மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

14 பொருள் தொகுப்பு: உளுத்தம்பருப்பைக் காணோம்!

14 பொருள் தொகுப்பு: உளுத்தம்பருப்பைக் காணோம்!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் அடித்தட்டு ஏழைகளுக்கு உதவும் வகையில் 14 பொருட்கள் அடங்கிய இலவச மளிகைத் தொகுப்பை கடந்த ஜூன் 3 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

டெண்டரில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் ஆர்டர்கள் என்ணிக்கை குறைப்பு காரணமாக இத்திட்டம் தாமதமாக இன்றுதான் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 15) இலவச மளிகைத் தொகுப்பை பெற்றவர்களில் சிலர், அதில் ஒரு சில பொருட்களைக் காணவில்லை என்று புகார் வாசிக்கிறார்கள்.

கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, ரவா ஒரு கிலோ, சீனி அரை கிலோ, உளுத்தம்பருப்பு அரை கிலோ, புளி கால் கிலோ, கடலைப் பருப்பு கால் கிலோ, கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மஞ்சள் பொடி 100 கிராம், மிளகாய் பொடி 100 கிராம், டீ தூள் 200 கிராம், குளியல் சோப் 1, சலவை சோப் 1 என மொத்தம் 14 பொருட்கள் அடங்கிய இந்த பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக மக்களின் அவசர தேவைக்காக அறிவித்திருக்கிறார் முதல்வர்.

இன்று பழைய விழுப்புரம் மாவட்டம் இப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி வார்டு எண் 1 -ல் உள்ள நியாய விலைக்கடையில் 200 பேருக்கு மட்டும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதன்படி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கையால் மக்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய 'பை' வழங்கப்பட்டது. இதைப் பெற்றுச் சென்ற 150 க்கும் மேற்பட்ட பயனாளர்களின் பைகளில் 500 கிராம் எடையுள்ள உளுத்தம் பருப்பினைக் காணோம்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை பேரூராட்சி வார்டு எண் ஒன்றில் வசிக்கும் மக்களிடம் பேசினோம்.

“எங்கள் ரேஷன் கடையில் 1,2,3 வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்குகிறார்கள். மொத்தம் 1800 லிருந்து 2ஆயிரம் கார்டு வரை இருக்கும். ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு வார்டுக்கு பொருட்கள் வழங்குகிறார்கள். அந்த வகையில் இன்று முதல் வார்டுக்கு முதல்வரின் இலவச மளிகைப் பொருட்களை கொடுத்தாங்க.

எங்க தெருவுல ஒரு 50 பேருக்கு மேல அந்தப் பையில உளுந்து இல்ல. சொல்லிவச்சா மாதிரி எல்லாருக்கும் உளுந்து காணாபோனது அதிர்ச்சியா இருந்துச்சு. ஏன்னா உளுந்துதான் காஸ்ட்லியான பொருள். இன்னிக்கு கிலோ 100 ரூபாய் விக்கிது. அரசாங்கம் 14 பொருட்களை மொத்தமா பைக்குள்ள போட்டு பேக் பண்ணித் தர்றதுதான் இது வரையிலான பழக்கம். ஆனா இப்ப என்னடான்னா கல்யாணத்துல தாம்பூலப் பையில தேங்காய், வெத்திலை பாக்கு போடுற மாதிரி பொருட்களை எல்லாம் போட்டு ஓப்பன் பையாவே கொடுத்தாங்க. இதுல உளுந்து காணா போனது ரேஷன் கடைகாரங்க வேலைதான்ங்குறத கண்டுபிடிச்சுட்டோம். எப்படினா எங்க தெருவுல ஒருத்தர் மட்டும் ரேஷன் கடைக்கு கோபமா போயி, ‘ஏன்யா... அரசாங்கம் 14 பொருட்கள்னு சொல்லி அதுல உளுத்தம்பருப்பு அரைகிலோ உண்டுனும் சொல்லியிருக்காங்க. இதுல ஏன் உளுத்தம்பருப்பு இல்லைனு ?கேட்டிருக்காரு. கோவிச்சுக்காதீங்க சார் மிஸ் ஆகியிருக்கும்னு சொல்லி அவருக்கு மட்டும் உளுத்தம்பருப்பைக் கொடுத்து அனுப்பிட்டாங்க. வேற யார்கிட்டயும் இதை சொல்ல வேணாம்னும் சொல்லி அனுப்பியிருக்காங்க ரேஷன் கடைக்காரங்க. இங்க ஒரு சின்ன வார்டுலயே இத்தனை பேருக்கு கிடைக்க வேண்டிய உளுத்தம்பருப்பை கொள்ளையடிச்சாங்கன்னா மத்த வார்டுல என்ன நிலைமை... இதுல பெரிய ஊழல் நடக்க வாய்ப்பிருக்கு. அரசாங்கம் ஆரம்பத்துலயே இதை கவனிச்சு தடுக்கணும். இல்லாட்டி மக்களுக்கு முழுமையா பொருள் போய் சேராது” என்று கூறுகிறார்கள்.

14 மளிகைப் பொருட்கள் அரசால் பேக்கிங் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறதா? அப்படியென்றால் உளுந்தூர் பேட்டை ரேஷன் கடையில் தாம்பூலப் பை மாதிரி இது தரப்பட்டது எப்படி? அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகவேந்திரா ஆரா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 15 ஜுன் 2021