மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

வேளாண் சட்டம், சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் எப்போது?

வேளாண் சட்டம், சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் எப்போது?

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டம், சிஏஏ ஆகியவற்றுக்கு எதிராக வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

16ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது மானாமதுரை திமுக உறுப்பினர், விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனப் பேசினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “இந்த மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், உழவர் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள உழவர்களின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த மன்றம் முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

ஆனால், இந்த அவையின் முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது. எனவே, வரவிருக்கக்கூடிய ஜூலை மாதத்தில் வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது, அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்து, நிச்சயமாக ஒன்றிய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசினுடைய எதிர்ப்பை பதிவு செய்து, அவற்றைத் திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்பதை உறுதியோடு தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோன்று, ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்தில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிறைவேற்றுவோம்” என்று குறிப்பிட்டார்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

புதன் 23 ஜுன் 2021