மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 ஜுன் 2021

நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து!

நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து!

நீட் தேர்வு பாதிப்பு குறித்து இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்துக்கள் அனுப்பியுள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மாற்று வழி குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது.

இக்குழு தனது முதல் ஆய்வு கூட்டத்தை கடந்த 14ஆம் நடத்தியது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அக்குழு தலைவர் ஏ.கே. ராஜன், ”நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதால்தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளது என்பதே எங்கள் குழுவின் கருத்து. இதுகுறித்தான தகவல்களை சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்வோம்” என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் இ-மெயில் மூலம் 23ஆம் தேதிக்குள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இரண்டாவது ஆலோசனை கூட்டம் இன்று(ஜூன் 21) நடைபெற்றது. அதில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், வரப்பெற்ற கருத்துக்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குழு தலைவர் ஏ.கே.ராஜன்,” நீட் தேர்வு பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து சேகரித்து வருகிறோம். இதுவரை 25 ஆயிரம் பேர் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் 2 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்கிறார்கள். சிலர் வேண்டும் என்கிறார்கள். ஆனால், நீட் வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. ஒவ்வொருவரின் காரணம் வெவ்வேறாக உள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள வரம்புக்குள் கருத்துகளை திரட்டி வருகிறோம். இன்னும் சில முக்கியமான தரவுகள் வர வேண்டியுள்ளன. அதன்பின், எங்களது இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு சமர்பிக்கப்படும். மேலும், அரசு அளித்துள்ள காலவரம்புக்குள் எங்களது அறிக்கையை அளிப்பதற்காக எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்றும் பணிபுரிகிறோம். அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் கேட்கும் சூழல் தற்போது இல்லை. அரசின் விதிமுறைகளை தாண்டி எங்களது பரிந்துரைகள் இருக்காது, விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

-வினிதா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

திங்கள் 21 ஜுன் 2021