மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

நீட்: முனைவரின் கேள்விகளும் பேராசிரியரின் பதில்களும்! -2

நீட்: முனைவரின் கேள்விகளும் பேராசிரியரின் பதில்களும்! -2

பேராசிரியர் நா. மணி

(பகல் ஒரு மணி பதிப்பின் தொடர்ச்சி)

கேள்வி-10:  நீட் வந்த பிறகும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை மட்டுமே உள்ளது. நான் தமிழ்நாட்டை சார்ந்தவன் என்று தமிழ்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் சான்றிதழ் பொய்யாக வாங்கி வந்தால் ஒருவேளை அடுத்த மாநில மாணவர்கள் சேரலாம்

நீட் வழியாக தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரி இடங்கள் வேற்று மாநிலத்திற்கு போய்விடும் என்ற குற்றச்சாட்டு விபரம் தெரிந்தவர்கள் வைப்பது அல்ல. ஆனால் அதற்குள்ளும் ஒரு உள்குத்து வைக்கிறீர்கள். அது தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டுமே லஞ்சம் வாங்குவது போலவும். தமிழ்நாட்டிற்கு வெளியே லஞ்சம் என்றால் என்னவென்று தெரியாது என்பது போல் உங்கள் கேள்வியின் தொனி உள்ளது.

கேள்வி-11  நீயா நானா கோபிநாத் முதல் கரு.பழனியப்பன் வரை அனைவரும் நீட் தேர்வு எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவ படிப்பு படிக்க விடாமல் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்று பொய் பிரச்சாரம் செய்வது நியாயமா? ஏன் பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்? இப்படி பொய்யான தகவல்களை கூறினால் மாணவர்கள் இந்த தேர்வை எழுதாமல் போனால் யாருக்கு பாதிப்பு?

பெரியசாமி நீங்கள் சொன்னால் அது முற்றிலும் மெய். மற்றவர்கள் கூறினால் அது முற்றிலும் பொய். மிகச் சிறந்த அணுகுமுறை பெரியசாமி. தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சி நீட் தேர்வு.

கேள்வி-12. அடுத்ததாக நீட் மூலம் சமூகநீதி மறுக்கப்பட்டதாக அனைவரும் மேடைக்கு மேடை ஏன் பொய் பேசுகிறார்கள்?? இங்கு சென்ற வருடம்(2019) தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகளை தோராயமாக கொடுத்துள்ளேன்.

a) மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள் -3050

b) பொது பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945, இதில்

(இவ்விடங்கள் அனைத்துமே பிராமணர்களுக்கு சென்றதல்ல. வேறு சாதிகளும் இதில் உள்ளனர்

c) பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915

(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -1594)

d) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Most Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610

(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -720)

e) தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579

(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -600)

f) சென்ற வருடம் தமிழ்நாட்டில் சமூக வாரியாக பெற்ற MBBS இடங்கள்

நீட் வந்ததால் எந்த சமூகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உண்மை இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து பொய் பிரச்சாரம் செய்து நவீன தீண்டாமை செய்வது ஏன்? (நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன். இதை இங்கு நான் கூறாவிட்டால் என் சாதி வேறாக பார்க்கப்படும் என்பதால் குறிப்பிடுகிறேன்)

பொய். பொய் மற்றவர்கள் கூற்று எல்லாம் பொய். ஏன் ஒரு வார்த்தையில் நீட் தேர்வு எதிராக நீட்டி முழங்கும் அத்தனை வாதங்களும் பொய் என்று ஒரே வார்த்தையில் பொய் என்று சொல்லி விட்டு போக வேண்டியது தானே! அப்படி கூறிவிட்டால் உங்கள் பொய்யான வாதங்களை முன் வைக்க முடியாது என்பதாலா? ஒருவர் என்ன சாதி என்பதை பொறுத்து அவரது வாதங்களை மதிப்பீடு செய்வது தவறு.  ஒரு பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர் கூட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசலாம். அதனை வைத்து ஒட்டு மொத்த அந்த சமூகமே அப்படிக் கருதுகிறது என்று கணக்கில் கொள்ளத் தேவையில்லை. அதுபோலத்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீங்கள் நீட் தேர்வுக்கு எதிராக பேசுவதால் அதுவே பிற்பட்டோரின் குரலாகாது. நீங்கள் முதலில் குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப் பட்டியலில் வரும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து விட்டதன் விளைவாகத் தான்  பொருளாதாரத்தில் பின்தங்கியோர்  என்று ஒரு பிரிவைக்  கண்டறிந்து அதன் வழியாக பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள்/ மாணவர்களை விட குறைவாக மதிப்பெண்கள் பெற்று பல இடங்களை பிடிக்கும் திட்டம் வந்திருக்கிறது. அடுத்து, நீட் எதிர்ப்பாளர்கள் உண்மையான சமூக நீதியின் மேல் அக்கறை உள்ளவர்கள் என்பதற்கு  சான்று.  நீட் தேர்வின் வழியாக அந்தந்த சமூகப் பிரிவினரின் இடங்கள் அதாவது 69 விழுக்காடு இடங்கள் கிடைத்து விடுகிறது.

பழங்குடி சமூகம் தொடங்கி எல்லா சமூகப் பிரிவிலும் உள்ள பொருளாதாரத்தில் முன்னேறியவர்களே இந்த இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கிறார்கள். கிராமப்புற  நகர்புற ஏழை எளிய மக்கள் எந்த பொருளாதார பிரிவிலும் இடம் பிடிக்க முடியாது.  ஏன் முற்பட்ட சாதி  மக்களில் கூட நீட் தேர்வு முறையால் கிராமப்புற நகர்புற ஏழை எளிய மக்கள் யாரும் மருத்துவர் ஆக முடியாது.  ஆனால் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் கோட்டாவில் வந்து விடுவார்கள். இப்போது நிகர நஷ்டம் யாருக்கு என்று புரியும் என்று நினைக்கிறேன்.  

கேள்வி-13 அடுத்த விவாதம் நீட் வந்ததால் பணக்காரர்களுக்கு மட்டும் சீட் கிடைக்கிறது என்பது.  நீட் வருவதற்கு முன்னாலும் தனியார் பள்ளிகளில் படித்த பணக்கார மாணவர்கள்தான் சீட் வாங்கினர். நீட்டை ஒழிப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியமா? அதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு சமூகத்தில் மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் மூலம் பலனடைந்து வரும் பணக்காரர்களை விடுத்து பலனடையாத மக்களுக்கு இடஒதுக்கீடு சென்று சேருமாறு இடஒதுக்கீட்டு முறையை மாற்றவேண்டுமா? அல்லது நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமா?

ஒரே கேள்வியை பல்வேறு வடிவங்களில் ஏன் கேட்கிறீர்கள் தெரியவில்லை.  சென்னை நகரில் தானே இருக்கிறீர்கள்? சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி  ஆகிய இரண்டு கல்லூரிகளுக்கு மட்டும் சென்று விசாரியுங்கள். நீட் தேர்வுக்கு முன்னர் விடுதியில் தங்கிப் படிப்போர் எத்தனை பேர் ? இப்போது விடுதியில் தங்கிப் படிப்போர் எத்தனை பேர் என்று கேளுங்கள். தெரிந்து கொள்ளமுடியும். எந்த சாதி எந்த மதமாக இருந்தாலும் நகர்புற பணக்காரர்களுக்கானது நீட் என்பது புரியும்.

கேள்வி-14:  அடுத்ததாக நாங்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டோம். எங்கள் GER Ratio 49% உள்ளது. உத்திரபிரதேசத்தில் 20% தான் உள்ளது. எனவே எங்களுக்கெல்லாம் நீட் போன்ற தேர்வுகள் தேவையில்லை என்கிறார்கள் சிலர். அனைவரையும் படிக்காமலே pass செய்தால் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட பொய் செய்தியை போல் GER Ratio வில் நாம் அமெரிக்காவை கூட மீறலாம். ஆனால் பலன் என்ன? மேலும் ஒரு தகவல் தமிழ்நாட்டில் 49% GER Ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்கள் 3.5கோடி (total population- 7cr) என்றால் உத்திரபிரதேசத்தில் 20% GER ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்களின் எண்ணிக்கை 4.6 கோடி (total population - 23cr). நம்மை விட அதிகம் மக்கள் எண்ணிக்கையில் உயர்கல்வி படிக்கிறார்கள். அவர்களும் நம்முடன் போட்டிக்கு வருவார்கள். எனவே யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.

மிக்க மகிழ்ச்சி சார். இந்த கேள்வி வழியாக உங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தியதற்கு. GER Ratio (மொத்த உயர் கல்வி நாடுவோர் விகிதம்) என்ற பதத்திற்கு இப்படி ஒரு வினோதமான  விளக்கத்தை கூறிய மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. அதை ஏன் உத்திரப்பிரதேச மாநிலத்தோடு ஒப்பிட்டீர்கள் என்று தெரியவில்லை. இந்தக் கேள்வி ஏன் இங்கு வந்தது என்றும் தெரியவில்லை. உத்திரப் பிரதேசம் அல்லது அதனை தற்போது ஆளும் அரசு ஆதித்திய நாத் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இஸ்லாமிய மக்களை கையாளும் விதம் அதற்கும் இப்படித் தான் பதில் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்விக்கு ஒரு குழந்தைக்கு செய்யும் செலவில் மூன்றில் ஒரு பகுதியை தான் உத்தரப் பிரதேச அரசு பள்ளிகள் மாணவர்களுக்கு செலவழிக்கிறதாம். அதனையும் ஏதோ காரணம் சொல்லி இட்டுக் கட்டுங்கள்.  

கேள்வி-15:  GER Ratio பெருமை பேசுவதை விடுத்தது ஏன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 93% மாணவர்களில் 50% மாணவர்கள் ஏன் Just pass செய்தார்கள் என்று ஆராய்வது பயனளிக்குமா? அல்லது நாங்கள் 93% pass என்று பெருமை பேசுவது பயனளிக்குமா?

Access Quality என்று இரண்டு பதங்கள் இருக்கிறது. Access என்பது கற்றல் வாய்ப்புகள். அதுவே GER விகிதம்.  அதுவே தொடக்கம்.  இதன் அடுத்த நிலைதான் தரம். தரத்தை மட்டுமே பேசுபவர்கள்  மேட்டுக்குடி மக்கள் கல்வியை மட்டுமே கருத்தில் கொள்பவர்கள் என்று பொருள். உங்கள் புள்ளி விவரங்கள் உண்மையா பொய்யா எனத் தெரியாமல் அதற்கு பதில் கூற முடியாது. இவ்வளவு முக்கிய பிரச்சினையில் முன் வைக்கும் புள்ளி விவரங்கள் அவை எடுக்கப்பட்ட மூலங்களை குறிப்பிட்டால் தான் அது பற்றி கருத்து கூற இயலும்.

கேள்வி-16:  இதுவரையில் நம் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் என்ன குறை என்று யாராவது விவாதித்திருக்கிறோமா? அதை மேம்படுத்தவேண்டும் என்று போராடியிருக்கிறோமா?

ஆம். அவ்வப்போது கல்வியாளர்கள் கல்வி நலனில் அக்கறை உள்ளவர்கள் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதுபற்றி தாங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

  

கேள்வி-17:  முதலில் நம் கல்வித்தரத்தை உயர்த்துவோம். நம் மாணவர்களுக்கு அபரிதமான ஆற்றல் உள்ளது. அவர்களுக்கு முறையான கல்வி கொடுத்தால் அவர்கள் நீட் என்ன எந்த தேர்வையும் ஊதி தள்ளிவிடுவார்கள்!

