மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

‘நீட்’டுதல் நியாயமல்ல!

‘நீட்’டுதல் நியாயமல்ல!

ஸ்ரீராம் சர்மா

அது, இந்தியப் பெருநிலம் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிடியிலிருந்து விக்டோரியப் பேரரசை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலம்.

தாமஸ் மன்றோ என்று ஒருவர் அன்றைய சென்னை ராஜதானிக்கு கவர்னராக இருந்து ஆண்டுகொண்டிருந்தார்.

மற்ற சில அராஜக கவர்னர்களைப் போல இந்தியர்களை அடிமைகளாகவும் வேற்று மனிதர்களாகவும் கருதாமல் தன் சொந்த ஜனங்களாகவே கருதி ஆட்சி செய்தவர் மன்றோ. பிரித்தானிய கவர்னர்களில் மானுடம் தோய்ந்தவர் தாமஸ் மன்றோ.

அன்றைய சென்னை ராஜதானி ஆந்திராவையும் உள்ளடக்கியது என்பதால் இன்றும்கூட ஆந்திராவில் சில இடங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ‘மன்றோலப்பா’ எனப் பெயர் சூட்டி அவரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

குறிப்பாக அவரது ஆட்சிக்காலத்தில் தமிழர்கள்மீது பெரும் அக்கறை காட்டியவர் என்பதால் நாமும்கூட அவருக்கு சென்னை மவுன்ட் ரோட்டில் சிலை கண்டிருக்கிறோம்.

போக்குவரத்து வசதிகளற்ற அந்த நாட்களில் இடுப்பொடிய குதிரை மேல் பயணித்து தமிழ்நாட்டின் உள் கிராமங்கள் வரையிலும் சென்று கூர்ந்து கவனித்து ஆட்சி செய்த தாமஸ் மன்றோ, அன்று தமிழ்நாட்டின் கல்வி குறித்து பெருங்கவலை கொண்டார்.

அவரது காலத்தில் 12,850,941 மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் வெறும் 12,498 பள்ளிகள் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தமிழர்களின் கல்விமீது மிகுந்த அக்கறையை வெளிப்படுத்தினார்.

குறித்துக்கொள்ளுங்கள்... இவருக்குப் பின் வந்து கல்வித்திட்டம் வகுத்த மெக்காலேகூட இந்தியர்களுக்கு ஆங்கில மொழியில்தான் கற்பிக்க வேண்டும் என்று அடம்பிடித்தார்.

ஆனால், தாமஸ் மன்றோ தன் கல்விக் கொள்கையில் சொல்கிறார்…

இந்தியர்களுக்கு அவரவர் தாய்மொழியில் கற்பிப்பதுதான் சிறந்தது. மேலும், கற்பிப்பதும் அவர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் என்பது அதற்குண்டான வசதிகளை மட்டுமே செய்து தர வேண்டும்.

1826 மார்ச்சில் அவர் வெளியிட்ட கல்விக் கொள்கை மகத்தானது.

அதில், ஆண்டுக்கு 50,000 நிதியை ஒதுக்கி, தாலுக்காவுக்கு ஒரு பள்ளியைத் தொடங்கியாக வேண்டும் என்றார். மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பை - அதன் செலவை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றார்.

ஆனால், அடுத்த ஆண்டே அவர் அகால மரணமடைந்துவிட, குப்பைக்கூடைக்குப் போன அவரது அந்த நியாயமான ஆசை, இன்றும்கூட ஏங்கியபடி வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

நீட் தேர்வு

நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வருகிறார்கள். ஆனால், இருக்கும் மருத்துவ சீட்டுகளோ மொத்தமே 66,535 தான். எனவே, அவர்களை வடிகட்டி அனுப்ப நீட்டைக் கொண்டு வருகிறார்கள்.

கொடுமை என்னவென்றால் இந்தியாவில் மருத்துவர்களின் பற்றாக்குறை ஏறத்தாழ 5 லட்சத்தை எட்டுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருந்தாக வேண்டும்.

நீட் சரியா, தவறா என்பதைவிட, முதலில் அனைவருக்கும் விருப்பப்பட்ட கல்வி கிடைத்தாக வேண்டும் அல்லவா? தாய்மொழியில் படித்த ஒரே காரணத்தால் கரையேற முடியாத கல்வியை வரம் என்பதா, சாபம் என்பதா?

அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று 1826இல் தாமஸ் மன்றோ சொன்ன சொல், சுதந்திர இந்தியாவின் காதுகளிலும் ஏறவில்லை என்றால் என்னதான் செய்வது?

உழைத்துப் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும் லட்சங்களைக் கொட்டிக்கொடுத்து வாய்ப்பினை தட்டிச் சென்று விடுகிறார்கள் வசதி படைத்தவர்கள் என்பது நியாயமான குற்றச்சாட்டாக இருக்குமானால்…

அடிப்படை வசதியே இல்லாத கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் படித்துத் தட்டுத் தடுமாறி வரும் எங்களை… நகரங்களில் பிறந்து அடிப்படை முதலே ஆங்கிலவழிக் கல்வியை வளமாக நுகரும் வசதி படைத்தவர்களோடு போட்டிப் போடச் சொல்வது நியாயமா என்னும் கேள்வியை மறுத்துவிட முடியாது அல்லவா?

நாங்கள் ஒரு புதிர் போடுவோம். அதைக் காதை மூடியபடி கேட்டுக் கொண்டு சரியான பதிலை சொல்ல வேண்டும் என்பது எப்படி நியாயமாகி விடும்?

விரும்பியதைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது ஒரு குற்றமா? அது அடிப்படை உரிமையல்லவா? அதை நிறைவேற்றித்தர வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடல்லவா என்று கொதித்துக் கேட்கிறார் மரியாதைக்குரிய கல்வியாளரான டாக்டர் கோபாலன் இரவீந்திரன்.

என்ன மாதிரியான அவலக்கூத்து இது? ஒருபுறம் ஆர்வத்தோடு படிக்க வருபவர்களுக்கு முட்டுக்கட்டை! இன்னொருபுறம் மருத்துவர்களின் பற்றாக்குறை!

நிலைமை இப்படியே போனால், ஆண்டுக்கு 50,000 மருத்துவர்களை தயார் செய்து அனுப்பினாலும் இந்தியாவின் இன்றைய பற்றாக்குறையைத் தீர்க்க இன்னும் பத்து ஆண்டுகள் ஆகிவிடுமே? அன்றைய நிலை இன்னும் முற்றிப் போயிருக்காதா? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

புகழ்பெற்ற இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷனின் தமிழ்நாட்டுக் கிளைக்குத் தலைவராக இருப்பவர் டாக்டர் பி. ராமகிருஷ்ணன். எங்கள் ஊர்க்காரர்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இப்படி உறுதிபடச் சொன்னார்…

“நீட் தேர்வு நாட்டில் அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் விதவிதமான ‘சிலபஸ்’ இருப்பதால் இந்த நீட் தேர்வு நமக்குத் தேவையில்லை. நீட்டை எதிர்க்கும் நமது அரசாங்கத்துக்கு எங்கள் அமைப்பு முழுமையாகத் துணை நிற்கும்” என்றார்.

நியாயம்தானே?

நமது நாட்டில் பலவிதமான கல்வி முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு ஸ்டேட் போர்டு. ஒவ்வொன்றும் ஒரு தரம். பிறகு, சிபிஎஸ்ஸி. அதுதவிர, ஐசிஎஸ்சி போர்டு. இப்படி விதவிதமான போதனை முறைகளுக்கு ஆட்பட்ட மூளைகளை ஒரே தராசில் நிறுத்துப் பார்ப்பது எப்படி சரிவரும்?

ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில அரசின் அதன் கல்வியாளர்களின் ஒப்புதல் இல்லாமல் திணிக்கப் பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஒருவேளை குற்றம் குறை இருந்தால் அதைச் சுட்டிக்காட்டலாமே? கல்விதான் ஒத்திசைவுப் பட்டியலில் நின்று அதற்கு வழி செய்கிறதே!

ஒன்றை ஆழமாகப் புரிந்துகொண்டாக வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாச்சாரம் – வளர்ப்பு முறை – அறிவுத் தேறல் இருக்கிறது. அதற்கேற்றபடி தயாராகி வரும் முறைதான் ஞானம் பெருக வழி வகுக்கும்.

மாறாக, ஒட்டுமொத்தமாக ஒரே அளவுகோலை வைப்போம் என்றால் ப்ராய்லர் கோழிகள்தான் பிறக்கும்.

அன்று தாமஸ் மன்றோ, “அவரவர்கள் தாய்மொழியில் படிக்கட்டும். அதை அவரவர்களே கற்பித்துக் கொள்ளட்டும். ஆங்கிலேயர்கள் தங்கள் முறையை அவர்கள் மீது திணிக்கக் கூடாது” என்றாரே... அதற்கு என்ன அர்த்தம்?

