மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 ஜுன் 2021

சிவசங்கர் தாதா

சிவசங்கர் தாதா

ஸ்ரீராம் சர்மா

முதலில், இந்த ஆன்மிக தாதாவுக்கு எதிராக துணிந்து வெளிவந்து குரல் கொடுத்த மாணவ - மாணவியருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் எனது தலை வணக்கம்.

பெருமைக்குரிய பெண்மகள்களே, தாய்மார்களே குறித்துக்கொள்ளுங்கள்... இதனால் உங்களுக்கு எந்தவிதமான குணச் சிறுமையும் இல்லை. மாறாக உங்களது துணிவை எண்ணி எண்ணித் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.

தலைகுனிந்து மொட்டை போட்டபடி சுற்ற வேண்டியது நம்பிக்கை துரோகம் செய்த அந்த மிருகம்தான்.

எதையும் ஆழப் புரிந்துகொள்ள அவகாசம் எடுத்துக்கொள்ளும் பொறுமை எனக்குண்டு என்பதால் வெளிவரும் விஷயங்களை கவனித்தபடியே இருந்தேன். சிவசங்கர் என்னும் அந்த ஆன்மிக தாதாவின் சில வீடியோக்களைக் காணக் காண கண்டு எனக்கு அதிர்ச்சி மேலிட்டது.

அதில், ஆயிரமாயிரம் அபத்தம். பெண்மையை மிக ஆபாசமாகப் பேசியபடி தனக்குத் தானே சிரித்துக்கொள்கிறது அந்த மிருகம். உள்ளே கஞ்சா இறங்கியிருந்தால்தான் அப்படியெல்லாம் சிரிப்பு வரும் என்று சொல்லக் கேள்வி. என்ன எழவோ ?

அதிர்ச்சி அது குறித்தது அல்ல. அடிப்பொடிகளாக அங்கே கூடியிருந்ததில் 90 சதவிகிதம் பேர் ‘நாங்கள் மேல்தட்டு மக்களாக்கும்…’ என மார்தட்டிக் கொள்ளும் ஒயிட் காலர் ஜாப் பேர்வழிகள்தான்.

அடக் கருமமே! என்ன படித்து என்ன? என்ன சம்பாதித்துத்தான் என்ன? வாழ்க்கையை அடமானம் வைத்து அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவர்களைப் போன்றவர்களைக் கண்டால் அசூயையும் பரிதாபமும் ஆற்றாமையும் கோபமும்தான் மிஞ்சுகிறது.

அட... நல்லவன் யார், கெட்டவன் யார் என்பதைக்கூட உணர முடியாததொரு வாழ்க்கையை வாழ்ந்து எந்த மோட்சத்தை இவர்கள் அடையப் போகிறார்கள்? நாம் காரில் போகிறோம், நம் மானம் காற்றில் போகிறது என்று உணராத அறிவிலிகளை என்னவென்று சொல்வது!

சொந்த ஜனங்களை முட்டாள்கள் என வசைபாட உள்ளம் கூசுகிறதுதான். ஆனாலும், என்ன செய்ய?

காற்றில் சுண்ணாம்பு அடிக்கும் அசைவுகளை எல்லாம் நடனம் என்று நம்பிக்கொண்டு வாய் பிளப்பவர்களைக் கண்டால் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது!

கொண்டு வாழ்ந்த கணவன் ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் கிணற்றில் போய் குதிக்கிறேன் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்மகள் - கூட்டம் கூட்டி ஆபாசமாகப் பேசிக்காட்டும் நாகரிகம் கெட்ட ஒரு மிருகத்தை கடவுள் என்று கும்பிட்டு அங்கே நிற்கிறாள்.

கட்டிய மனைவிக்கு கால் சவரம் வாங்கிக் கொடுக்க சலித்துக் கொள்பவன் உழைத்துச் சம்பாதித்ததைக் கொண்டு போய் கேளம்பாக்க உண்டியலில் போட்டுவிட்டு நிம்மதி கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறான்.

இப்படிப்பட்ட தற்குறிகளை எண்ணி அறிவில் சிறந்த தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கிறதே. அட கடவுளே…

‘பாபா’ என்றால் மராட்டி மொழியில் ‘அப்பா’ என்று அர்த்தமாம். அப்பன் செய்யும் காரியத்தையா செய்தது அந்த அற்பப்பிறவி?

முகத்திலும் பேசும் பாஷையிலும் அப்பட்டமான ரவுடி வாடை வீசும் அந்த ஆளை நம்பி குடும்பத்தைக் கொண்டுபோய் நிறுத்துபவர்களை என்னவென்று நோவது! உலகமெல்லாம் தெரியும் ஒரு டிவியில் அசிங்கப்பட்ட பின்னும் அந்த மனிதனை நம்பி ஓடுகிறது ஜனம் என்றால் அதற்கு என்ன காரணம்?

கூட்டிக் கழித்துப் பார்த்தால் பேராசையும் - தான்தோன்றித்தனமும்தான் காரணமாகத் தெரிகிறது!