நீட் தேர்வு அறிவை பரிசோதிக்கும் தேர்வு. அந்த அளவுக்கு தமிழ் நாட்டு மாணவர்களுக்கு அறிவு இல்லை, அல்லது இருக்கிறது அதைப்  பட்டை தீட்ட வேண்டும் என்று பேசுவது, நாகரிகமாக கூற வேண்டும் எனில் அபத்தம், அறியாமை. பளிச்சென்று கூற வேண்டுமென்றால் முட்டாள்தனம்.  பாடத்திட்டம் மாற்றி அமைக்க வேண்டும் என்பது தனி நுழைவுத் தேர்வு தனி. எந்த பாடத்திட்டம் அமலில் உள்ளதோ அதிலிருந்து வினாத்தாள் அமைய வேண்டும். தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் உருவாக்கி நடத்திவரும் எல்லா உயர்கல்வி நிலையங்களுக்கும்  தமிழ்நாட்டு அரசின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை மட்டுமே NCERT பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து மாறுகிறது. அத்தோடு NCERT பாடதிட்டம் என்பதும் தமிழ்நாடு பாடத்திட்டத்திற்கும் முற்றிலும் தொடர்பு இல்லை என்று பேசுவதும் தவறானது.  வேளாண்மை, பொறியியல், கால்நடை, மருத்துவம் என முக்கியப் படிப்புகள் ஆகியவற்றில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் மாநில பாடத்திட்டத்தில் பயில வேண்டும். நீட் தேர்வுக்கு மாத்திரம் மத்திய பாடத்திட்டம். மாணவர்கள் படிக்காத பாடத்திட்டத்தில் தேர்வை நடத்திவிட்டு அவர்களை முட்டாள்கள் என்று முத்திரை குத்துவது சரியா பெரியசாமி சார்.

கேள்வி-18 நீட் தேர்வு வருவதற்கு முன்னால் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் 50% முதலாண்டு MBBS மாணவர்கள் Human Physiology, Anatomy and Biochemistry என்ற மூன்று பாடங்களில் ஏன் தேர்ச்சி பெறவில்லை?? நீட் தேர்வு மூலம் சென்ற மாணவர்கள் 2017ம் ஆண்டிலிருந்து எப்படி 80% க்கும் மேல் அந்த மூன்று படங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்???

புள்ளி விபர மோசடிகளில் பூந்து விளையாடதீர்கள். ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பதில் கூறலாம். எல்லோருக்கும் தெரிந்த எளிய ஆதாரத்தோடு ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு நீங்கள் பதில் கூறுங்கள். நீட் தேர்வு எழுதாமல் நீங்கள் சொல்வது போல் மனப்பாடக் கல்வி 11 வகுப்பு பாடங்களை  படிக்காமல் மருத்துவக் கல்லூரியில்  சேர்ந்து படித்து மருத்துவர்கள் ஆனதோடு PGநீட் தேர்வில் தமிழ் நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் தேர்வானார்களே! அது எப்படி என்று கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் சார்.

கேள்வி-19: நம் கல்விமுறை மனப்பாடம் செய்யும் கல்விமுறை என்று பட்டவர்த்தனமாக தெரியும் பொழுது அதைவைத்து மருத்துவ மாணவர்களை தேர்தெடுப்பது சரியா? உண்மையான கல்வியாளர்களை வைத்து ஒரு சிறந்த கல்விமுறையை கொண்டு வர வேண்டியது ஒரு அறிவார்ந்த சமூகத்தின் கடமை அல்லவா? நீட் தேர்வுமுறை சரியில்லை என்றால் அதில் உள்ள குறைகளை மத்திய அரசிடம் கூறி அதை மாற்றுவதும் நம் கடமை அல்லவா? கல்வியின் தரம் சம்பந்தமாக இதுவரையில் எந்த தமிழ்நாட்டு அரசியல்வாதியோ அல்லது போராளிகளோ போராட்டம் நடத்தியுள்ளார்களா? அல்லது அதை பற்றியாவது பேசியுள்ளார்களா? தயவுசெய்து யோசியுங்கள்!

