|கோவைக்கு எய்ம்ஸ்: ஈஸ்வரனின் இன்னொரு கோரிக்கை!

politics

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 17) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, தமிழகத்துக்கான 25 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கையளித்தார். அந்த கோரிக்கைகளில் ஒன்று, ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து செயல்படுத்த வேண்டும், கோவைக்கு புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்’என்பது. ஸ்டாலினின் இந்த கோரிக்கை கொங்கு மண்டலத்தில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்குமண்டலத்தில் அதிமுகவே பல தொகுதிகளில் வெற்றிபெற்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் பத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தோற்று, அதிமுக கூட்டணியே வென்றது. அதேபோல, சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணியே வென்றது. கொங்கு மண்டலத்தில்தான் திமுக கூட்டணி குறைவான தொகுதிகளில் வென்றது. இந்த நிலையில் கோவைக்கு எய்ம்ஸ் வேண்டுமென்று தமிழக முதல்வர் டெல்லி பயணத்தில் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் புதிய கோரிக்கை ஒன்றை எழுப்பியிருக்கிறார். அவர் இன்று (ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் அவர்கள் பாரத பிரதமர் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அந்த கோரிக்கைகளில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார். இது கொங்கு மண்டல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு கொங்கு மண்டலத்தை புறக்கணிக்கிறது என்று கூறியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது”என்றவர் மேலும்,

“கடந்த அதிமுக ஆட்சியில் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்தோம். அதற்காக போராட்டத்தை முன்னெடுத்தோம். மத்திய அரசு பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆய்வு செய்து தயாராக இருந்தது. ஆனால் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் உட்பட முன்னாள் அமைச்சர்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அதிகமாக இருந்தும் ஒருவர் கூட கொங்கு மண்டலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று குரல் கொடுக்கவில்லை.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலமான கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை வேண்டுமென்று கேட்டிருக்கிறார். இந்த கோரிக்கை யாரும் எதிர்பார்க்காத ஒன்று. எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைக்கப்பட்டால் கொங்கு மண்டல மாவட்டங்கள் அனைத்திற்கும் மையமாக இருக்கும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. எனவே தமிழக முதலமைச்சர் கோவைக்கான எய்ம்ஸ் மருத்துவமனை கோரிக்கையை ஈரோடு பெருந்துறைக்கு பரிசீலிக்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *