மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

தாதா வழக்கில் தப்பிக்கும் பெண்கள்: மாணவிகள் ஆவேசம்!

தாதா வழக்கில் தப்பிக்கும் பெண்கள்: மாணவிகள் ஆவேசம்!

பள்ளி மாணவிகளுடன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுவருகிறார் சிவசங்கர் பாபா. இதேநேரம் அவரது கேளம்பாக்கம் பள்ளி வளாகத்தில் உள்ள ஊழியர்களிடமும், மாணவர்களிடமும் விசாரணை நடத்தி சிவசங்கர் பாபாவின் குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றி தகவல் திரட்ட ஆரம்பித்தனர் சிபிசிஐடி போலீஸார்.

இந்த வகையில் மூன்று பெண்களின் மீது சிபிசிஐடி போலீஸாரின் கவனம் குவிந்தது. அப்பள்ளியின் முன்னாள் மாணவியும் பாபாவின் சிஷ்யையுமான சுஷ்மிதா, பள்ளியின் கம்ப்யூட்டர் டீச்சர் கருணா, ஹாஸ்டல் வார்டன் நீரஜா ஆகியோர்தான் அந்த மூவர்.

சுஷ்மிதா, கருணா,நீரஜா ஆகியோர் பற்றி பள்ளியின் இந்நாள் மாணவிகளும், முன்னாள் மாணவிகளும் பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்கள். அதன்படியே இம்மூவரையும் ஜூன் 18 ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள்.

சுஷ்மிதா மீதான குற்றச்சாட்டு:

பள்ளி வகுப்புகளை முடித்தாலும் சுஷ்மிதாவை கல்லூரியில் படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தது பாபாதான். சில ஆண்டுகளுக்கு முன் சுஷ்மிதாவை வெளிநாட்டுக்கும் அனுப்பி வைத்தார் பாபா. பள்ளி மாணவிகளிடம், ‘பாபா அழைத்தால் சென்று எப்படி நடந்துகொள்ள வேண்டும் ‘ என்று மூளை சலவை செய்து பாபாவின் சொகுசு பங்களாவுக்கு அழைத்து செல்வார், கிட்டத்தட்ட பாபாவிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை சுஷ்மிதாதான் மாணவிகளுக்கு அளிப்பார்-என்பது மாணவிகளின் குற்றச்சாட்டு.

இதுபற்றி சுஷ்மிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சுஷ்மிதாவுக்கு 6 மாதத்தில் ஒரு கைக்குழந்தை இருக்கிறது. அவரோடு சேர்த்து அக்குழந்தையையும் கைது செய்து 19 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புழல் சிறைக்கு அனுப்பினார்கள் போலீசார்.

கருணா மீதான குற்றச்சாட்டு:

கருணாவைப் பற்றி சிபிசிஐடி போலீஸாரிடம் மாணவிகள் கூறுகையில், “கம்ப்யூட்டர் டீச்சராக இருந்தபோதிலும் கருணா பாபா பற்றிய பாடங்களையே மாணவிகளுக்கு அதிகமாக எடுப்பார். பாபாவுக்கு பகல் நேரத்தில் மாணவிகளிடம் சிலுமிஷம் பண்ண வேண்டுமென்றால் கருணாவுக்கு தகவல் அனுப்பப்படும். உடனடியாக மாணவி வகுப்பில் இருந்தாலும் வகுப்பில் இல்லாவிட்டாலும் அந்த மாணவியை பாபாவிடம் கொண்டு சேர்ப்பது கருணாவின் பொறுப்பு”என்று கூறியிருக்கிறார்கள்.

இதுபற்றி சிபிசிஐடி போலீசார் கருணாவிடம் விசாரித்தபோது, தன் மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். மேலும் தான் ஆசிரியர் பணி பார்ப்பதாகவும் அதை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அழுதிருக்கிறார் கருணா.

நீரஜா மீதான குற்றச்சாட்டு:

ஹாஸ்டல் வார்டன் நீரஜா மீது மாணவிகள் சிபிசிஐடி போலீஸாரிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். “இரவு நேரத்தில் பாபாவுக்கு தேவை ஏற்பட்டால் ஹாஸ்டல் வார்டன் நீரஜாவை தொடர்பு கொண்டு பாபாவே கேட்பார். அப்போது உறக்கத்தில் இருந்தாலும் தான் தேர்ந்தெடுத்த மாணவிகளை எழுப்பிவிட்டு, அவர்களை குளிக்க வைத்து சொகுசு பங்களாவுக்கு அழைத்து போய் விடுவார் நீரஜா. இதைப்போல் எத்தனையோ மாணவிகளை சீரழித்திருக்கிறார்கள்”என்று மாணவிகள் கூறியுள்ளனர்.

தன் மீதான இந்தக் குற்றச்சாட்டை மறுத்த நீரஜா, தன் மீது புகார் சொன்ன முன்னாள் மாணவிகள் சொல்வது பொய் என்றும் தான் ஹாஸ்டல் வார்டன் பணியைதான் செய்வதாகவும் கூறியுள்ளார்.

சிபிசிஐடி போலீஸ் நடவடிக்கை:

சுஷ்மிதா மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பிய போலீஸார்... கருணா, நீரஜா ஆகியோரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, ‘இந்த வழக்கில் எப்போது அழைத்தாலும் மீண்டும் வந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்’ என்று எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனர்.

மாணவிகள் கோரிக்கை:

மூவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து ஒருவரை கைது செய்து சிறைக்கு அனுப்பிய சிபிசிஐடி போலீசார், மீதி இருவரையும் விசாரணைக்குப் பின் கைது செய்யாமல் அனுப்பிவைத்துள்ளது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. கருணா, நீரஜா இருவரிடமும் மேலும் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறுகிறார்கள்.

முன் ஜாமீன் கேட்கும் ஆசிரியை:

இவர்களைத் தவிர சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியை தீபா என்பவர் தன்னையும் இந்த வழக்கில் சேர்த்து போலீஸ் தேடுவதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். ‘வங்கிப்பணி செய்து வந்த நான் ஆர்வத்தின் பேரில் ஆசிரியராக பணி செய்ய வந்தேன். என்மீதான புகார்களில் துளியும் உண்மை இல்லை. நான் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயார்’ என்று குறிப்பிட்டு தன்னை கைது செய்ய தடை கேட்டுள்ளார்.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

செவ்வாய் 22 ஜுன் 2021