மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

நடிகர் விஜய் திட்டமிட்ட திரைப்பயணமும் திட்டமிடாத அரசியலும்!

நடிகர் விஜய் திட்டமிட்ட திரைப்பயணமும் திட்டமிடாத அரசியலும்!

"ஒரு குழந்தை உருவாக பத்து மாசம், ஒரு பட்டதாரி உருவாக மூன்று வருஷம், ஆனா ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுது"..... மெர்சல் படத்தில் விஜய் பேசும் வசனம் இது.

சினிமா பின்புலம், திட்டமிட்ட வளர்ப்பு எல்லாம் இருந்தும் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்கிற கிரீடத்தை தலையில் சூட 28 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது நடிகர் விஜய்க்கு .

தமிழ்சினிமாவில் வியாபாரம், வசூல், தியேட்டர்களில் படம் பார்ப்போர் எண்ணிக்கை என அனைத்திலும் முதல் இடத்திற்கு முன்னேறி நிலைகொண்டுவிட்ட நடிகர் விஜய் பிறந்தநாள் இன்று. இதுவரை அவர் நடிப்பில் வெளியான64 படங்களில் 20% படங்கள் சூப்பர்ஹிட் ஆனது 30% படங்கள் முதலுக்கு மோசம் செய்யாத படங்கள் அவரது திட்டமிட்ட திரைப்பயணம் திட்டமிடல் இல்லாத அரசியல் பற்றிய சிறப்பு பார்வை.

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகர்களான எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா அவர்களுக்குப் பின் எம்.ஜி.ராமச்சந்திரன்-சிவாஜி கணேசன் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் - கமலஹாசன் தற்போது அஜீத்குமார்-விஜய் இவர்கள்தான் 1937 முதல் இன்றுவரை தமிழ் சினிமாவின் போக்கையும், வசூலையும் தீர்மானிக்கும் நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

எம்.ஜி.ராமச்சந்திரன்- சிவாஜி கணேசன் இருவரும் தமிழ் சினிமா அதன் வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவும், எல்லோரும் லாபமடையும் வகையில் தங்களது நடவடிக்கை, உழைப்பை பயன்படுத்தினார்கள். தங்கள் ரசிகர்களை அரசியலில் தவறாக நடத்தவில்லை, தங்கள் வளர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இவர்களுக்கு பின்வந்த ரஜினி - கமல், அஜீத் விஜய் இவர்கள் முதல் இடத்துக்கு வந்த பின் பணத்தை பிரதானமாக முன்வைத்து நடிக்க தொடங்கினார்கள்.

வருடத்திற்கு நான்கு, ஐந்து படங்கள் என நடித்துக்கொண்டிருந்த கமல் - ரஜினி இருவருமே வருடத்திற்கு ஒரு படம் நடிப்பது என முடிவெடுத்து அமல்படுத்தியபோது இவர்களுக்கான சம்பளமும் அதிகமானது. இதே நடைமுறையை விஜய் - அஜீத்குமார் இருவரும் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முதல் நடிகர் விஜய் அந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள விஜய் கடுமையாக உழைத்தார் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் உண்மை.

1992இல் வெளியான 'நாளைய தீர்ப்பு' விஜய்யைக் கதாநாயகனாக களமிறக்கியது. தொடர்ந்து 'ரசிகன்' உள்ளிட்ட ஒரு சில மசாலப்படங்களில் நடித்தாலும் தமிழகம் அறிந்த நடிகராக இவரை கொண்டு சேர்க்க முடியவில்லை அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களால்.

இந்த தேக்கநிலையை உடைத்து பட்டிதொட்டி முழுவதும் விஜய் என்கிற நடிகரை கொண்டு சேர்த்தது விஜய்காந்த் நடிப்பில் 1993ல் வெளியான செந்தூரப் பண்டி திரைப்படம். அதற்கு பின் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் சுமாரான வெற்றி, பிரம்மாண்டமான வெற்றிகளை ருசித்த பட பட்டியலில் இணைந்தன. மினிமம் கேரண்டி உடைய நாயகனாக உருமாற தொடங்கிய விஜய்க்கு 1996ல் வெளியான பூவே உனக்காக 1997 ல் வெளியான லவ் டுடே, சிவாஜியுடன் இணைந்து நடித்த ஒன்ஸ்மோர்,காதலுக்கு மரியாதை, 1999ல் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு பின் தவிர்க்க முடியாத கதாநாயகனானார் நடிகர் விஜய்.

குறிப்பாக குடும்ப உறவுகளிடையிலான சம்பிரதாய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக அமைந்திருந்த அந்தப் படத்தில் நடித்தது விஜய்யை பட்டிதொட்டியில் வசிக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்தது இதனால் நடிகர் விஜய் தமிழ் குடும்பங்களில் ஒருவரானார். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைவரையும் கவர்ந்தார்.

காதல் படங்களில் டூயட் பாடல்களில் விஜய்யின் தோற்றம், நடனம் உடல்மொழிகள் என ஒவ்வொன்றும் மக்களால் ரசித்து பார்க்கப்பட்டது. அவருடைய அபாரமான தனித்துவம் மிக்க நடனத் திறமை அவருக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உலகத் தமிழர்களிடம் உருவாக முக்கியமான காரணமாக அமைந்தது.

நேரில் எவரிடமும் அதிகம் பேசாதவராக இருக்கும் விஜய் திரையில் நகைச்சுவைக் காட்சிகளில் தனக்கென்று தனிப்பாணியை உருவாக்கிகொண்டார். மின்சார கண்ணா, வசீகரா போன்ற படங்களில் நகைச்சுவைக் கலைஞரின் துணை இல்லாத காட்சிகளில்கூட ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அதை மிகச் சரியாக வெளிப்படுத்துவதற்கான கால தூரத்தையும் கைவரப்பெற்றவர் விஜய்.

குஷி,ப்ரியமானவளே,ஃப்ரெண்ட்ஸ்,பத்ரி, பகவதி, திருமலை, கில்லி, திருப்பாச்சி','சிவகாசி', 'போக்கிரி' போன்ற படங்களின் வெற்றியால் ஒரு காதல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் நாயகனாக உருவெடுத்தார் விஜய் கடந்த 10-12 ஆண்டுகளில் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்கள் மசாலா ரசிகர்களை மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சினைகளை பற்றி திரையில் பேசுவதை எதிர்பார்க்கும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தன .

தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி,கத்தி, 'சர்க்கார்' ஆகிய படங்களில் தீவிரவாதம், விவசாயிகள் பிரச்சினை, அரசியல் மாற்றம் என சமூகம் பற்றிய விஷயங்களைப் பேசும் திரைப்படங்களில் நடித்தார்.

திரைகளில் அரசியல் பேசும் நடிகனை தன் தலைவனாக ஏற்கும் மனோநிலைகொண்ட தமிழக ரசிகர்கள் நடிகர் விஜயை தமிழகத்தை காக்கும் கடவுளாக அடுத்த தமிழக முதல்வராக உருவகப்படுத்திக் கொள்ளும் ரசாயன மாற்றத்தை உருவாக்கியது.

இவற்றை மேலும் வலுப்படுத்துபவையாக தெறி,மெர்சல், பிகில், படங்களில் விஜய் கதாபாத்திரங்கள் அமைந்தன. படம் சுமார், கதை சுமார், லாஜிக்குகள் இல்லை, ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் என அத்தனையையும் தாண்டி 'பிகில்'தான் 2019-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதல் இடம்,300 கோடி ரூபாய் வசூல் என வரிமானவரித்துறையே சாட்சியம் அளித்திருக்கிறது.

இது அத்தனையும் சாத்தியமானது விஜய் எனும் ஒற்றை மனிதனுக்காகத்தான் என்கிறது தமிழ் சினிமா வியாபார வட்டார தகவல்கள். விஜய்படம் வெளியாகும் நாட்களை தமிழ்நாட்டின் திருவிழாவாக அவரது ரசிகர்கள் கொண்டாடுவதே அதற்கான சாட்சி என்கின்றனர்.

