மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் இன்று (ஜூன் 20) கைது செய்தனர்.

சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இவர் கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்தார்.

அதில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி ஏமாற்றிவிட்டதாகவும், மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும், ரவுடிகள் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து மணிகண்டன் மீது, சட்டப்பிரிவு 313- பெண்களின் அனுமதியின்றி கருச்சிதைவு, 323- அடித்து காயம் ஏற்படுத்துவது, 417- மோசடி, 376- பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், 67(எ) - தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் தலைமறைவான மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். அதில் பணம் பறிக்கும் நோக்கில் என் மீது நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அதுபோன்று மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று நடிகை சாந்தினி மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களைக் கடந்த ஜூன் 16ஆம் தேதி விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது என அவரது முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா, மணிகண்டனைக் கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில் இன்ஸ்பெக்டர் முனுசாமி தலைமையிலான போலீசார் மணிகண்டனின் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கும், இன்ஸ்பெக்டர் தமிழ்மணி தலைமையிலான போலீசார் மதுரைக்கும், இன்ஸ்பெக்டர் ராமசுப்பு தலைமையிலான போலீசார் திருநெல்வேலிக்கும், இன்ஸ்பெக்டர் வீரகுமார் தலைமையிலான போலீசார் பெங்களூருவுக்கும் விரைந்தனர். இவர்களை ஒரே நேரத்தில் நேற்று காலை, 6 மணிக்கு துணை ஆணையர் விக்ரமன் அனுப்பி வைத்தார்.

இந்த 4 தனிப்படை போலீசாரும், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலையில், பெங்களூருவில் வைத்து இன்ஸ்பெக்டர் வீரகுமார் தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். அங்கிருந்து சென்னை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அழைத்து வரப்படும் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

ஞாயிறு 20 ஜுன் 2021