அப்பன் பேச்சைக் கேட்க மாட்டேன். ஆத்தாள் சொல்லுக்கு அடங்க மாட்டேன். உடன்பிறந்தானை நம்ப மாட்டேன். கட்டிய புருஷனுக்குக் கட்டுப்பட்டால் அசிங்கம் என்று மனக்கோலாட்டம் போட்டு நிற்பேன்.

ஆனால், எங்கிருந்தோ ஒரு குள்ளநரிக் கோட்டான் குழைவாகப் பேசி அழைத்தால் அதை கடவுள் அவதாரம் என்று நம்பித் தாவுவேன் என்பது கேவலமல்லவா? அப்படியானதொரு வாழ்க்கை நிம்மதியைக் கொண்டு தருமா?

‘பொழுதாளுமை’ என்னும் மின்னம்பலக் கட்டுரையில் ஏற்கனவே இது குறித்து எழுதி மாரடித்திருக்கிறேன். என்ன பலன்? சிவசங்கர் தாதா மருவோடு தோன்றியதுதான் மிச்சம்.

இன்றைய மனிதர்களுக்கு உழைக்கும் ஆசை போய்விட்டதோ என்று அச்சமாக இருக்கிறது. அனைவருக்கும் தேவை உடனடி நிவாரணம். அது எப்படிக் கிடைக்கும்? கிடைத்தாலும் நல்ல பலனை எப்படி அது அளிக்கும்?

எப்படிப்பட்ட புண்ணியத் திருமண் இது!

அப்பர் திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர் - சுந்தரமூர்த்தி நாயனார் - அப்பூதியடிகள் - நந்தனார் - இராமானுஜர் - நூற்றாண்டு கண்ட வேதாந்த தேசிகர் - கணம்பூதர் - காரைக்கால் அம்மையார் - திருநாளைப் போவார் - தபோவன ஞானானந்தர் - வள்ளலார் - ரமணர் - காஞ்சிப் பெரியவர் என நீளும் குருமார்களின் வரலாறு கொண்ட இந்தப் புனித மண்ணில் ஆன்மிகம் இப்படி அசிங்கப்பட்டுப் போய் நிற்பதற்கு இப்படிப்பட்ட முட்டாள் பக்தர்கள்தான் பொறுப்பேற்றாக வேண்டும்.

அது ஒருபுறமிருக்க, சிவசங்கர் போன்ற ஆன்மிக சுரண்டலாளர்களைக் காணக் காண உறக்கம் மறுக்கிறது உள்ளம். இதுபோன்ற மிருகங்களை வெளியில் விட்டுவைத்தால் வருங்கால தலைமுறைக்கே ஆபத்தாகிவிடும்.

சின்னஞ்சிறு குருத்துகளைத் தன்னிடம் படிக்க வந்த பெயர்த்தி வயதொத்த சிறுமிகளிடம் எல்லாம் ஆபாசக் கோட்டானாக கொடும் முகம் காட்டி மிரட்டியிருக்கிறது அந்த மிருகம் என்றால் அதை எங்கு கொண்டு போய் அடைக்க வேண்டுமோ, அதை அப்பழுக்கில்லாமல் செய்தாக வேண்டும் இந்த அரசாங்கம்.

70 வயதில் நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களைக் கிழவி என்றும், கிழவிகளை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்றும் ஆபாசமாகப் பேசும் அந்தக் கேடுகெட்ட மனிதன் இந்தச் சமூகத்துக்கு அவசியமே இல்லை.

ஆன்மிகத்தின் பேரில் கட்டைப் பஞ்சாயத்து செய்த சிவசங்கர் தாதாவை உரிய முறையில் விசாரித்தாக வேண்டும்.

அந்த 64 ஏக்கர் எப்படி வந்தது? யாரிடமிருந்து எப்படிப் பிடுங்கப்பட்டது? அதில் அடங்கி இருக்கும் முறைகேடுகள் என்னவென்ன? பஞ்சமி நிலம் அதில் அடங்குகிறதா? அராஜக ஆக்கிரமிப்புகள் உண்டா என்றெல்லாம் தீர விசாரிக்க வேண்டும். செய்யக்கூடிய ஆள்தான் என்பது தெரிந்தபின் கருணையே காட்டக் கூடாது.

வனாந்திரம் போன்ற அந்த அடர்ந்த 64 ஏக்கர் இடத்தில் பெண் குழந்தைகள் தங்கிப் படிக்கும் ஹாஸ்டலையும் வைத்துக்கொண்டு கடவுள் அவதாரம் என்ற பெயரில் களவாணித்தனம் செய்ததோடு மட்டுமில்லாமல் அதற்கு ராம ராஜ்ஜியம் என்று பெயர் வேறு! கேவலம்…கேவலம்….

இந்தக் குற்றத்துக்காகவே ஆன்மிகம் பேசும் பாஜக அந்த விஷச் செடியை வேரறுக்க துணை நின்றாக வேண்டும். தாங்கள் சொல்லும் ராம ராஜ்ஜியம் இதுவல்ல என்பதற்காகவாவது கோர்ட் வாசலை முட்டித் தட்ட வேண்டும்.