முதலில் தரம் என்பதற்கு தரமான விளக்கம் ஒன்றை சொல்லுங்கள். ஆறாம் வகுப்பு முதல் நீட் தேர்வு தனிப் பயிற்சி குடிசை தொழில்கள் போல் நடக்கிறது. தனிப் பயிற்சி பெறாத எத்தனை பேர் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர்? மனப்பாடக் கல்வி முறைக்கு மாற்றான முறையில் நீங்கள் கூறும் அறிவார்ந்த முறைக்கு எதற்கு இராஜஸ்தான் கோட்டாவில் 1.75 இலட்சம் பேர் பயிலும் குடிசை தொழில். ஆகாஷ் எதற்கு! சைத்தன்யா எதற்கு? சரி அது போகட்டும். நீட் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெற்ற ஒருவர் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்கிறார். ஒருவர் குறைந்த பட்ச பாஸ் மார்க். 50 விழுக்காடை வைத்துக் கொண்டு தனியார் கல்லூரியில் சேர்கிறார். இருவரும் ஒரே தரமான மருத்துவர்களா? மருத்துவருக்கு தேவை அர்பணிப்பு. சேவை மனம். இதனை பரிசோதிக்கும் நீட் கேள்விகள் இருக்கிறதா?

கேள்வி-20: நம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒரு சிறிய ஆராய்ச்சி நடத்தி அதை சரிசெய்யும்  முறைகளை என் மாணவர்களிடம் செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறேன். அதுபோல் நீட் போன்ற திறனறி தேர்வுகள் ஒரு சிறந்த மருத்துவரை உருவாக்குவதில் எப்படி பங்காற்றுகின்றன என்று சில Case study களையும் மருத்துவ படிப்பு படிக்கும் என் மாணவர்கள் மூலம் செய்துள்ளேன். இந்த பதிவு மிக நீளமாக இருப்பதால் அந்த தகவல்களை வேறொரு பதிவில் பகிர்கிறேன். இந்த பதிவில் உள்ள அனைத்து விசயங்களும் என் அனுபவத்தில் கிடைத்த தகவல்கள் மற்றும் மனதில் இருந்த கேள்விகள். நான் கொடுத்த எண்களில் மிக சிறிய தவறுகள் இருக்கலாம். 

முதலில் தயவு செய்து அதனைப் பதிவிடுங்கள். பிறகு பேசலாம். இந்த பதிவு உங்களுக்கு நியாயமாக தெரிந்தால் மக்களின் தயவுசெய்து பகிருங்கள்.உங்கள் கேள்விகளுக்கு எங்கள் பதில்கள் திருப்திகரமாக இருந்தால் அதனை ஒப்புக் கொள்வீர்களா? புதிய கேள்விகளை இப்படி கேட்டுக் கொண்டே இருப்பீர்களா? 

சரிங்க சார். இப்போது ஐஐடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?  தாங்கள் பள்ளிக் கல்வி உயர் கல்வி எங்கே படித்தீர்கள்? பள்ளிக் கல்வி எங்கே படித்தீர்கள்?  கூகுளில் தேடினால் நீங்கள் ஐஐடியில் முனைவர் பட்டம் படிப்பதாக வருகிறது.  அந்த முனைவர் பட்டம் படிக்கும் பெரியசாமி தானா ?

கேள்விகள்: Dr. T. பெரியசாமி., M.Tech., Ph.D(IIT Madras) என்று கூறப்படுகிறது.

பதில்கள்: நா. மணி மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

நீட்: முனைவரின் கேள்விகளும் பேராசிரியரின் பதில்களும்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 20 ஜுன் 2021