மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

சிவசங்கர் பாபா கைது: தடுக்க நடந்த முயற்சிகள்!

சிவசங்கர் பாபா கைது: தடுக்க நடந்த முயற்சிகள்!

போக்சோ சட்டத்தில் ஜூன் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இவரது கைதைத் தடுக்க நடந்த முயற்சிகளும், கைதுபற்றி காவல்துறை மேலிடமும் ஆட்சி மேலிடமும் நடத்திய கருத்துப் பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களும் தற்போது நமது விசாரணையில் கிடைத்துள்ளன.

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் சர்ச்சைக்குப் பிறகு சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் நடந்த,நடந்துவரும் பாலியல் தொந்தரவுகள் பற்றி அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திலும், காவல்துறையிலும் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தார்கள். சமூக தளங்களில் இவை பரபரப்பாக விவாதிக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் சிவசங்கர் பாபாவுடனேயே சில மாதங்கள் இருந்து அவருக்கு நம்பகமான ஒருவர், சிவசங்கர் பாபாவை பற்பல சந்தர்ப்பங்களில் எடுத்த வீடியோக்கள் காவல்துறை உயரதிகாரிகளின் பார்வைக்குப் போனது.

சேலை கட்டிய பெண்களுடன் சிவசங்கர் பாபா ஆபாசமாகவும், விரசமாகவும் மேற்கொள்ளும் செயல்பாடுகளை வீடியோவில் பதிவு செய்து அதை ஒரு தொகுப்பாக்கி அந்த நபர் போலீஸ் உயர்திகாரிகளுக்கு அனுப்பியிருந்தார். அதில் மாணவிகளுமுண்டு, மாணவிகளின் பெற்றோர்களாகிய சிஷ்யைகளும் உண்டு. சிவசங்கர் பாபா மது அருந்திக் கொண்டு அந்த மாணவிகளை மடியில் கிடத்தில் கொண்டு, அவர்களின் மார்புகளின் மீது கை வைப்பது அப்போது அந்த பெண்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்க இயலாமல் தவிப்பது எல்லாமே அந்த வீடியோவில் பதிவாகியிருக்கின்றன.

இதற்கிடையில் சிவசங்கர் பாபா மீதான புகார்கள் அதிகமாகின. அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என தமிழக ஆட்சியாளர்களை அரசியல்வாதிகள், முக்கியப் புள்ளிகள் பலர் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். ‘இப்பதான் ஆட்சிக்கு வந்திருக்கீங்க. அதுக்குள்ள ஒரு சாமியார் மீது நடவடிக்கை எடுத்தீங்கன்னா ஏற்கனவே இந்து விரோத கட்சினு உங்க மீது விமர்சனம் இருக்கு. அதை மீண்டும் நிரூபிக்கிற மாதிரி ஆயிடும். அதனால கொஞ்சம் பாத்துக்கங்க’ என்று சொன்னவர்களும் உண்டு. ‘சிவசங்கர் பாபா இந்து பாஜக ஆதரவு சாமியாரெல்லாம் கிடையாது.அவர் பல தலித் பசங்களை இலவசமா படிக்க வச்சிக்கிட்டிருக்காரு. மேலும் அவர் நடத்திவச்ச திருமணங்கள்ல பல சாதிமறுப்புத் திருமணங்கள்தான். திராவிட கொள்கையைதான் அவர் ஆன்மீக வடிவத்துல செஞ்சிக்கிட்டிருக்காரு. அதனால அவர் மேல இப்ப நடவடிக்கை வேண்டாமே?’என்று இன்னொரு வகையிலும் பாபாவின் கைதைத் தடுக்க, பாபாவின் தமிழக சிஷ்யர்கள் சிலரும் ஆட்சியின் முக்கியஸ்தர்களைத் தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார்கள்.

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது ஆட்சிக்கு வந்து இவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்ற ஒரு சிறு தயக்கம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. அப்போதுதான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் ஆபாச வீடியோக்களை ஆராய்ந்து, அது ஒரிஜினல்தான் என்று உறுதி செய்துகொண்ட காவல்துறை இதுகுறித்து ஆட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பியது. மேலும் அவர் மாணவிகளை குறிவைத்து பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டது பற்றியும் உறுதியான தகவல்களை ஆட்சி மேலிடத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகுதான், “அப்படியென்றால் யாருக்காகவும் தயங்க வேண்டாம். நடவடிக்கையைத் தொடருங்கள்”என்று க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. இந்த உத்தரவு காரணமாகவே அடுத்தடுத்து விசாரணை, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தனிப்படை உத்தரகண்ட் அனுப்பப்பட்டு, பின் டெல்லி சென்று அங்கே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சிவசங்கர் பாபாவை கைது செய்தது தமிழக சிபிசிஐடி போலீஸ் டீம்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 20 ஜுன் 2021