தாய்மொழி என்பது அதன் கலாச்சாரத்தையும் அறிவுத் தேறலையும் உள்ளடக்கியது அல்லவா? கல்வி, மாநிலப் பட்டியலில் இருந்தபோது படித்து வந்த தமிழ்நாட்டு மருத்துவர்கள் எல்லாம் உலகப் புகழ் பெறவில்லையா? நமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கவில்லையா?

ஒருவேளை கல்வியின் தரம் குறைந்துகொண்டே வருகிறது என்று ஒன்றிய அரசு கருதுமானால் அப்படித் தரம் குறைந்த மாநிலங்களுக்கு மட்டும் இந்த நீட் தேர்வை வைத்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே தன்னிறைவு அடைந்த மாநிலமான நமது தமிழ்நாட்டுக்கு எதற்கு இந்த நீட்? உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலையும் கடந்து அதாவது 700 பேருக்கு ஒரு மருத்துவர் எனக் கொடி கட்டிப் பறக்கும் நமக்கு எதற்கு இந்த நீட்?

‘மெக்கா ஆஃப் மெடிசின்’ என்று உலக அளவில் புகழப்படும் நமது தமிழகத்துக்கு நீட் தேவையில்லை என்பதே எனது துணிந்த கருத்து!

அதற்குப் பதிலாக இந்த அரசாங்கத்துக்கு அவசியமானதொரு வேண்டுகோளை இந்தக் கட்டுரையின் மூலம் முன்வைக்கிறேன்.

இந்திய மருத்துவ கவுன்சில் ஆவணங்களின்படி இன்று, இந்தியா முழுவதும் மொத்தம் பன்னிரண்டரை லட்சம் மருத்துவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் முறைப்படி பதிந்து கொண்ட டாக்டர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம்.

ஆனால், இந்த எண்ணிக்கைக்கு இணையாக போலி டாக்டர்களும் இங்கே உலவுகிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான செய்தியாகிறது. ஊருக்கு இரண்டு போலி டாக்டர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தவறாகப் படித்து மருத்துவத் துறையைக் கெடுத்துவிடுவார்கள் என மாணவர்களுக்கு நீட் கேட் போடுவதைவிட, படிக்காமலேயே ஊரைக் கெடுக்கும் இந்தப் போலிகளை முதலில் ஒழிக்க வேண்டும்.

அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் இந்தப் போலி மருத்துவர்களுக்கு எதிராக இதுகாறும் எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை என்பது அடுத்த அதிர்ச்சியை அளிக்கிறது.

முதலில், அந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும் இந்த அரசாங்கம்.

நமது நாட்டின் கல்வித் தரத்தைப் பற்றி உண்மையிலேயே, கவலைப்படுவதாக இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நீண்ட கால திட்டங்களை வகுத்துக்கொண்டு பாதைகளை வரையறுத்துக் கொண்டு மெல்ல மெல்ல அதேநேரம் உறுதியாக அடிப்படையிலிருந்து கட்டமைத்துக்கொண்டு வந்தாக வேண்டும். இப்படி திடீரென 12ஆம் வகுப்பில் வந்து குதித்தால் குழப்பம்தான் மிஞ்சும்.

எது எப்படியோ, கல்வி கற்க வேண்டும் - கௌரவமாக வாழ வேண்டும் என்று கனவு காணும் உரிமை, இந்த நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு. பின்தங்கிய ஏழைக் குழந்தைக்கு அந்த உரிமை அதிகமாகவே உண்டு.

அந்தக் கனவை நினைவாக்கிக்கொள்ளும் தகுதியை எங்களுக்குக் கொடுங்கள் என்றுதான் ஒவ்வொரு பிஞ்சு உள்ளமும் அரசாங்கத்திடம் வந்து சரணடைந்து நிற்கிறது.

நிறைவேற்றிக் கொடுக்கும் தகுதியை அரசாங்கம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, ‘நீ வளர்த்துக்கொண்டு என்னிடம் வா…’ என்று குழந்தைகளிடம் கடுமை காட்டுவது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல.

அரசியல் அகற்றி - சமூக நலம்பாடும் ஓர் எளிய எழுத்தாளனாக இரு கைகூப்பி இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்…

தயவுசெய்து எங்கள் ஏழைக் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றித் தாருங்கள்!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

புதன் 23 ஜுன் 2021