மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

ஓ.பி.ரவீந்திரநாத் - அன்புமணி - அண்ணாமலை: தமிழகத்தில் இருந்து ஒன்றிய அமைச்சர்கள் ரேஸ்!

ஓ.பி.ரவீந்திரநாத் - அன்புமணி - அண்ணாமலை: தமிழகத்தில் இருந்து ஒன்றிய அமைச்சர்கள் ரேஸ்!

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து அடுத்த மக்களவைத் தேர்தல் என்று அடுத்தடுத்து வருவதால் ஒன்றிய (மத்திய) அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்ய உத்தேசித்திருக்கிறது பாஜக மேலிடம்.

அதாவது ஒன்றிய அமைச்சர்களில் குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவரவர் மாநிலங்களில் தீவிர கட்சிப் பணியாற்றுவதற்காக அனுப்பி வைப்பது என்றும், அவர்களுக்குப் பதிலாக வேறு சிலரை அமைச்சர்கள் ஆக்குவது என்றும் பாஜக மேலிடத்தில் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும்போது தமிழ்நாட்டில் இருந்தும் சிலர் அமைச்சர்களாகும் வாய்ப்பிருக்கிறது. அதை ஒட்டி தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை அடுத்தடுத்த தேர்தல்களுக்கும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறது பாஜக. இன்னொரு பக்கம் ஒன்றிய அமைச்சரவையில் இடம்பிடிக்க அதிமுக, பாஜகவின் பிற கூட்டணிக் கட்சிகளில் சிலர் முயற்சியைத் தீவிரமாக்கியுள்ளனர்.

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக மாபெரும் வெற்றிபெற்று பிரதமரானார் மோடி. ஆனால் தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக பங்குபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 39 இடங்களில் ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது. தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை வென்றார்.

அந்தத் தேர்தலில் ஓ.பி.எஸ்ஸின் மகன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டபோதே, ‘ஒன்றிய அமைச்சரவையில் தன் மகனை இடம்பெறவைக்கத்தான் தேர்தலில் அவரை களமிறக்குகிறார்’ என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓபிஆர் வெற்றி பெற்ற பின்பு, அதிமுகவினரிலேயே வெகுவாக மோடி புகழ் பாடுபவராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். ஒன்றிய அமைச்சரவையில் தன் மகன் இடம்பிடிக்க ஓபிஎஸ் முயற்சி செய்தபோது, ‘சீனியர்கள் தம்பிதுரை, வைத்திலிங்கம் போன்றவர்கள் இருக்கும்போது ஜூனியரான ரவீந்திரநாத் எப்படி அமைச்சராக முடியும் என்று எடப்பாடி அப்போதே கட்டை போட்டார்’ என்றும் பன்னீர் ஆதரவாளர்கள் குறை கூறினார்கள். யாருக்கு அமைச்சர் பதவியைப் பெறுவது என்ற போட்டியில் அதிமுக இப்போதைக்கு ஒன்றிய அமைச்சரவையில் பங்கு பெறுவதில்லை என்று முடிவெடுத்தது.

இதனால் நொந்துபோயிருந்த ஓபிஎஸ், இப்போதைய வாய்ப்பைப் பயன்படுத்த தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார்.

“சசிகலாவை எதிர்த்து ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து உங்கள் பேச்சைதான் கேட்டு வருகிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலா, டிடிவி தினகரனை இணைத்து அதிமுக கூட்டணியை வலுவாக்க வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால், எடப்பாடி பேச்சைக் கேட்டு நீங்கள் அதை செய்யவில்லை. அதற்கும் நான் சம்மதித்தே தேர்தலைச் சந்தித்தேன். இப்படி எல்லா வகையிலும் உங்களுக்கு இணக்கமாகவே இருக்கும் நிலையில் என் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கண்டிப்பாக தர வேண்டும். இப்போது கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்துவிட்டதால் அதிமுகவுக்குள் போட்டியும் பெரிதாக இல்லை. ஓபிஆரை ஒன்றிய அமைச்சர் ஆக்கினால் திமுக அரசுக்கு டஃப் பைட் கொடுத்து தமிழகத்தில் நாம் அரசியல் செய்ய முடியும்’ என்று பாஜக மேலிடத்தோடு தொடர்ந்து பேசி அழுத்தம் கொடுத்து வருகிறார் ஓபிஎஸ். இந்த காரணத்துக்காகத்தான் அவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பதவியையும் சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார் என்கிறார்கள் பன்னீரைச் சுற்றியுள்ளவர்கள்.

அதிமுகவில் இப்படி என்றால் பாமகவும் ஒன்றிய அமைச்சரவையில் அன்புமணிக்கு மீண்டும் இடம் கிடைக்க பலத்த முயற்சியில் இருக்கிறது. அன்புமணி ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். தற்போதும் அவர் ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு ஆலோசனைகள் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார். மீண்டும் சுகாதாரம் இல்லாவிட்டாலும் கேபினட் அந்தஸ்தில் அமைச்சராக வேண்டும் என்பதுதான் பாமகவின் இலக்கு. ஆனால் பாஜகவோ, பாமகவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டால் கேபினட் பொறுப்பை விட இணை அமைச்சர் அல்லது தனிப் பொறுப்பை வழங்குவதிலேயே முதன்மையான சாய்ஸுக்காக வைத்திருக்கிறது. இதனால் பாமகவின் டாப் லெவலில் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிமுக, பாமக போன்ற கூட்டணிக் கட்சிகளின் நிலை இப்படி என்றால்... அடுத்து வரப் போகும் ஒன்றிய அமைச்சரவை மாற்றத்தில் தமிழகத்தில் பாஜகவுக்கு முக்கியப் பங்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடியின் முதன்முறை ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் பிரதிநிதியாக மத்திய இணை அமைச்சராக இருந்தார். 2019 தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. கன்னியாகுமரியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் கொரோனா தொற்றால் காலமான நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலோடு குமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. அந்த இடைத்தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்த பாஜக, “இங்கே மீண்டும் காங்கிரஸ் ஜெயித்தால் ஒரு எம்.பி மட்டும்தான். ஆனால் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் ஜெயித்தால் தமிழகத்துக்கு ஒரு அமைச்சர் கிடைப்பார்” என்று வாக்குறுதியை முன் வைத்தது. ஆனபோதும் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தே குமரி மக்களவைத் தேர்தலில் ஜெயித்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜகவுக்கு ஒன்றிய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டால் அது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலையாக இருக்கலாம் என்றும் பாஜக வட்டாரங்களில் கூறுகிறார்கள். தற்போது எம்.பி அல்லாத அவரை ஒன்றிய அமைச்சராக்க வாய்ப்பிருந்தால் தமிழகத்தில் இருந்தோ அல்லது வேறு மாநிலத்தில் இருந்தோ ராஜ்ய சபா எம்.பி ஆக்கிக் கொள்ளலாம் என்று கருதுகிறது பாஜக மேலிடம்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில் எதிரணியான அதிமுக - பாஜக அணி வெறுமனே அரசியல் செய்து பயனில்லை என்றும் அதனால் ஒன்றிய அமைச்சர்கள் என்னும் பதவியோடு அரசியல் செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறது பாஜக மேலிடம். இதன் அடிப்படையில் அடுத்த ஒன்றிய அமைச்சரவை மாற்றத்தில் தமிழ்நாட்டுக்குச் சில இடங்கள் கிடைக்குமென்கிறார்கள் பாஜக மேலிடப் புள்ளிகள்.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 27 ஜுன் 2021