மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 ஜுன் 2021

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மறு தேர்தல்: ஆளுநர் சூசகம்!

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மறு தேர்தல்: ஆளுநர் சூசகம்!

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று(ஜூன் 21) தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

2011 முதல் 16 வரையிலான உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்த நிலையில் 2016ஆம் ஆண்டே உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அப்போதைய முதல்வர் ஜெ. உடல் நலக் குறைவு, பின் டிசம்பரில் மரணம், அடுத்தடுத்து அதிமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

இதேநேரம் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு பிரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக நீதிமன்றம் சென்றது. இதையே காரணமாக காட்டி அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நீண்ட தாமததத்துக்குப் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் (நிர்வாகப் பிரிப்புக்கு உட்பட்டு புதிய மாவட்டங்கள் தவிர ) ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் ஏறத்தாழ சம அளவில் வெற்றிபெற்றன. அதையடுத்து நகரப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லை.

மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் கூட நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு ஆலோசனைகள் நடத்தியபோதும் தேர்தல் நடக்கவில்லை.

இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதும் அனைத்து உள்ளாட்சிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுமென்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இன்றைய ஆளுநர் உரையிலும் இது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சிக் கொள்கை மீது இந்த அரசு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநிலத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த அரசு புத்துயிர் அளிக்கும்”என்று குறிப்பிட்டுள்ளார் ஆளுநர். ஏற்கனவே பதவியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு புத்துயிர் அளிப்பது என்றால் மறு தேர்தலா என்ற கேள்வி திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

மேலும், “ 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு அனைத்து வகைகளிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர், கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் இந்தத் தேர்தலை நடத்துவதற்கான உரிய நடவடிகைகள் மேற்கொள்ளப்படும்”என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகம் முழுதும் ஒட்டுமொத்தமாக ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொரோனா தாக்கம் முடிந்ததும் தேர்தல் நடைபெறும் என்ற பேச்சு ஆளுங்கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 21 ஜுன் 2021