மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 ஜுன் 2021

கோயில் திறப்பு: அமைச்சர் பேட்டி!

கோயில் திறப்பு: அமைச்சர் பேட்டி!

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் வெகு விரைவில் கோயில்கள் திறக்கப்படும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில், உச்சிப் பிள்ளையார் கோயில்களில் நேற்று (ஜூன் 16) அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் விஜயராணி, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “திமுக தேர்தல் அறிக்கையில் ஐந்து கோயில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, சோளிங்கர் நரசிம்மர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருநீர்மலை கோயில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில் ஆகிய ஐந்து கோயில்களில் ரோப் கார் அமைப்பதற்கு ஆய்வு பணி மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மலைக்கோட்டையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள கோயில்களிலும் ஆய்வு முடித்த பின்னர் இதன் அறிக்கைகள் முதல்வருக்கு சமர்ப்பிக்கப்படும். இந்த திட்டம் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தக் கோயில்களில் விரைவில் ரோப் கார் வசதி அமைப்பதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுக்கும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “ஆன்மீகம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்யத் துடிக்கும் சக்திகளுக்கு இதுபோன்ற செயல்பாடுகள் சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும். ஆனால், வார்த்தை ஜாலங்கள் அல்ல; கண்டிப்பாக செயல்படுத்தக் கூடிய திட்டங்களைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது.

தமிழ்நாட்டில் சைவம், வைணவம் என ஆறு ஆகமப் பள்ளிகள் இருக்கின்றன. அதை புனரமைத்து மீண்டும் செயல்படுத்த தயாராக இருக்கிறோம். இந்தப் பள்ளிகளில் சேருவதற்கு வரும் விண்ணப்பங்களைப் பொறுத்து ஆகமப் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

கோயில்கள் தொடர்பாக இதுவரை 1,600 மனுக்கள் வந்துள்ளன. அதற்கென்று தனியாக ஒரு குழு அமைத்து வாரந்தோறும் ஆணையர் தலைமையில் பரிசீலனை செய்து, மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம் 1956, உட்பிரிவு 1-ன்படி எங்கெல்லாம் கோயில் உள்ளதோ அங்கெல்லாம் அறநிலையத்துறை தலையிடலாம். சட்டத்துக்கு உட்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தொற்று குறைந்தவுடன் வெகு விரைவில் கோயில்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 17 ஜுன் 2021