மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

உடைபடும் தடுப்பூசி முற்றொருமையும் உடைக்கப்பட வேண்டிய 5ஜி முற்றுரிமையும்!

உடைபடும் தடுப்பூசி முற்றொருமையும் உடைக்கப்பட வேண்டிய 5ஜி முற்றுரிமையும்!

பற்றிப் பரவிய கொரோனாவையும் பல்கிப் பெருகிய மரணங்களையும் தடுக்க தமிழ்நாடும் மற்ற மாநிலங்களும் வேறு வழியின்றி மக்களை வீட்டுக்குள் முடக்கி ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றன. கிருமி உருமாற்றமும், அலை அலையாக வரும் இந்தத் தொற்று பரவலும் எப்போது முடியும் என்பதுதான் இப்போது எல்லோர் முன்னுள்ள கேள்வி. 50 விழுக்காடு திறன்கொண்ட சீனாவின் தடுப்பூசியை 75 விழுக்காடு மக்களுக்குச் செலுத்தி இந்தப் பரவலைத் தடுத்து நிறுத்த முடியும் என பிரேசில் நாட்டில் நடந்த ஆய்வு உறுதி செய்து இருக்கிறது. நடப்பில் உள்ள தடுப்பூசிகள் முழுமையாக தொற்றைத் தடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைத்து உயிரிழப்பைத் தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. மக்களும் தமது தடுப்பூசி தயக்கத்தை விடுத்து தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வரிசையில் நிற்கிறார்கள். தடுப்பூசிதான் கிடைக்கவில்லை.

புதிய தடுப்பூசி கொள்கை

தடுப்பூசி கொள்முதலுக்கு மாநிலங்களை ஆளாய் பறக்கவிட்டு அதனால் ஏற்பட்ட குளறுபடிகளாலும், அரசியல், நீதிமன்ற நெருக்கடிகளாலும் ஒன்றியம் கொள்முதலை தானே செய்யும் என அறிவித்து இருக்கிறது. அதிலும் பணக்காரர்களுக்கு 25 சதவிகிதம் தடுப்பூசி இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது. தமது நெருங்கிய மருந்து நிறுவன நண்பர்களும், தனியார் மருத்துவமனைகளும் உச்சபட்ச லாபம் அடைய வழிசெய்து கொடுத்திருக்கிறது. 140 கோடி இந்தியர்களில் தோராயமாக 10 கோடியாக உள்ள பணக்கார நடுத்தர வர்க்கத்துக்கு 25 சதவிகிதம் ஒதுக்கீடு செய்து முதலில் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முன்னுரிமை அளித்திருக்கிறது. மற்றவர்கள் பிழைத்திருந்தால் பின்னர் கிடைக்கும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்த ஏற்றத்தாழ்வான கொள்கை இவர்கள் கண்டுபிடித்ததும் அல்ல. இவர்கள் மட்டுமே பயன்படுத்துவதும் அல்ல. அமெரிக்க - ஐரோப்பிய மேற்குலக பணக்கார நாடுகள்தான் இவர்களின் முன்னோடியும் வழிகாட்டியும் ஆவார்கள்.

மேற்குலக சுயநல முற்றுரிமை கொள்கை

எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதியிருந்தால் உலகம் முழுக்க உற்பத்தியை அனுமதித்து தடுப்பூசி பற்றாக்குறையைத் தடுத்திருப்பார்கள். ஆனால், தடுப்பூசி உற்பத்தி தொழில்நுட்பத்தையும், உற்பத்தி மூலப்பொருட்களையும் தமது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மருந்து நிறுவனங்களுக்கு முற்றுரிமையை ஏற்படுத்திக்கொடுக்கிறது மேற்குலகம். அதிலும் உற்பத்தி ஆகும் அனைத்து தடுப்பூசிகளையும் தத்தமது நாட்டு மக்களுக்கு முதலில் செலுத்திய பின்பே ஏற்றுமதிக்கு அனுமதி எனத் தடுப்பூசி தேசிய (Vaccine Nationalism) கொள்கையை உருவாக்கி பணக்கார நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்திருக்கின்றன. ஏழை நாடுகளின் மக்கள் இவர்களுக்குப் பிறகு பணமிருந்தால் வாங்கி போட்டுக் கொள்ளலாம். மனிதர்களை உயிராகப் பார்க்காமல் சந்தையாகப் பார்த்து, நிறுவனங்களுக்குச் சந்தை முற்றுரிமையை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தக் கொள்கை, உலகத் தடுப்பூசி தட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இந்த மனிதாபிமானமற்ற கொள்கைக்குப் பணக்கார நாட்டு மக்களிடம் எதிர்ப்பு ஏற்படாமல் இருக்க அந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களிடம் சுயநல சிந்தனையை விதைக்கிறது.

தடுப்பூசி பார்ப்பனியம்

இந்தப் பணக்காரத் தடுப்பூசி நாடுகளின் கூட்டணியில் இணைந்துகொண்ட இந்தியா அவர்களை அப்படியே அடியொற்றி பின்பற்றி வருகிறது. உலக அளவில் அவர்கள் முற்றுரிமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் தடுப்பூசி உற்பத்தியை தமது இரு நண்பர்களுக்கு மட்டும் கொடுத்து உள்ளூரில் முற்றுரிமையை உருவாக்கியது ஒன்றிய பாஜக அரசு. வேறு நாடுகளின் மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டது. இப்போது மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை என்ற முன்னெடுப்பின் மூலம் தனது ஏற்றத்தாழ்வான பார்ப்பனிய சிந்தனையின் வழியில் செயல்படுத்துகிறது. தமது அரசியல் ஆதரவு தளத்தில் எந்த சலனமும் ஏற்படாமல் தடுத்து, தக்கவைக்க பார்க்கிறது. ஏழை எளிய மக்களைச் சோற்றுக்கு ஏங்க வைத்ததை இப்போது தடுப்பூசிக்குத் தவிக்க வைக்கிறது.

சீரம் மையத்தின் சறுக்கல்

ஆனால், இந்த உலக தடுப்பூசி கூட்டணிக்குள்ளும், உள்ளூர் அரசு - முதலாளி கூட்டுக்களவாணி கூட்டணிக்குள்ளும் போட்டி, உரசல்கள் இல்லாமல் இல்லை. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கிருமி வகைக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி வேலை செய்யாதது, அரிதான ரத்த உறைவு பிரச்சினை, அதனால் ஏற்பட்ட தடுப்பூசி தயக்கம் ஆகியவை சீரம் மையத்தின் கோவிஷீல்டுக்கான சந்தையைச் சரிய செய்தது. முக்கியமாக இந்தியாவில் கண்டறியப்பட்ட கிருமி வகைக்கு எதிராக குறைவான திறனைப் பெற்று இருப்பது அதன் எதிர்கால சந்தையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் எல்லோரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும் நீண்டகால நோக்கில் இதைச் சந்தைப்படுத்த முடியாது. வேறு மாற்றுத் தடுப்பூசிகள் வரும்போது மக்கள் இதைப் புறக்கணிப்பார்கள். இதையெல்லாம் கணக்கில்கொண்டு சீரம் மையம் மாற்று தடுப்பூசி உற்பத்திக்குத் தயாராகி வந்தது.

காரியவாத கோரிக்கை

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கிருமி வகைக்கு எதிராக 48 சதவிகிதம் திறன்கொண்ட அமெரிக்காவின் நோவாவேக்ஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய சீரம் மையம் முடிவெடுத்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் வெடித்த இரண்டாவது அலையின்போது எழுந்த சாதகமான அரசியல் சூழலைப் பயன்படுத்தி இதற்கான மூலப்பொருட்களை விடுவிக்குமாறு அதிபர் பைடனுக்கு சீரம் மையத்தின் பூனவல்லா கோரிக்கை வைத்தார். அவரின் நிர்வாகம் அதை நிராகரித்தது. உடனே சீனா உதவ முன்வந்து அந்நாட்டு அதிபர் மோடியிடம் பேசியதும் பைடன் இறங்கி வந்தார். ஆனால் கோவிஷீல்டுக்கான மூலப்பொருட்கள் கிடைத்ததே தவிர நோவாவேக்ஸுக்குக் கிடைக்கவில்லை.

