rடெல்டா பிளஸ்: தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை!

politics

தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக தலைமைச் செயலாளருக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டிலுள்ள 12 மாநிலங்களில் 45,000 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 22 பேரும், தமிழ்நாட்டில் 9 பேரும், மத்திய பிரதேசத்தில் 7 பேரும், கேரளாவில் 3 பேரும், பஞ்சாப், ஹரியானாவில் தலா இருவரும், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அதிவேகமாக பரவுதல், நுரையீரலை கடுமையாக பாதித்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல் ஆகிய பண்புகள் டெல்டா பிளஸ் வகை கொரோனாவுக்கு உண்டு.

அதனால், பரிசோதனை மேற்கொள்ளுதல், தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பாதிப்புள்ள மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ள குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *