மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

போலீசாரின் தாக்குதல்: ‘யாராக இருந்தாலும் நடவடிக்கை’!

போலீசாரின் தாக்குதல்: ‘யாராக இருந்தாலும் நடவடிக்கை’!

சேலம் அருகே போலீசாரின் தாக்குதல் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர், நேற்று தனது நண்பர்களுடன் வெள்ளிமலைக்குச் சென்றுவிட்டு கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். முருகேசன் மது அருந்தியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏத்தாப்பூர் அடுத்த பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த முருகேசனையும், அவரது நண்பர்களையும் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது போலீசாருக்கும், முருகேசனும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றி, சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, காவலர் முருகன் உள்ளிட்ட போலீசார் முருகேசனை லத்தியால் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், “சார்... சார்... அடிக்காதீங்க விட்ருங்க என்று கெஞ்சியும், போலீசார் கடுமையாகத் தாக்குவது” பதிவாகியுள்ளது.

போலீசாரின் தாக்குதலால் காயமடைந்த முருகேசன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

முருகேசனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்திய நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். உடன் இருந்த இரு காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் பேசிய எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஏத்தாப்பூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் குடிபோதையில் வந்த நபரை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமான காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் ” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த செய்தி தனது கவனத்துக்கு வந்தவுடன் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதுபோன்று காவல்துறையினரின் கடுமையான இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோர், முருகேசனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

புதன் 23 ஜுன் 2021