~பொருளாதார ஆலோசனைக் குழு: குவியும் பாராட்டுகள்!

politics

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு பாராட்டி வரவேற்றுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 21) நடைபெற்று முடிந்தது. முதல் நாளான நேற்று ஆளுநர் உரையாற்றியிருந்தார். ஆளுநர் உரைக்கு ஆதரவும், எதிர்ப்பும் சமபங்கு வந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, லோக் ஆயுக்தா, தமிழை இந்திய அலுவல் மொழியாக்க நடவடிக்கை, 15 நாட்களில் ரேஷன் கார்டு, வேலைபார்க்கும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன் வடிவு எனப் பல சிறப்பம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தது. அதில், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர், நோபல் பரிசு பெற்ற நிபுணர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரும் வரவேற்பையும், கவனத்தையும் பெற்றுள்ளது.

இதுகுறித்தான ஆளுநர் உரையில், ”வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதலமைச்சருக்கு ஆலோசனை கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது.

இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ, மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர். இவர்கள் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள்” என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

This is such excellent news. Congratulations @mkstalin If these people also had a say in all-India policymaking, India’s economy would turn around from where it has reached. https://t.co/1TGdop7Id2

— Kaushik Basu (@kaushikcbasu) June 21, 2021

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு, “இது சிறப்பான செய்தி. தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துகள். அகில இந்திய கொள்கை வகுப்பிலும் இந்த நபர்களின் கருத்துகள் இருந்தால், இந்தியாவின் பொருளாதாரம் எட்டிய உச்சத்துக்கு மீண்டும் திரும்பும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று, முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர், ப.சிதம்பரம், “தமிழ்நாடு அரசு ஒரு பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இந்தக் குழுவில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். இந்தக் குழுவை அமைத்தது சிறந்த நடவடிக்கை. இதை நான் பாராட்டி வரவேற்கிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *