மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

வன்னியர் உள் ஒதுக்கீடு -விரைவில் நல்ல முடிவு: முதல்வர்!

வன்னியர் உள் ஒதுக்கீடு -விரைவில் நல்ல முடிவு: முதல்வர்!

10.5 சதவிகித வன்னியர் இட ஒதுக்கீட்டில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2020 பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஒன்று (MBC-V) ஏற்படுத்தப்பட்டு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. `இது தற்காலிகமானதுதான். சாதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரித்த பிறகு 6 மாதம் கழித்து மசோதா மாற்றியமைக்கப்படும் எனவும் பேரவையில் அறிவித்தார்.

இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று 16ஆவது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேசியும், கேள்வி எழுப்பியும் வருகின்றனர். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அதுபோன்று பாமக தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி, தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று பேசினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இவ்விவகாரம் தொடர்பாக, இரண்டு நாட்களுக்கு முன்பு, பாமக நிறுவனர் ராமதாஸ், இவர் மூலமாக ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பினார். அதில் அவர், பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இதனுடைய முக்கியத்துவத்தை, இதிலுள்ள பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, நிறைவாக, 'தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும்' குறிப்பிட்டிருந்தார்.

நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம். எனவே, உறுப்பினருடைய கோரிக்கை குறித்துச் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய துறையினுடைய அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 23 ஜுன் 2021