உள்நாட்டு நெருக்கடி காரணமாக கோவி‌ஷீல்டு ஏற்றுமதிக்குத் தடை விதித்தது இந்தியா. ஆசிய தடுப்பூசி சந்தையைப் பிடித்து அரசியல் ரீதியாக வலுவடைந்து வரும் சீனாவை, இந்தியாவைக் கொண்டு தடுத்து நிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்திய தேவைக்கே இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதோடு தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்கி இந்தியப் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உடனடியாக உற்பத்தியைப் பெருக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டது. அதற்கான இடுபொருட்களை முதலில் அமெரிக்கா விடுவிக்க வேண்டும்.

அமெரிக்காவின் பதில் கோரிக்கை

முன்பு இந்தியச் சந்தையில் நுழைய முயன்ற அமெரிக்க நிறுவனங்களைப் பல காரணங்களைச் சொல்லி இந்தியா விரட்டியது. இந்தியச் சந்தையை தமது இரு நண்பர்களுக்கு மட்டுமானதாகப் பாதுகாத்து வந்தது. தற்போதைய இக்கட்டான சூழல் காரணமாக இணைப்பு சோதனை (Bridging Study) தேவை இல்லை; மேற்குலக நாடுகள் அல்லது உசுநி (WHO) அங்கீகரித்தால் போதும் என இறங்கி வந்தது. ஆனால் எங்களுக்கு Indemnityயும் வேண்டும் என்றன அமெரிக்க நிறுவனங்கள். “உசுநியால் அங்கீகரிக்கப்பட்ட” என்ற வார்த்தையையும் இணைத்ததன் மூலம் நாங்கள் அதனால் அங்கீகரிக்கப்பட்ட சீன தடுப்பூசியையும் இறக்குமதி செய்வோம் என அமெரிக்காவுக்கு மறைமுகமாக இந்தியா செய்தி விடுத்தது.

முடியாத பேரம்

இந்தச் சந்தைக்கும் உற்பத்தி மூலப்பொருட்களுக்குமான சச்சரவு முடிவுக்கு வராத நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு வாரக்கால அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போதும் திரும்பிய பிறகும் தடுப்பூசி குறித்த எந்த அறிவிப்பும் வெளி வரவில்லை. அதற்கு அடுத்த வாரம் நடந்த பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் முடிந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த நாடுகள் கூட்டாக ஆராய்ச்சி, உற்பத்தியை இந்தக் கூட்டமைப்பில் அரசியல் நடுநிலை கொண்ட நாடான தென்னாப்பிரிக்காவில் ஏற்படுத்தப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு அடுக்கடுக்கான அதிசயங்கள் நடந்தன.

கூட்டணி மாறிய சீரம்

கூட்டறிக்கை வந்த மறுகணமே சீரம் மையம் ரஷ்யாவின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரிடம் (DCGI) விண்ணப்பித்தது. விண்ணப்பித்த மூன்றாம் நாள் அனுமதியும் கிடைத்துவிட்டது. முன்பு கோவக்ஸின் தடுப்பூசி உற்பத்தியில் குறைபாடு இருப்பதாகக் கூறி வாங்க மறுத்த பிரேசில் அனுமதி அளித்து இருக்கிறது. கோவிஷீல்டு, நோவாவேக்ஸ், சனோபி ஆகிய மூன்று தடுப்பூசிகளை மட்டும் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. அப்படி என்றால் மற்ற தடுப்பூசி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் எங்கிருந்து வரும்?

கோவாக்ஸின் கூட்டு

இதுவரை கொடுக்கப்பட்ட தடுப்பூசியில் கோவாக்ஸினின் பங்கு 10 சதவிகிதம் மட்டுமே. காரணம்... 1. உற்பத்தி பெருக்கத்தில் (scale up) பிரச்சினை இருக்கலாம்; 2. உற்பத்திக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காமல் இருக்கலாம். இந்த நிலையில் கோவாக்ஸினை மேம்படுத்தவும், கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் சந்தைப்படுத்த அந்த நாடுகளில் அனுமதி பெறவும் அக்குஜென் என்ற கனடா நிறுவனத்துடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியா அமெரிக்கத் தடுப்பூசிகளைச் சந்தைப்படுத்த Indemnity கொடுக்கும் நிலையில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தடுப்பூசி சதுரங்க அரசியல்

