மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

ரேஷனில் கறுப்பு, பழுப்பு நிற அரிசிகளை வழங்கக் கூடாது!

ரேஷனில் கறுப்பு, பழுப்பு நிற அரிசிகளை வழங்கக் கூடாது!

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்றும் கறுப்பு, பழுப்பு நிற அரிசிகளைப் பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நேற்று (ஜூன் 17) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நான்கு மாவட்டங்களின் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “கொரோனா காலத்தை சமாளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அனைத்து துறை பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சங்கங்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, அவர்களுக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குழு கடன்கள் மட்டுமல்லாமல் தனி விவசாயிகளுக்கும் கடன்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் ரூ.11,500 கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வெற்றிலை விவசாயிகளுக்கும் கடன் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். விவசாயிகளுக்குத் தட்டுப்பாடின்றி உரம், இடுபொருட்கள் போன்றவை வழங்க தேவையான அளவைவிட கூடுதலாக 2,000 டன் இருப்பு உள்ளது. விவசாயிகள் அல்லாதோருக்கு கடன் வழங்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை 99 சதவிகிதம் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது இரண்டாவது தவணையுடன், 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

சர்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றவும், புதிதாக ரேஷன் அட்டைகளை வழங்கவும், ரத்து செய்யப்பட்ட தனிநபர் குடும்ப அட்டைகளை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் மக்களுக்குத் தரமான அரிசி வழங்க வேண்டும். கறுப்பு மற்றும் பழுப்பு நிற அரிசிகளை வழங்கக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.

“திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் உள்ள இடர்பாடுகள் களையப்பட வேண்டும். அதிகாரிகள் வெளிப்படையான நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 18 ஜுன் 2021