மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

ராஜேஸ் தாஸ் வழக்கு : 6 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு!

ராஜேஸ் தாஸ் வழக்கு : 6 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் வழக்கில், புலன் விசாரணையை முடித்து ஆறு வாரங்களில் இறுதி அறிக்கை அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ் தாஸ், பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கடந்த மார்ச் 16ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான முதல்கட்ட அறிக்கையை சிபிசிஐடி சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை விரைந்து முடிக்க சிபிசிஐடிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தினார்.

இவ்வழக்கு மீண்டும் இன்று (ஜூன் 18) விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜரானார். அவர், "கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பின் இரண்டு அதிகாரிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஐந்து அதிகாரிகளிடமும் இரண்டு பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அதுபோன்று மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தடயவியல் அறிக்கையைப் பெறமுடியவில்லை” என்று தெரிவித்தார்.

அப்போது, தடயவியல் அறிக்கை மூன்று வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால் புலன் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய 6 வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் காணொளி காட்சி மூலம் ஆஜரான புலன்விசாரணை அதிகாரி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு தனது அறிக்கையை ஏற்கனவே உள்துறை செயலாளரிடம் சமர்ப்பித்து விட்டது. அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராஜேஸ் தாஸுக்கு எதிரான பாலியல் வழக்கின் புலன் விசாரணையை முடித்து ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூலை 30ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 18 ஜுன் 2021