மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

ஐவர் குழுவுக்கு வரவேற்பும் – ஒரு விமர்சனப் பார்வையும்!

ஐவர் குழுவுக்கு வரவேற்பும் – ஒரு விமர்சனப் பார்வையும்!

அ.குமரேசன்

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தமிழகத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பொதுவாக வரவேற்கத்தக்கவையாகவும், பிற மாநிலங்கள் பின்பற்றத்தக்கவையாகவும் இருக்கின்றன. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி நிறைவேற்றப்பட்டு வரும் பெண்களுக்கான இலவச நகரப் பேருந்துப் பயணம், கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மாற்றுபாலினத்தவருக்கும் அதன் விரிவாக்கம், கடந்த ஆட்சியில் போராட்டங்கள் நடத்தியோர் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகள் விலக்கம் உள்ளிட்ட உதாரணங்களைச் சொல்லலாம்.

அதேவேளையில், சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் உரையின் வாயிலாக அறிவிக்கப்பட்ட, வெகுவாகப் பாராட்டப்படுகிற, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு குறித்து மாற்றுக் கருத்துகள் முன்வந்துள்ளன. கடந்த ஆட்சியில் மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு என்று மாற்றியமைக்கப்பட்ட மாநில திட்டக்குழு பேராசிரியர் ஜெயரஞ்சன் தலைமையில் அமைக்கப்பட்டதில் பிரச்சினை இல்லை. ஏற்கெனவே இருந்து வந்திருக்கிற, அரசுக்குக் கொள்கை ஆலோசனைகளை மட்டுமே வழங்குவதற்கான அந்தக் குழுவைப் போல பிற மாநிலங்களிலும் இருக்கின்றன. மாநில உரிமைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் திமுக அரசின் நிலைப்பாடுகளோடு ஒத்திசைந்து பணிகளை மேற்கொள்கிற அமைப்பாகவும், ஏதோவொரு வகையில் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதாகவும் அந்தக் குழு இருக்கிறது.

பொருளாதார ஆலோசனைக்காக...

அதைப் போல முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழுவைப் பார்க்க முடியவில்லை என்று சில வல்லுநர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கூறுகிறார்கள். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நரேந்திர மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், தமிழகத்திலேயே ஐஏஎஸ் அதிகாரியாகப் பல ஆண்டுகள் பணியாற்றியவரான எஸ்.நாராயணன், பிரான்ஸ் நாட்டவரும் பொருளாதார ஆய்வுக்கான நோபல் விருது பெற்றவருமான எஸ்தர் டஃப்ளோ, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பொருளாதார நிலைமைகளில் அக்கறை கொண்டவருமான ஜான் ட்ரேஸ் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடைய நேர்மையான பணிகள், பரந்த அனுபவங்கள், வளர்ச்சி அக்கறைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்தக் குழுவுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஏற்கெனவே அரசு நிர்வாகத்தில் முதலமைச்சருக்கு உதவிட, தமிழக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கடந்த காலச் செயல்பாடுகள், தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத துணிவு போன்றவற்றுக்காக அந்த நடவடிக்கையும் பாராட்டுப் பெற்றது. அதைப் போன்றதல்ல இந்தப் பொருளாதார ஆலோசனைக்குழு.

விமர்சிக்கிறவர்கள் இரண்டு முக்கியமான கருத்துகளை முன்வைக்கிறார்கள். முதலாவது, ஏற்கெனவே இயங்கிவருகிற சட்டபூர்வமான நிறுவனக் கட்டமைப்புகளை இது பின்னுக்குத் தள்ளுவதாக இருக்கிறது என்கிறார்கள். டாட்டா பொருளாதார ஆய்வு நிறுவன பேராசிரியர் ஆர்.ராம்குமார் தமது முகநூல் பதிவில், “தற்போதைய கொரோனா அனுபவம் நமது திட்டமிடல் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதைத்தான் வலியுறுத்துகிறது. அதற்கு மாறாக, இப்படிப்பட்ட குழு அமைக்கப்படுவது கொள்கைக்கு இடையூறாகவும், சட்டபூர்வ அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டை மீறுவதாகவும் அமைந்துவிடக்கூடும்” என்கிறார்.

ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக பூர்வமாகவும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு உகந்ததாகவும் இருந்த திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, நிதி ஆயோக் அமைப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று சட்டபூர்வ கட்டமைப்புகளைப் பின்னுக்குத் தள்ளுகிற வழியில் தமிழக திமுக அரசு செல்கிறது என்ற குற்றச்சாட்டு எழுவதற்கு இடமளித்துவிடக் கூடாது.

கேரள மாற்று!

சிலர், கேரளத்தோடு இதை ஒப்பிடுகிறார்கள். ஆனால், கேரளத்தில் கடைப்பிடிக்கப்படுவது மாற்றுக் கொள்கை. இதற்கு முன்பும் தற்போதும் ஒன்றிய அரசுகளால், உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளைச் சார்ந்து, குடிமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான நிலைமைகளிலிருந்து, மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையில், கேரள மக்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கிற மாற்றுக் கொள்கை அது. உள்ளாட்சிகளுக்குப் பரவலான அதிகாரம் என்பது உட்பட அந்த மாற்றுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதுதான்.

அத்தகைய மாற்றுக் கொள்கையை இந்த ஐந்து வல்லுநர்கள் உருவாக்கித் தருவார்களா? இந்த ஐவரில் ஜான் ட்ரேஸ் மட்டுமே ஓரளவுக்குத் தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றான சிந்தனைகள் உள்ளவர். எளிய மக்களுக்காக டாக்டர் அமர்த்தியா சென் மேற்கொண்ட முயற்சிகளோடு இணைந்திருப்பவர். தமிழகம் பற்றிய ஆய்வுகளையும் நடத்தியிருப்பவர், சமூக நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பவர்.

நாராயணனைப் பொறுத்தவரையில் தமிழகச் சூழலையும் மக்கள் வாழ்நிலையையும் தனது நீண்டகாலப் பணி அனுபவத்திலிருந்து புரிந்துவைத்திருப்பவர்.

மற்ற மூன்று பேருமே, தாராளமயக் கொள்கைகளின் ஆதரவாளர்கள்தான். நேர்மையான செயல்பாடுகளையும், நிதானமான அணுகுமுறைகளையும் வலியுறுத்தக்கூடியவர்கள் என்றாலும் அந்தக் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். மோடி அரசின் பணமதிப்பொழிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி செயலாக்கம் போன்றவற்றை ரகுராம் ராஜன் கடுமையாக எதிர்த்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. கொரோனா பிரச்சினைக்கு மதவாதச் சாயம் பூசப்பட்டதையும் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். ஆயினும், முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரக் கொள்கைக்கு உள்ளே நின்றுகொண்டு சீர்திருத்தங்களை முன்மொழிகிறவர்தான் அவர் என்று பலரும் கூறியிருக்கிறார்கள்.

இத்தகைய கொள்கைகளை அரசுகளுக்கு வற்புறுத்துகிற உலக வங்கியின் முக்கியப் பதவிகளில் இருந்தவர் அலங்கரித்தவர் அரவிந்த் சுப்ரமணியன். பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் 2014 முதல் மூன்றாண்டுகள் இடம்பெற்றிருந்த அவர் அதன் தலைமை ஆலோசகராக இருந்த காலத்தில்தான் பண மதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரான எஸ்தர் டஃப்ளோ, வறுமை நிலைமைகள் குறித்து ஆய்வுகளை நடத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் விருது எஸ்தர் டஃப்ளோ, அவருடைய கணவர் அபிஜித் பானர்ஜி, சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் கிரேமர் மூவருக்குமாக வழங்கப்பட்டது. உலகளாவிய வறுமை ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்காக அந்த விருது அளிக்கப்பட்டது. பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது அவரது தலைமையிலான உலகப் பொருளாதார ஆணையத்தின் ஆலோசகராகப் பணியாற்றியவரான எஸ்தர். அடிப்படையில் உலகமய – தாராளமய - தனியார்மய பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்தான். அவற்றின் விளைவாகத் தாக்கப்படும் ஏழைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற பார்வையும் கொண்டவர். அந்தக் கொள்கைகளோ, மேலும் மேலும் ஏழைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பவை. அந்தக் கொள்கைகளில் மாறுபடாத நோபல் நிறுவனம், இவரைப் போன்றவர்களுக்கும் அவ்வப்போது விருது வழங்குவது தன்னை நடுநிலையாகக் காட்டிக்கொள்ளவும், நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ளவும்தான் என்று முன்பொரு நிகழ்ச்சியில் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறியது நினைவுக்கு வருகிறது.

