‘ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி’: பாஜக அலுவலகம் முற்றுகை!

politics

புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் இன்று (ஜூன் 19) பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை. அமைச்சர்கள் யார் யார் என்றும் அறிவிக்கப்படவில்லை.

புதுச்சேரி பாஜகவுக்கும் என்ஆர் காங்கிரசுக்கும் இடையே அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி பங்கிட்டுக் கொள்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியாக பாஜகவுக்குச் சபாநாயகர் பதவி மற்றும் இரண்டு அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த சூழலில் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ரங்கசாமி, அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்க ஜாதகம் பார்த்துள்ளார்.  என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜாதகத்தை மட்டும் அல்லாமல் பாஜக எம்எல்ஏக்கள், நமச்சிவாயம், சாய் சரவணன் மற்றும் ஜான்குமார் ஆகியோர் ஜாதகத்தையும் பார்த்துள்ளார்.

இதில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் ஆகியோரது ஜாதகம் நன்றாக உள்ளது என பாஜக தலைமைக்குப் பரிந்துரைத்துள்ளார். இதனால் அமைச்சர் பதவிக்காகக் காத்திருந்த ஜான்குமார் விரக்தியில் உள்ளார். இதுகுறித்து மின்னம்பலத்தில் [புதுச்சேரி அமைச்சர்கள் யார் யார்? ஜாதகம் பார்க்கும் ரங்கசாமி](https://www.minnambalam.com/politics/2021/06/18/29/Rangasamy-new-cabinet-participate-ministers) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் ஜான்குமாருக்கு பதில் வேறு ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகத் தகவல் கசிந்தது. இதையறிந்த அவரது தொகுதியான காமராஜ் நகர் தொகுதி மற்றும் நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த ஜான்குமார் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது ஜான்குமாருக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாஜக அலுவலகம் முன்பு இருந்த பெயர்ப் பலகையைக் கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைச் சமாதான படுத்தியுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மேலிடத்திற்குத் தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுபோன்று நெல்லித்தோப்பு சிக்னல் பகுதியிலும் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க கேட்டு  அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைய செய்தனர்.

திடீரென ஜான்குமார் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *