மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

சிவசங்கர் தாதா: கலங்கவைக்கும் மாணவிகளின் வாக்குமூலங்கள்... கைது ஆகப் போகும் ஆசிரியைகள்!

சிவசங்கர் தாதா:  கலங்கவைக்கும் மாணவிகளின் வாக்குமூலங்கள்... கைது ஆகப் போகும் ஆசிரியைகள்!

கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளையும், சிஷ்யைகளையும் தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியதாக சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ச்சப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். உடல்நிலை சரியில்லை என்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் சிகிச்சை பெற்ற சிவசங்கர் பாபா நேற்று (ஜூன் 26) மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையே தாதா வழக்கில் தப்பும் பெண்கள்; மாணவிகள் ஆவேசம் என்ற தலைப்பில் ஜூன் 22ஆம் தேதி மின்னம்பலத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதாவது சிவசங்கர் பாபாவோடு தொடர்புடைய சுஷ்மிதா, கர்ணா, நீரஜா ஆகிய மூன்று பெண்களை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸார் அவர்களில் சுஷ்மிதாவை மட்டும் கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். ஆனால், சுஷில் ஹரி பள்ளியில் கம்ப்யூட்டர் டீச்சர் கருணா, ஹாஸ்டல் வார்டன் நீரஜா ஆகியோரை மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வருமாறு கேட்டுக்கொண்டு திருப்பி அனுப்பிவிட்டனர். சுஷ்மிதாவின் குற்றத்துக்கு இணையான அதாவது சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை அனுப்பும் குற்றச்சாட்டுகள் கருணா, நீரஜா ஆகியோர் மீது கூறப்பட்டும் அவர்கள் வெளியே அனுப்பப்பட்டது ஏன் என்று மாணவிகள் ஆவேசப்படுவதை அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

மின்னம்பலம் செய்தி, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாரிடையே விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. உடனடியாக வழக்கின் விசாரணை பொறுப்பு அதிகாரியான சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார், விசாரணை அதிகாரியாக இருக்கும் டிஎஸ்பி குணவர்மனிடம் இது தொடர்பாகப் பேசினார்.

புகார் கொடுத்த மாணவிகள், பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆகியோரிடம் உடனடியாக ‘164’ வகை வாக்குமூலங்களைப் பெறுமாறும், அந்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ள யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில்தான் ஜூன் 23ஆம் தேதி முதல் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் நீதிபதி அம்பிகா முன்பு மாணவிகளை நேர் நிறுத்தி போலீஸார் அவர்களிடம் இருந்து ஸ்டேட்மெண்ட் வாங்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார்கள். அதற்கு முன் சட்டப்படி அந்த மாணவிகளுக்கு மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதாவது வாக்குமூலம் பெறும் முன்பு அவர் நல்ல உடல்நிலையில், ஆரோக்கியமான மனநிலையில்தான் இருக்கிறாரா என்பதை அறிய பல கட்ட மருத்துவப் பரிசோதனை நடத்துவார்கள். அதன் பிறகே அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்படும்.

இதுபற்றி சிபிசிஐடி தரப்பில் விசாரித்தோம்.

“தாதா வழக்கில் தப்பிக்கும் பெண்கள் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியான கட்டுரையால் இந்த வழக்கு வேகமெடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் எஸ்பி விஜயகுமார் மாணவிகளின் வாக்குமூலங்களைப் பெறும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்.

ஒவ்வொருவரும் வாக்குமூலம் தர 90 நிமிடங்கள் நேரம் எடுத்துக்கொண்டார்கள். இவ்வாறு கொடுத்த மாணவிகளின் வாக்குமூலம் நீதிபதியைக் கலங்க வைத்துள்ளது. ஒரு மாணவி, ‘என்னை மூன்று முறை பாபாவின் சொகுசு பங்களாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே என் ஆடைகளைக் களைந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்கள். அப்போது நான் கதறி அழுதும் என்னை விடவில்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும், தங்களை அந்த சொகுசு பங்களாவுக்கு கம்ப்யூட்டர் டீச்சர் கருணா அழைத்துச் சென்றார் என்றும், வேறு யார் யார் அழைத்துச் சென்றார்கள் என்பதையும் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் மாணவிகள்.

தீபா என்ற டீச்சர், ‘பாபாதான் கடவுள், அவரிடம் நம்மை ஒப்படைத்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்’ என்று சொல்லி அந்த சொகுசு பங்களாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறியிருக்கிறார் ஒரு மாணவி.

ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவிகள் நீதிபதி முன்பு கொடுத்த வாக்குமூலத்தில், ‘நாங்கள் ஹாஸ்டலில் இரவு நன்றாக தூங்கிக்கொண்டிருப்போம். திடீரென வார்டன் நீரஜா எங்களை எழுப்புவார். அந்த இரவிலும் உடல் நடுங்க எங்களை குளிக்கச் சொல்லுவார். குளிரில் வெடவெடக்க எங்களை அப்படியே பாபாவிடம் அழைத்துச் செல்லுவார்’ என்று கூறியிருக்கிறார்கள்.

முக்கியமான இந்த வாக்குமூலங்கள் நீதிபதி முன்பு பதியப்பட்டுள்ள நிலையில்தான் சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை மூளைச் சலவை செய்து அனுப்பியதாகப் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட உள்ளனர்.

இதை உணர்ந்தோ என்னவோ பாரதி ராமநாதன், ஜானகி சீனிவாசன், தீபா, கருணா முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

புகார் கொடுத்த, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களும் சிபிசிஐடி போலீஸுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே இந்த வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் இருக்கும்" என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள் வட்டாரத்தில்.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

ஞாயிறு 27 ஜுன் 2021