இதன்மூலம் இந்தியா தன்மீது போடப்பட்ட கிடுக்கிப்பிடியை சீன துருப்புச்சீட்டைக் கொண்டு தளர்த்தியிருப்பது தெரிகிறது. இந்தச் சதுரங்க ஆட்டத்தில் தனக்கு எதிராக நிறுத்தப்பட்ட இந்தியக் காயைத் தனது வளையத்துக்குள் சீனா கொண்டு வந்திருக்கிறது. சோதனை மைய கிருமி கசிவு (Lab virus leak) போன்ற அரசியல் தாக்குதல் மூலம் அமெரிக்கா, சீனாவைத் தனிமைப்படுத்த முயன்றது. தடுப்பூசி தொழில்நுட்பம், உற்பத்தியைத் தன்னிடம் வைத்துக்கொண்டு முற்றுரிமையை ஏற்படுத்தி அரசியல் ஆதிக்கம் செய்ய முயன்றது. அதை உடைக்க எதிரி எதைக்கொண்டு கட்டுப்படுத்துகிறானோ அதை எல்லோருக்கும் கொடுப்பது என்ற தந்திரத்தை சீனா கையாண்டது.

தடுப்பூசி தொழில்நுட்பத்தையும், மொத்த உற்பத்தி சங்கிலியையும் பூகோள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளான தெற்காசியாவின் பாகிஸ்தானுக்கும், கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியாவுக்கும், மத்திய கிழக்கின் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், தென் அமெரிக்காவின் பிரேசிலுக்கும், ஆப்பிரிக்காவின் எகிப்து, தென்னாப்பிரிக்காவுக்கும் விரிவுபடுத்தியது. ஆசிய கண்டத்தில் விடுபட்ட இந்தியாவையும் இப்போது தன்னுடன் இணைத்திருக்கிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா தவிர்த்து மற்ற கண்டங்களில் தனது அரசியலை நிலைநாட்டி இருக்கிறது. இதை எதிர்கொள்ள இனி அமெரிக்கா தனது பிடியைத் தளர்த்தி இறங்கி வருவதைத் தவிர வேறு வழியில்லை. இது கிட்டத்தட்ட உலக அளவில் ஏற்படுத்தப்பட்ட தடுப்பூசி முற்றொருமையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

தடுப்பூசிக்குத் தமிழகத்தின் போராட்டம்

உலக முற்றுரிமை முடிவை நோக்கி நகர்ந்தாலும் இந்தியாவுக்குள் ஒன்றியம் தனது நண்பர்களுக்கு ஏற்படுத்திய முற்றுரிமையை இப்போது வரை உடையாமல் காத்து வருகிறது. கட்சி மாறினாலும் அதன் பலனை சந்தையில் ஏற்கனவே உள்ளவர்களுக்கே கொடுக்கிறது. சீரம் மையம் மூன்று நாட்களில் ரஷ்யத் தடுப்பூசியைத் தயாரிக்க அனுமதி பெறுகிறது. ஆனால், தமிழ்நாடு செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிலையத்தை ஏற்று நடத்த அனுமதி கோரி வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. கடைசியாக தாங்களே தனியாருடன் இணைந்து உற்பத்தி செய்யப்போவதாகக் கூறியது. அதற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் பல கடிதங்கள் எழுதி மீண்டும் மீண்டும் நினைவுறுத்த வேண்டி வந்தது. பின்பு தமிழ்நாடு அரசு தொழில்நுட்பத்துக்கு சீரம் மையம், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு குன்னூர் சென்று பாஸ்டர் தடுப்பூசி மையத்தை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மூலப்பொருட்கள் கொடுத்தால் உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறுகிறார்.

இதுவரை இரண்டு உற்பத்தி நிலையங்களிலும் உற்பத்தி செய்ய எந்த உறுதியான பதிலையோ, அறிவிப்பையோ ஒன்றிய பாஜக அரசு வெளியிடவில்லை. மகாராட்டிரத்தைப் போலல்லாமல் தமிழ்நாடு சீனாவை விலக்கி உலக டெண்டரை அறிவிக்கவில்லை என்றாலும் எந்த அமெரிக்க, சீன நிறுவனமும் இதில் பங்கேற்கவில்லை. சீனாவைப் பொறுத்தவரை மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. இப்போது தமிழ்நாடு. தடுப்பூசிக்கு ஒன்றியத்திடம் கையேந்தி காத்துக் கொண்டிருக்கிறது.

முடிவுக்கு வருமா?

தனியான தமிழ்நாட்டின் தடுப்பூசி உற்பத்திக்கான போராட்டம் வெற்றி பெறுவதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை. அவர்கள் இந்த உயிர்போகும் சூழலிலும் தனது கூட்டுக்களவாணித்தன தனியார்மய கொள்கையை விட்டுக்கொடுக்க தயாரில்லை. மேற்குலகுடன் கட்டிய கூட்டணி தோல்வியடைந்து எதிர்க்கூட்டணியின் காலில் விழுந்தாலும் அதன் பலன்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் எண்ணம் துளியும் இன்றி தமது இந்திய முதலாளி நண்பர்களுக்குக் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதை உடைக்க மற்ற மாநிலங்களுடன் இணைந்து இதற்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதை தவிர, தமிழ்நாட்டுக்கு வேறு வழியில்லை. சிறு குறு நிறுவனங்களைக் காக்க தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்ற பாஜக அல்லாத மாநிலங்களுக்கு கடிதம் எழுதி இருப்பது, இதை அரசு ஏற்கனவே உணர்ந்து இருப்பதைக் காட்டுகிறது. இதைத் தேர்தல் வரவிருக்கும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்க்கட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அடிமடியில் கைவைத்தால்தான் அவர்கள் இறங்கி வருவார்கள்.

படிக்க வேண்டிய பாடமும் பார்க்க வேண்டிய இடமும்!

இந்தப் பெருந்தொற்று காலத்தில் மேற்குலகுடன் இணைந்து வெறும் தடுப்பூசி முற்றுரிமைக் கொள்கையை மட்டும் இவர்கள் கட்டவில்லை. எதிர்கால பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கப்போகும் 5ஜி கூட்டணியையும் கட்டி இருக்கிறார்கள். இந்திய 5ஜி கட்டமைப்பை ஏற்படுத்த சீனாவின் ஹோவாவெய் மற்றும் ZTE நிறுவனங்களைப் பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. நோக்கியா, சாம்சங் ஆகிய நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற நிறுவனங்கள் எல்லாம் ஒழித்துக் கட்டப்பட்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே சேவை வழங்குகின்றன. மென்பொருட்களை பொறுத்தவரை சீன நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் இருக்கின்றன.

வன்பொருட்களில் அமெரிக்க சார்பு நிறுவனங்களும், தொலைத்தொடர்பு துறையில் வெறும் மூன்று நிறுவனங்களும், மென்பொருட்களில் அமெரிக்க நிறுவனங்களும் மட்டுமே இந்தியச் சந்தையில் முற்றுரிமை பெற்று இருப்பது மக்களை மொத்தமாக சுரண்டி தெருவில் நிறுத்துவதில்தான் போய் முடியும். இதற்கு எதிரான மக்களின் கோபத்தைத் தணிக்க முயன்றால், தற்போது தடுப்பூசிக்குக் கழுத்தை நெரித்ததைப் போலவே நாளை இந்த பொருளுக்கு ஏற்றுமதி தடை என்று இந்தியாவை நெரிப்பார்கள். இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நாளை சீன நிறுவனங்களை ஒன்றிய அரசு அனுமதித்தாலும் இந்தியாவில் இப்போது இருக்கும் மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முற்றுரிமை அப்படியே தொடரும்.

தமிழ்நாடு தனக்கான பொருளாதார பாதையில் போக விரும்பும் நிலையில் அவர்களின் நலனுடன் முழுமையாகப் பொருந்திப் போகும் வாய்ப்பு மிகவும் குறைவு. தமிழ்நாட்டின் தடுப்பூசி உற்பத்தி முயற்சிக்குத் தற்போது போடும் முட்டுக்கட்டையைப் போல எதிர்காலத்தில் இன்னும் பல குறுக்கீடுகளை சந்திக்க நேரிடும். ஆகவே வரப்போகும் 2024 தேர்தலின்போது அரசியல் சார்ந்து மட்டும் அணியாகாமல் இந்தப் பொருளாதார காரணியையும் கணக்கில்கொள்ள வேண்டும்.

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

வெள்ளி 18 ஜுன் 2021