மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

பிளஸ் 2 தேர்வை நடத்தும் ஆந்திராவை எச்சரிக்கும் உச்ச நீதிமன்றம்!

பிளஸ் 2 தேர்வை நடத்தும் ஆந்திராவை எச்சரிக்கும் உச்ச நீதிமன்றம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், மாணவர்களின் மதிப்பெண் முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என ஒன்றிய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து அறிவித்தன.

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைப்படி, பிளஸ் 2வில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீத மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ தாக்கல் செய்த மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் முறையைத் தனது இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில், வழக்கறிஞர் அனுபா ஸ்ரீவாஸ்தவா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ 21 மாநிலங்கள் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளன. ஆறு மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆந்திரா மாநிலம் மட்டும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யாமல், ஜூலை கடைசி வாரத்தில் தேர்வு நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஜூன் 24) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் விசாரித்தனர்.

பொதுத் தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், இன்றிலிருந்து 10 நாட்களுக்குள் பிளஸ் 2 மாணவர்களின் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் முறையை இறுதி செய்து, ஜூலை 31ஆம் தேதிக்குள் மாணவர்களின் மதிப்பெண் முடிவுகளை வெளியிட வேண்டும்.

சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ-க்கு வழங்கப்பட்ட காலக்கெடுவைப் போல மாநில பாடத்திட்டங்களை கொண்ட வாரியங்களுக்கும் பொதுவாக உத்தரவிடுகிறோம்.

அனைத்து மாநில வாரியங்களும் ஒரே மாதிரியான மதிப்பீட்டு திட்டத்தை வைத்திருப்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு வாரியமும் வேறுபட்டவை மற்றும் தன்னாட்சி கொண்டவை. அதனால், இதில் ஒரே முறையை பின்பற்ற வேண்டும் என சொல்ல மாட்டோம். அந்தந்த வாரியங்களுக்கு ஏற்ப மதிப்பீடு முறையை பின்பற்றிக் கொள்ளலாம். மாநில அரசுகள், வல்லுநர்களிடம் ஆலோசித்து, மதிப்பெண் கணக்கிடும் முறையை இறுதி செய்யலாம். ஆனால் இந்த முறையை பற்றி உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிற மாநிலங்கள் பிளஸ் 2 தேர்வை ரத்துசெய்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு மட்டும் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஆந்திர அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க தேர்வு நடத்துவதே சிறந்ததாக இருக்கும். பிளஸ் 2 தேர்வை 5.20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தேர்வின்போது பின்பற்றப்படும். தேர்வின்போது ஒரு அறையில் 15 முதல் 18 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். இதற்காக 34 ஆயிரம் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடத்தும் அலுவலர்கள் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

”பிற மாநில கல்வி வாரியங்கள் நடைமுறை யதார்த்தத்தை புரிந்துக் கொண்டு முடிவு எடுத்துள்ளன. தற்போது, டெல்டா பிளஸ் என்ற மாறுபாடு கொண்ட வைரஸ் பரவி வருகிறது. அது எந்த வேகத்தில் பரவும் என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. உங்கள் திட்டம் குறித்து எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறிய நீதிபதிகள், ஆந்திராவில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதால் உயிரிழப்பு ஏற்பட்டால், அரசு அதற்கு பொறுப்பு ஏற்பதுடன் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நாளைக்கு(ஜூன் 25) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 24 ஜுன் 2021