மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

நீட் நடைபெறுமா? நடைபெறாதா?: ஈபிஎஸ் கேள்வி

நீட் நடைபெறுமா? நடைபெறாதா?: ஈபிஎஸ் கேள்வி

நடப்பு கல்வியாண்டுக்கு நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. தற்போது ஆட்சி அமைத்துள்ள நிலையில், 16ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

அதுபோன்று தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதனிடையே, “இந்த நிமிடம் வரை நீட் தேர்வு அமலில் இருப்பதால் தேர்வுக்குத் தயாராவது மாணவர்களது கடமை” என்று குறிப்பிட்டார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “ நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நான் பேசும்பொழுது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில், நீட்டின் பின் விளைவுகளை அறிவதற்கு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், கமிஷனின் பரிந்துரைகளின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பதில் அளித்தார்.

அதைத்தொடர்ந்து, நான் பேரவையில் நேரடியாக, இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினேன். நீட் இருப்பின் மாணவர்கள் இதற்குத் தயார் ஆக வேண்டுமா? வேண்டாமா? என்றும் கேட்டபொழுது, முதலமைச்சர் இதற்கு நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.

தற்போதைய அரசின் இந்த முடிவால், நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்று புரியாமல் தவித்து வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்துள்ள நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

சனி 26 ஜுன் 2021