எண்ணிப் பாருங்கள்... தங்கள் அடையாளம் தெரிந்தாலும் பரவாயில்லை என இளவயது பெண்கள்கூட வீடியோவில் தோன்றி சாட்சியம் அளிக்க முன்வந்தபடி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கடந்த காலங்களில் அனுபவித்த மன வேதனை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்?

தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிராக ஏதும் செய்ய முடியாததொரு அபலைத்தனமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோமே என அவர்களின் எளிய மனங்கள் எப்படியெல்லாம் அழுது புலம்பியிருக்கும்?

அத்தனைக்கும் ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டிய கட்டம் இது. பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு நிம்மதி அளித்தாக வேண்டிய காலம் இது!

சில குருட்டு அறிவாளிகள் இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் இந்தச் செய்தி வெளியே வருகிறது எனக் கேட்கலாம்?

இப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது என்பதுதான் அதற்கான அர்த்தம். இந்த அரசாங்கம் நமக்கு நியாயம் வழங்கும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை மக்கள் மனதில் எழுந்திருக்கிறது என்றுதான் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

அந்த நம்பிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகிறது.

இதுகாறும் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது பெருமைக்குரிய நமது தமிழ்நாட்டின் காவல்துறை. ஆன்மிகப் போர்வையில் சமூகத்தை நாசமாக்கிக்கொண்டிருந்த அந்த தாதாவை டெல்லியில் வைத்து கைது செய்துவிட்டது.

அதற்காக நமது காவல்துறையை மனதாரப் பாராட்டுவோம். அவர்களுக்கு அந்தச் சட்ட சுதந்திரத்தைப் பரிபூரணமாக அளித்த இந்த அரசாங்கத்தையும் நன்றியோடு வாழ்த்துவோம்.

ஆனால், அது போதாது. அந்த நலம்கெட்ட மனிதனுக்கு எதிராகப் பதியப்படும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) எந்தவிதமான ஓட்டை உடைசல்களும் இல்லாத அளவுக்கு நெருக்கிப் பிடித்தாக வேண்டும்.

காரணம், பெரும்பணத்தைக் கையில் வைத்திருக்கும் அந்த தாதாவால் இந்தியாவின் ஆகச்சிறந்த வழக்கறிஞர்களைத் தனக்கு ஆதரவாக அமர்த்திவிட முடியும். இன்னமும் புத்தி தெளியாத மூடர்கள் சிலர் அந்த மிருகத்துக்கு ஆதரவாக சாட்சியம் என்ற பெயரில் சத்தியக் கொலை செய்யவும் முன் வரலாம். அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுத்து விடக் கூடாது.

ஆன்மிகத்தின் பெயரில் அடாத செயல் செய்துவிட்ட இந்த அயோக்கிய தாதாவுக்குக் கிடைக்கும் தண்டனையில் மீதமிருக்கும் ஆன்மிக வியாபாரிகளும் திருந்தி ஓடி ஒளிந்தாக வேண்டும்.

குறுகிய காலத்தில் சகலவிதங்களிலும் விரைந்து செயல்படும் தமிழ்நாட்டின் ஆட்சியை தேசமே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எந்த காரணம் கொண்டும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

முடிவாக ஓர் உண்மையை சொல்லி விடுகிறேன்.

சிவசங்கர் தாதா என்னும் மிருகம் ஒழிந்தாக வேண்டிய சரியான தருணம் இதுதான் என்று இந்தக் கட்டுரை சொல்லவில்லை.

அந்த மிருகமே சொல்கிறது!

ஆம், ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக தனது அடிப்பொடிகளைக் கூட்டி வைத்துக்கொண்டு பேசும் ஒரு வீடியோவில் மிகத் தெளிவாக இப்படி வாக்குமூலம் கொடுக்கிறது அந்தக் கோர மிருகம்…

“எனது ஜாதகப்படி நான் இந்த மாசமே செத்திருக்க வேண்டியவன். ஆனால், எப்படியோ பிழைத்திருக்கிறேன்...”

வடமொழியிலொரு பழமொழி உண்டு.

“விநாச காலே விபரீத புத்தி…”.

அதாவது கேடுகெட்ட நேரத்தில் கெடுதலான வார்த்தைகள் வெளிவருமாம்.

சிவசங்கர் தாதா தனது ஆரம்பக் கட்டக் காலத்தில் ஜோசியம் சொல்லிப் பிழைத்ததாக அறிய முடிகிறது. ஆகவே, பலித்தாலும் பலிக்கும்.

போக்ஸோ சட்டத்தில் தூக்குத் தண்டனை விதிக்கவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த மிருகம் தொங்கவிடப்படலாம் அல்லது தனிமையான லாக்கப் நேரத்தில் கரெண்ட் ஒயரை கடித்துவிடலாம்.

ஒரு மிருகமாகப்பட்டது எந்த நேரத்திலும் என்னவேண்டுமானாலும் செய்து விடும். யார் கண்டது?

எது எப்படியோ, ஆன்மிகத்தின் பெயரில் உலவும் ஆபாச மிருகங்களை அடியோடு ஒழித்த பெருமை தமிழ்நாட்டுக்குக் கிடைக்கட்டும்!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 17 ஜுன் 2021