மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 ஜுன் 2021

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு: புதிய முயற்சியில் ஸ்டாலின்

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு: புதிய முயற்சியில் ஸ்டாலின்

உலகமே பொருளாதாரத் தடுமாற்றத்தில் இருக்கும் நிலையில், தாராளமய பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக இருக்கும் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் மீதும் பொருளாதாரத் தடுமாற்றத்தின் தாக்கம் கடுமையாகவே படிந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாகவே தொழில் துறை, வர்த்தகத்துறை, உற்பத்தித் துறை மூன்றும் கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில்தான் திமுக 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ளது.

பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதன் மூலமே மற்ற அனைத்துத் துறைகளையும் செம்மைப்படுத்த முடியும் என்பதை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கான கொள்கைக் குழுவைத் திருத்தி அமைத்தார். அதில் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சனை துணைத் தலைவராக்கி பல்வேறு நிபுணர்களையும் உறுப்பினர்களாக நியமித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அடுத்த கட்ட உறுதியான நடவடிக்கையாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை அளிக்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என இன்று (ஜூன் 21) ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது சட்டமன்றத் தொடக்க உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆலோசனைக் குழு ஒன்றிய அரசை மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநில அரசுகளையும் தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில், “வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசனை கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்” என கூறியுள்ளார்.

அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், , ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவரும் இருப்பார்கள் என்றும் அறிவித்திருக்கிறார் ஆளுநர்.

ஆளுநர் உரையில் இடம்பெற்ற இந்த முக்கிய அறிவிப்பு இன்று பிற்பகலே அரசாணையாகவும் வெளிவந்துவிட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலம் இதுபோன்ற ஒரு குழுவை அமைத்ததில்லை என்பதால் தமிழகத்தின் இந்த முயற்சியையும் இதன் அடிப்படையிலான நடவடிக்கைகளையும் இந்தியாவே உற்று நோக்குகிறது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 21 ஜுன் 2021