மக்களிடம் கொரோனா பயம்போக்க, தியேட்டர்கள் மீண்டும் பழையபடி கொண்டாட்டத்துக்குத் தயாராக தமிழ் சினிமாவுக்கு விஜய் நடிப்பில் தயாராக இருந்த மாஸ்டர் படம் வரவேண்டியிருந்தது. நெருக்கடியானகொரோனா சூழலிலும் வசூலை அதிகரித்து தன் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் விஜய். ஆனால் இது நேர்மையான வசூல் இல்லை என்கிற விமர்சனமும் அப்போதே எழுந்தது.

1995-ம் ஆண்டு ரஜினிக்கு பாட்ஷா படம் வெளியானது. அப்போது அவரது வயது 45. வசூல் ரீதியாக ரஜினிக்கு வெற்றியை கொடுத்தப் படம் பாட்ஷா. இந்தப் படத்துக்குப் பிறகுதான் அவர் சினிமா வாழ்க்கைக்குள் அரசியல் குறுக்கீடுகள் அதிகமானது. அவரும் அரசியல் பேச தொடங்கினார் அவர் எது பேசினாலும் தலைப்பு செய்தியானது.போயஸ் கார்டனில் இருந்து இன்னொரு அரசியல்வாதி உருவாகிறார் என கூறப்பட்டது.

அதே போன்றுவிஜய்யின் 45-வது வயதில் ரிலீஸானப் படம் பிகில்.விஜய்யின் சம்பளத்தை, வியாபாரத்தை, ரசிகர் செல்வாக்கை உச்சத்துக்கு கொண்டுபோய் நிறுத்திய படம். அதனையொட்டி நடந்த வருமானவரித்துறை சோதனைக்காக மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தவரை வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து வந்தது. அதேநேரம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசால் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

எதற்கும் ஒப்புக்கொடுக்காமல் மௌனம் காத்து வந்தார் விஜய். 2008-ல் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் 'குருவி' படத்தில் நடித்தார் விஜய். இந்தப் படம் படப்பிடிப்பில் இருந்தபோதே விஜய்க்கும்- உதயநிதி தரப்புக்கும் உரசல் ஆரம்பித்தது.

மே மாதம் குருவி படம்வெளியாகி தோல்வியை சந்தித்தது. உரசல் இன்னும் அடுத்தக்கட்டத்துக்குப் போனது. 2011 தேர்தலில் களமிறங்கப்போகிறோம் என எஸ்.ஏ.சி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேச, விஜய் மக்கள் மன்றத்துக்கென தனிக்கொடி தயாரானது 2008 ஜூன் 22-ம் தேதி அவரது பிறந்தநாளில் இந்தக் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்.

நீல வண்ணத்தில் விஜய்யின் படமும் உழைத்திடு, உயர்ந்திடு என்கிற வாசகமும் இந்தக் கொடிக்குள் இருந்தது. கட்சிக்கான முன்னோட்டம்தான் இந்தக் கொடியா என அப்போது விஜய்யிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அரசியலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய மக்கள் இயக்க உறுப்பினர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். நான் பொதுவானவனாகவே இருக்க விரும்புகிறேன் என்றார் விஜய்.

அடுத்து ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது 2009 ஏப்ரலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதற்குப்பிறகு மன்றக் கொடிகளை எல்லா மாவட்டங்களிலும் ஏற்றி, உரையாற்றும் பிளானில் இருந்தார் விஜய். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. தலைமை இதனை ரசிக்கவில்லை அதன் காரணமாக ஈரோட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் இதற்கு அனுமதியளித்த போலீஸ், கடைசிநிமிடத்தில் பின்வாங்கியது. 'நீங்கள் மேடை ஏறக்கூடாது... மீறி ஏறினால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம்இல்லை என்று சொல்ல கூட்டம் ரத்தானது.

2011 பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த காவலன் படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்குகளுக்கு மறைமுகமாக அறிவுறுத்தப்பட்டது அன்றைய ஆட்சியாளர்களால்.

இதனால் படம் வெளிவருமா என்கிற சூழல் உருவானது சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து படம் ரிலீஸானது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு விஜய் நடித்த படம் வெற்றிபெற்றது. இதன் காரணமாக அன்றைய திமுக அரசுக்கு எதிராக வெளிப்படையாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார் விஜய்.

'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் இப்போது என்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்றவர் 'நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார் விஜய்.

2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்றதும் தன்னுடைய மக்கள் இயக்கம் அதிமுக-வின் வெற்றிக்கு அணில் போல உதவியதாக விஜய் தரப்பு அறிக்கை வெளியிட்டது

இந்த அறிக்கை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை கோபப்பட வைத்தது 2013 ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்தன. மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் மிகப்பெரிய மேடை அமைத்தார்கள்.

அப்போது அதிமுக பொதுக்குழு கூட்ட நேரம். ஒருபக்கம் 'அம்மா அழைக்கிறார்' என ஜெயலலிதா கட் அவுட்கள் இருக்க, இன்னொருபக்கம் விஜய் நிகழ்ச்சிக்கு அப்பா அழைக்கிறார் என எஸ்.ஏ.சியின் புகைப்படம் இடம்பெற்ற பேனர்கள்.

இதை அப்படியே புகைப் படமாக எடுத்து தமிழகஉளவுத்துறை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்ப கோபத்தின் உச்சத்துக்கு போன ஜெயலலிதா உடனடியாக விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினை அழைத்து கடுமையாக எச்சரிக்க விஜய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

திமுகவால் காவலன்படத்துக்குப் பிரச்னை வந்ததுபோல 'தலைவா' வெளியீட்டுக்கு அதிமுக-வால் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போது கொடநாட்டில் ஓய்வு எடுத்து வந்த ஜெயலலிதாவை சந்திக்க விஜய்யும், எஸ்.ஏ.சி-யும் அனுமதி பெறாமலே அங்கேபோக காவல்துறையால் திருப்பி அனுப்பப்பட்டார்கள். கடைசியில் கிட்டத்தட்ட விஜய் மன்னிப்புக் கேட்கும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட தலைவா வெளியானது. இப்படித்தொடர்ந்து விஜய் நடித்த படங்கள் வெளியாகும்போது பிரச்னைகளை சந்திப்பது 'சர்கார்' வரைத் தொடர்ந்தது.

மெர்சல்வரை இளையத்தளபதி விஜய் என்று திரையில் இருந்தவர், மெர்சலில் தளபதியாக மாறினார். தளபதி' என்கிற அடைமொழி அதுவரை மு.க.ஸ்டாலினுக்கே இருந்தது. ஆனால், அதைமீறி அதுவும் சன் பிக்சர்ஸ் தயாரித்த 'சர்கார்' படத்தில் தளபதி என மாற்றினார் விஜய்.

திமுகவுக்கும், விஜய்க்கும் இடையே மறைந்த முதல்வர் மு.கருணாநிதி காலத்தில் ஏற்பட்ட விரிசலில் இன்னும் எந்த மாற்றமும் இல்லை என்றே எஸ்.ஏ.சி வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றதேர்தலும், அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களுமே சாட்சி என்கின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பாஜகவுக்கு எதிராக சைக்கிளில் வந்தார் என அவரைவைத்து அடுத்தப்படம் தயாரிக்கும் சேனலிலேயே செய்திவந்தபோது தன் பத்திரிகை தொடர்பாளர் ரியாஸ் மூலம் அதனை மறுக்கச்சொன்னார் விஜய்.

மீண்டும் திமுக ஆட்சி அமைத்ததும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் பல்வேறு நடிகர்கள் வாழ்த்தி செய்திகளை வெளியிட, விஜய்யிடம் இருந்து அமைதியே பதிலாக இருந்தது. கொரோனா நிதியை கிட்டத்தட்ட எல்லா முக்கிய நடிகர்களுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுத்துவிட்டார்கள். அஜித் ஆன்லைன் மூலமாக நிதியளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிட்டுவிட்டார். ஆனால், விஜய்யிடம் இருந்து இதுவரை எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

காங்கிரஸ் ஆட்சியின்போது ராகுல் காந்தியை சந்தித்ததுப் பரபரப்பைக் கிளப்பினார் விஜய். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை விஜய் கேட்கிறார் எனத் தகவல் பரவி, கொஞ்ச நாளில் அடங்கியது. அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.

அடுத்தபடியாக 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது மோடியை சந்திக்க ஒப்புக்கொண்டார் விஜய். கோவையில் மோடி- விஜய் சந்திப்பு நடந்தது. இப்படி ஆரம்பத்தில் திமுக எதிர்ப்பில் தொடங்கிய அவரது அரசியல் நிலைப்பாடு அதிமுக, காங்கிரஸ் என மாறி பா.ஜ.க-வில் வந்து நின்றது.

அதுவும் மாற காரணமானார் பாஜக தலைவர் ஹெச்.ராஜா. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக சில வசனங்கள் இடம்பெற்றிருந்தது. அதனை விமர்சிப்பதாக நினத்து எச்.ராஜா இவர் ஜோசப் விஜய்... இப்படித்தான் பேசுவார் என விவகாரத்தை மதம் நோக்கி திசைமாற்ற, பிள்ளையார் புடிக்க குரங்கு ஆன கதையாக மக்கள் ஆதரவு முழுக்க விஜய் பக்கம் திரும்பியது.

அப்போதிருந்து பா.ஜ.க-வை வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்தார் விஜய். ஜோசப் விஜய் என்கிற லெட்டர் பேடில் அறிக்கை வெளியிடுவது, தொடர்ந்து இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் கலந்து பேசுவது படங்களிலும் தன்னுடைய கிறிஸ்துவ மத அடையாளத்தை பிரதானப்படுத்துவது என முன்பைப் போல் அமைதியாக இல்லாமல் எதிர்வினைகள் நிகழ்த்த தொடங்கினார்.

தான் ஆசைப்பட்டபடி மகனை முதல் நிலை நடிகனாக ஆக்கி விட்டோம் அதே போன்று தமிழக முதல் அமைச்சராக விஜய் வரவேண்டும் என்பது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆசை.

அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் எதிர்த்து செயல்பட்டு பேசியாகிவிட்டது. அதனால் தனிக்கட்சி தொடங்கிவிடலாம் என்று தன் மகன் விஜய் ஒப்புதல் பெறாமலே விஜய் பெயரில் கட்சியை பதிவு செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். மாஸ்டர் படத்தின் வெளியீடு, தன் மகனின் எதிர்கால சினிமா வாழ்க்கை கருதி அப்பா தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவித்தார் விஜய்.

எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் இருவருடைய அரசியல் அணுகுமுறையும், செயல்பாடும் குழப்பமானதாக தெரிந்தாலும் தொழில்ரீதியாக தங்களது நிலைப்பாட்டில் அப்பாவும் - மகனும் தெளிவாக காய் நகர்த்தி வருவது தெரியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அரசியலில் வெற்றிபெற சினிமா என்கிற ஊடகத்தையும், அதன் மூலம் கிடைத்த பிரபல்யத்தை கலைஞர், எம்.ஜி.ஆர் என்று இருவரும் பயன்படுத்தினார்கள்.

சினிமா என்கிற காட்சி ஊடகத்தில் தங்களின் வளர்ச்சி, வியாபாரத்திற்கு எவ்வித அரசியல் குறுக்கீடுகள், இடையூறுகள் ஏற்படாதவாறு இருக்க ஆளுங்கட்சிகளுக்கு எதிராக அவ்வப்போது கட்சி தொடங்குவது என்கிற ஆயுதத்தை அப்பாவும் - மகனும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்

இராமானுஜம்

.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 22 ஜுன் 2021