மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

‘நீட்’டுக்கு தயாராக வேண்டிய சூழல்: மா.சுப்பிரமணியன்

‘நீட்’டுக்கு  தயாராக வேண்டிய சூழல்: மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு இந்த நிமிடம் வரை நடைமுறையில் இருப்பதால் மாணவர்கள் அதற்குத் தயாராக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வின் தாக்கம் , பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது. இந்த குழு ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான நேற்றைய சந்திப்பில்,நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், “நீட் பயிற்சியைத் தொடர கல்வித் துறை உத்தரவிட்டு இருப்பதாகவும், அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் மீண்டும் தொடங்கி உள்ளதாகவும், செய்தி வெளியாகியுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு என்ன காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டதோ, அந்தக் காரணம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இப்பொழுது அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சியை நடத்துவதன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசே நினைக்கிறதோ என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. தற்போதைய சூழலில் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளைச் சந்திப்பது என்பது மாணவ, மாணவியருக்கு, குறிப்பாக ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு மிகப்பெரிய சவால்.

எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வி உட்பட அனைத்து உயர் கல்விக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும், இலவச நீட் பயிற்சி என்று சொல்லி மாணவ, மாணவியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இன்று (ஜூன் 18) பேசியுள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஓபிஎஸ் துணை முதலமைச்சராக இருந்த போதுதான் நீட் தமிழகத்துக்குள் நுழைந்தது. முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தான், அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சியை உருவாக்கினார். இந்த சூழலில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று ஓபிஎஸ் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது.

எனவே இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் இருக்கிறது. அதற்குத் தயாராக வேண்டிய சூழ்நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது அரசின் முடிவு, எண்ணம். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞர், இதுபோன்ற தேர்வுகளை ரத்து செய்ய டாக்டர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து, அதன் அறிக்கைகளைப் பெற்று சட்ட முன்வடிவு கொண்டு வந்து, அதை நிறைவேற்றினார் என்ற பெருமை திமுகவுக்கு உண்டு.

அதேபோன்று ஒரு நடவடிக்கையாகத்தான், முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த குழுவுக்கு வழங்கப்பட்ட ஒருமாத கால அவகாசம் என்பது கால தாமதம் ஏற்படுத்தும் செயல் அல்ல. குழு அமைக்கப்பட்ட ஒரு வாரத்தில் 4 அமர்வுகளில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நீட்டை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக நிறைவேற்றி அனுப்பிய மசோதா குடியரசுத் தலைவரிடம் சென்று நின்று போன போது, இந்த கவலை அவர்களிடத்தில் இல்லை. அதேபோன்று குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பும் போது இந்த வேகம் இல்லை.

கடந்த காலத்தில் வெறுமனே, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதால் தான் அதை மத்திய அமைச்சகம் திருப்பி அனுப்பி வைத்தது. எனவே 2006 நடைமுறை, அதாவது அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கையை வைத்து மேல் நடவடிக்கை எடுத்துத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோ, அதேபோன்று முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான அறிக்கைக்கு வலுவான அடிப்படை இருக்கும். அதைவைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 18 ஜுன் 2021