மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 ஜுன் 2021

மின் தடை ஏற்படுவது ஏன்? : அமைச்சர் விளக்கம்!

மின் தடை ஏற்படுவது ஏன்? : அமைச்சர் விளக்கம்!

கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தால்தான் தற்போது மின் தடை ஏற்படுகிறது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

புதிய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின் தடை, மின் கட்டணம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத, மின்பற்றாக்குறை இல்லாத, கேட்கும் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கும் மாநிலமாக மாற்றுமளவுக்கு மின்சாரத்துறையை மேம்படுத்த வேண்டுமென என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சமீப காலத்தில் ஆங்காங்கே மின் தடை ஏற்படுகிறது என புகார்கள் வருகிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் 9 மாதங்களாக மாதந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. அதற்கு தேவையான உதிரி பாகங்களும், மின்பொருட்களும் கொள்முதல் செய்யப்படவில்லை. கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணி செய்யாததுதான் மின் தடைக்கு காரணம். இதுகுறித்து ஒரு வாரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மின்சார பராமரிப்பு பணிகள் வரும் ஜுன் 19ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்குள் போர்கால அடிப்படையில் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒட்டுமொத்த மின் வாரியத்தின் இயந்திரங்களும் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையொட்டி மாவட்ட வாரியாக செய்ய வேண்டிய பணிகள், அதற்கான நேரம் உள்ளிட்ட விவரங்களை தயார் செய்துள்ளோம். ஒரு பகுதியில் வேலை நடக்கும் போது, மற்றொரு பகுதியில் மின் தடை ஏற்படாது. இது குறித்து அப்பகுதி மக்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும். 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மட்டுமே மின் தடை இருக்கும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “ தமிழகத்தில் 83, 553 மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டியுள்ளது. பழுதடைந்த நிலையில் 36, 737 மின்கம்பங்கள் உள்ளன. 25, 260 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் 29,995 உள்ளன. பழுதடைந்த 1,023 மின்பெட்டிகள் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. 33, 356 பலவீனமான பீங்கான் இன்சுலேட்டர்கள் மாற்ற வேண்டிய நிலையில் உள்ளன. 1030 துணை மின் நிலையங்கள் பராமரிக்க வேண்டியுள்ளது. இந்தளவிற்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் மின்வாரியம் உள்ளது. இதற்கு காரணம் முந்தைய அரசு பராமரிப்பு பணி செய்யாததுதான் காரணம்.

2.77 கோடி இணைப்புகள் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளன. இவர்கள் கட்டணம் செலுத்த மூன்று விதமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இப்படியொரு வாய்ப்பு தமிழகத்தில் முதல்முறை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 777 பேர் தங்களுடைய மின் கட்டணம் அதிகமிருப்பதாக புகார் தெரிவித்தனர். அந்த வாய்ப்பின் மூலம், 10 லட்சம் பேர் உரிய கட்டணத்தை செலுத்துவதற்கான பயனை அடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தரவுகள்படி 1லட்சத்து 33ஆயிரம் கோடி கடனில் மின்சாரத்துறை உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள்படி மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை நிறைவேற்றப்படுவது குறித்து சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும்” என்று கூறியவர், “கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலம் என்ற பதிலை தொடர்ந்து கூறி வந்தார்கள். நாம் மின் மிகை மாநிலம் கிடையாது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம். கடந்த ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்திருந்தால், விவசாயிகளுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கியிருக்க வேண்டும். ஏன் கொடுக்கவில்லை? இதுசம்பந்தமாகவும், நீங்கள் கேட்கிற அனைத்து கேள்விகளுக்கும் சட்டப்பேரவையில் பதிலளிக்கப்படும்.

பெரிய அளவில் ஊழியர்கள் இருக்கும் துறையில் ஒருசிலர் செய்யும் தவறுகளால், மின் கட்டணத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சரியாக கட்டணத்தை நிர்ணயிக்காதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கால அவகாசத்துக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது” என தெரிவித்தார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 17 ஜுன் 2021