மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

3வது அலை அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்: சுகாதாரச் செயலாளர்!

3வது அலை அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்: சுகாதாரச் செயலாளர்!

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்று எண்ணி அலட்சியம் காட்ட வேண்டாம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை இன்று(ஜூன் 20) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

அங்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர், மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவையும், அங்கு குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவக் கருவிகள், ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன்,சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியோடு 250 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத காரணத்தில் மூன்றாவது அலையில் அவர்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதனால், குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மூன்றாவது அலை குழந்தைகளைதான் பாதிக்கும் என்று எண்ணி மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். மூன்றாவது அலை அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். அதனால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஆக்சிஜன் வசதியுடன், குறைந்தது 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான உள்கட்டமைப்போடு மருத்துவ பணியாளர்கள் முழு வீச்சில் செயல்படுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “கோயம்பேடு காய்கறி வணிகர்கள், காசிமேடு மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதுபோன்று தடுப்பூசி முகாம்களை நடத்த மற்ற வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும் விரும்பினால், முகாம் நடத்த மாநகராட்சி தயாராக உள்ளது.

சென்னையில் நடைபெறும் திருமணங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளோம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று பேசினார்.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என்றும், அடுத்த 6-8 வாரங்களில் மூன்றாவது அலை தாக்கக் கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 20 ஜுன் 2021