மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

கலைஞரின் புதையல்: வைரலாகும் குறிப்பு!

கலைஞரின்  புதையல்: வைரலாகும் குறிப்பு!

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பிரபுசங்கர், முன்னாள் முதல்வர் கலைஞர் எம்எல்ஏவாக இருந்தபோது எழுதிய குறிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கலைஞர் தனது கைப்பட எழுதிய இந்த குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்சியர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் வேங்காம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது கலைஞர் எழுதிய குறிப்பு ஒன்று ஆட்சியருக்கு கிடைத்தது.

அதைப் பார்த்து வியந்துபோன ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில், கலைஞர் கைப்பட எழுதி இருந்த அந்த ஆய்வு குறிப்பேட்டை பகிர்ந்து, "வேங்காம்பட்டி என்ற கிராமத்தில் ஆட்சியராக எனது முதல் ஆய்வின் போது இந்த புதையலை கண்டேன். 1959ல் கலைஞர் குளித்தலை எம்எல்ஏவாக இருந்தபோது எழுதிய ஆய்வுக் குறிப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

கலைஞர் எழுதியிருந்த அந்தக் குறிப்பில்,

"மு.கருணாநிதி எம்.எல்.ஏ,

இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்பப் பாடசாலையைப் பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107ல் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்தப் பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப் போயிருக்கின்றன. அவை உடனடியாகக் கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாகப் பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாகக் கவனிக்கப்படுதல் நன்று" என எழுதி, 'அன்புள்ள மு.கருணாநிதி' , 26.6.1959 என கையெழுத்திட்டுள்ளார்.

62 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவர்களின் நலனுக்காகக் கலைஞர் எழுதிய இந்த குறிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட திமுகவினர் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

ஞாயிறு 20 ஜுன் 2021