உள்நோக்கம் கற்பிக்க இயலுமா?

ஜான் ட்ரேஸ் எவ்வளவு முயன்றாலும், இந்தக் குழுவின் ஒட்டுமொத்த ஆலோசனைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கேட்கிறார் பேராசிரியர் ராம்குமார். அந்தக் கேள்வியை எளிதில் கடக்க இயலாது. ஆயினும் மு.க.ஸ்டாலின் அரசின் இந்த முயற்சிக்கு வேறு உள்நோக்கம் எதுவும் கற்பிக்க இயலாது. இப்படிப்பட்ட அறிஞர்களிடமிருந்து வரும் வழிகாட்டல்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதுதான் இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம். அது மாற்றுக் கொள்கைகளாக இருக்குமா அல்லது சீர்திருத்த வழிமுறைகளாக மட்டும் இருக்குமா என்ற கேள்வியையும் ஒதுக்குவதற்கில்லை. ஒரு புதிய அணுகுமுறையாக இப்படியொரு குழு இப்போதுதான் அமைக்கப்படுகிறது என்ற நிலையில், எடுத்த எடுப்பிலேயே இதனால் பயனில்லை என்றும் தள்ளிவிடுவதற்கில்லை.

“ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான உறவுகளைப் பெருமளவுக்கு மறுகட்டுமானம் செய்ய வேண்டியுள்ளது. மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்படுவது அதிகரித்துக்கொண்டே போகிற நிலையில் நிதி உள்ளிட்ட அதிகாரங்களை மாநிலங்கள் மீட்க வேண்டியிருக்கிறது. மாநிலங்களின் ஒன்றியமாக இந்திய அரசு செயல்படுவதே நாட்டின் கட்டமைப்புக்குப் பொருத்தமானது, அரசமைப்புச் சட்டத்தின்படியும் சரியானது. அதை நோக்கி, இதர மாநில அரசுகளையும் இணைத்துக்கொண்டு நகர்கிற பொறுப்பும் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழ்நாட்டுக்கு உள்ளேயும் அதிகாரப் பரவல் தேவை. கடந்த காலங்களில் இதில் அக்கறை காட்டப்படவில்லை. உள்ளாட்சிகளுக்குச் செயல் அதிகாரம், நிதி அதிகாரம், செயல்படுவதற்கான போதிய அலுவலர்கள் போன்றவை உறுதிப்படுத்தப்படுகிறபோதுதான் மாநிலம் சரியான வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும். கேரளம் இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. உலகில் பல நாடுகளின் முன்னேற்றத்துக்கு உள்ளாட்சிகளின் சுயேச்சையான செயல்பாடுகள் முக்கியமான காரணம். இப்படிப்பட்ட மாற்றங்களுக்கான ஆலோசனைகளை ஐவர் குழு வழங்குமானால் நல்லதுதான்” என்கிறார் பேராசிரியர் ஆத்ரேயா.

பொருளாதார சீர்திருத்தத்தின் பெயரால் மையம் கொள்கிற புயலின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதாக ஆலோசனைகள் அமைய வேண்டும். அப்படியெல்லாம்தான் அமைகின்றனவா என்பதை குழு அளிக்கப்போகிற பரிந்துரைகள் காட்டத்தானே போகின்றன?

.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 26 ஜுன் 2021