 - 2022 ஆம் ஆண்டுக்கான பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது.

2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 13 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளை பாமக வெளியிட்டு வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், நடப்பாண்டு முதல் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்போவதாக ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. அதை கருத்தில் கொண்டு தமிழக அரசுக்கு வழிகாட்டும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

2021 - 22ஆம் ஆண்டை வேளாண்மை மற்றும் வேளாண் கல்வி கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பாண்டாக அறிவிக்கப்படும்.

காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் நெல் மூட்டைகளை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா (Rice Technology Park) அமைக்கப்படும்.

வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,100 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும். நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி செலவிடப்படும்.

வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.7,000 கோடி செலவிடப்படும். பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.13,650 கோடி செலவிடப்படும்.

50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிறு&குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.16,000, இரு ஏக்கருக்கு ரூ.26,000, 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்போருக்கு ரூ.36,000 என்ற அளவில் மானியம் கிடைக்கும்.

5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அடையாள உதவியாக ரூ.20,000 வழங்கப்படும்.

கூட்டுறவு வங்கிகள் தள்ளுபடி செய்த உழவர்களின் பயிர்க்கடனை ஈடுகட்டுவதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.5,000 கோடி தவிர மீதமுள்ள ரூ.7,110 கோடியும் நடப்பாண்டுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். இத்தொகைக்கான வட்டியாக ரூ.248.85 கோடி கூடுதலாக அரசு வழங்கும்.

நடப்பாண்டில் ரூ.14,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன்களை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி எதுவும் வசூலிக்கப்படாது. அதுமட்டுமின்றி, தவணை தவறாமல் கடனை செலுத்தும் உழவர்களுக்கு 10%, அதிகபட்சமாக ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.12,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து 3 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய ரூ.1,500 கோடி வரும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடியை வட்டியில்லாக் கடனாக வழங்கும்.

இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, அவற்றுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நிரந்தர தீர்வுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்க வகை செய்யப்படும்.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000, கரும்புக்கு ரூ.90,000, நிலக்கடலைக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும். பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்

தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தில் மாநில நிதித்துறை, வேளாண்துறை, உணவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஊழவர் சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு இலாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.

2021-22 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.3,000 என நிர்ணயிக்கப்படும்.

வேளாண் பணிகளுக்காக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆக உயர்த்தப்படும்.

வேளாண் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் சிறிய பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஊதியத்தை அரசு வழங்கும்.

தமிழ்நாட்டில் அனைத்து சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் அரை கிலோமீட்டருக்கு ஒரு சிறிய தடுப்பணை அமைத்து, அவற்றில் 200 அடி ஆழத்திற்கு நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கப்படும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கோடைக்கால சாகுபடிக்கு உதவியாக இருக்கும்.

ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம்

2021-22 ஆம் ஆண்டு முதல் 2024-25 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 4 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்

கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறுமையைப் போக்குவதற்காக 69 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட திட்டம் தான் காவிரி& குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். காவிரி, அக்கினியாறு, கோரையாறு, பாம்பாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை ரூ.14,400 கோடி செலவில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் ரூ.6,941 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும்.

அத்திக்கடவு -அவினாசி திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அத்திக்கடவு & அவினாசி திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும்.

புதிய பாசனத் திட்டங்கள்

தாமிரபரணி & நம்பியாறு இணைப்புத் திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைப்பதன் மூலம், வீணாகும் தண்ணீரை தேக்கி ராதாபுரம், நாங்கு நேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு சென்று பாசனத்திற்காக பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

கொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் 71% நிறைவடைந்துள்ளன. அடுத்த 6 மாதங்களில் இப்பணிகள் முடிவடையும். கொள்ளிடம் தடுப்பணை பகுதியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்த அனுமதிக்கப்படாது.

மாவட்டம் தோறும் வேளாண்மை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையும் வேளாண் பொருட்களைச் சார்ந்து இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். உற்பத்தியில் தொடங்கி, மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி வரை அனைத்துப் பணிகளும் இங்கு நடைபெறும். இதன் மூலம் அப்பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

வேளாண் சட்டங்கள் - அரசின் நிலை

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக உழவர் அமைப்புகளின் தலைவர்களை மத்திய அரசு நேரடியாக அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

மணல் குவாரிகள் மூடல்

தமிழ்நாட்டில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும். அதனால் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எம்.சாண்ட் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதற்கு சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்படும்.

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்ட யூகலெப்டஸ் மரங்களை வளர்க்க தடை விதிக்கப்படும்.

அழிந்து வரும் கற்பக விருட்சமாம் பனை மரங்களை வெட்டத் தடை விதிக்கப்படும்.

நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் - 2 புதிய அமைச்சகங்கள்

வேளாண் துறை 3ஆக பிரிக்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும். வேளாண்மை சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் முதலமைச்சர் தலைமையில் வேளாண் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும். இதில் வேளாண்மை சார்ந்த 7 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள்.

டெல்லி, பெங்களூருவில் செயல்படுவது போன்று திருச்சியில், சஃபல் சந்தை (safal market) தொடங்கப்படும். இதன் மூலம் விளைப்பொருட்களை மின்னணு ஏலமுறையில் விற்பனை செய்யப்படும்.

இலவச பேருந்து வசதி

ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும்.

உழவர்கள் தாங்கள் விளைவித்தப் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக, இரவு 8 மணிக்குப் பிறகு அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்புச் சத்து குறைந்த இறைச்சியான முயல் கறியை பிரபலப்படுத்தி, அதிக கொழுப்புச் சத்து மிகுந்த ஆடு, மாடு இறைச்சியின் பயன்பாடு குறைக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவீன மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்படும். உழவர்கள் தாங்கள் விரும்பும் மாடுகள் எண்ணிக்கையில் வாங்கி மாட்டுப் பண்ணைகளில் ஒப்படைத்து விட்டால், அவர்களே 1000 மாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்து அதில் கிடைக்கும் பாலினை உள்நாட்டுத் தேவைக்கு போக மீதமுள்ளதை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் அதிக வருவாய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

உழவர்களின் நிலங்களில் அவர்களின் நில அளவுக்கு ஏற்றாற்போல் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் குட்டைகள் தோண்டப்பட்டு, மீன் வளர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பசுமைத் தமிழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என 100 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

ஞாயிறு 27 ஜுன் 2021