மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை - மறைப்பதும், திசை, திருப்புவதும் ஏன்?

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை - மறைப்பதும், திசை, திருப்புவதும் ஏன்?

டி.எஸ்.எஸ். மணி

ஜூன் மாதம் தொடங்கினாலே, பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் இந்த ஆண்டு தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்று தலையைப் பிய்த்துக்கொள்வது வழக்கம். தாங்கள் விரும்பிய ‘பிரபல பள்ளியில்’ பிள்ளையைச் சேர்க்க படாத பாடுபடுவார்கள். பார்க்காதவர்களையெல்லாம் போய்ப் பார்ப்பார்கள். கையிலிருப்பதையும், வங்கியில் உள்ளதையும், காது மூக்கில் இருப்பதையும் வைத்தாவது, பிள்ளையைக் குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்க, அல்லோலகல்லோலப்படுவார்கள். சேர்த்துவிட்டால், அதைப் பெருமையாக உற்றார், உறவினர், நண்பர் என ஊரெல்லாம் தம்பட்டமடித்து, தலைநிமிர்ந்து நடப்பார்கள். கடனாளிகளாகவும் ஆவார்கள். அதை உளமார ஏற்றுக்கொள்வார்கள். ஆண் பிள்ளை, பெண் பிள்ளை யாரானாலும் குறிப்பிட்ட பள்ளியில் குறிப்பிட்ட மாட வகுப்பில் சேர்த்துவிட்டோம். அதை முடித்து மேற்படிப்புக்கு டாக்டராக, இன்ஜினீயராகத் தங்கள் பிள்ளை வளர்ந்து, கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் மகிழ்வார்கள். கிராமம், நகரம் என்று வித்தியாசமில்லாமல், பெற்றோர்களின் எண்ணங்கள் இப்படித்தான் ஒவ்வோர் ஆண்டும் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் இந்த ஆண்டு, ஜூன் மாதம் அவர்கள் தலையில் இடி விழுந்ததாக நினைக்கும் செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்கியுள்ளது. அவர்களது கனவுத் தொழிற்சாலைகளின் சாம்ராஜ்ஜியங்கள் சரிவதை இரு கண்களாலும் காணத் தொடங்கியுள்ளனர். இரண்டு வாரங்களாக எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் பிரபல பள்ளிக்கூடங்களில், சிறுமிகளான மாணவிகள்மீது நடத்தப்படும் பாலியல் தொல்லை (Sexual Disturbance), பாலியல் துன்புறுத்தல் (Sexual Torture), பாலியல் சுரண்டல் (Sexual Exploitation), பாலியல் வன்முறை (Sexual Assault) பற்றிய செய்திகள்தாம் ஆக்கிரமிக்கின்றன. அவை இப்போது புதிதாக, ஒரு மாதமாக நடத்தப்படும் வன்முறைகளல்ல. புதிதாக ஒரு மாதத்தில் வெளியே வந்திருக்கும் வன்முறை பற்றிய கொடூரங்கள், ஆண்டு பலவாக, ஒவ்வொரு பள்ளியிலும் நடந்து வந்தது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேட்டுக்குடி பள்ளிகள் என்றும், கெளரவமான பள்ளிக்கூடங்கள் என்றும், பெரிய இடத்துக்காரர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் என்றும், நாடெங்கும் பிரபலமான பள்ளிகள் என்றும், மேற்கத்திய பாணி பள்ளிகள் எனவும், ஆங்கில மோகத்துக்குத் தீனி போடும் பள்ளிக்கூடங்கள் எனவும், பெயர் பெற்ற பள்ளிக்கூடங்களில் நடந்த பாலியல் கொடுமைகள்தான் இதில் அம்பலப்பட்டு நிற்கிறது. ஆனால், ஆண் பெண் பாலினங்களுக்கு இடையே உள்ள, பரஸ்பர நல்லிணக்கத்தை (Mutual Harmony) சமமரியாதையை (Equal Respect)க் குழி தோண்டிப் புதைக்கும் இத்தகைய பாலியல் வன்முறைகளை, ஆண் பெண் ஆகியோர், பாலின வேறுபாடு (Gender difference) இல்லாமல் மூடி மறைக்கவே செய்திருக்கிறார்களே... ஏன்? ஆண் பெண் பாலின சமத்துவத்தை (Gender Equality) உலகெங்கும் போதித்தாலும், பெண்கள் மீதான வன்முறைகள் சர்ச்சைக்கு வரும்போதெல்லாம் உலகமெங்கும் பாலின வேறுபாடின்றி, பெண்கள் மீதான வன்முறைக்கு ஏதோ ஒரு வகையில் வக்காலத்து வாங்குகிறார்களே சிலர்... அது ஏன்? புதிய விளக்கங்களுடன் பாலியல் வக்கிரங்களை நியாயப்படுத்த முனைகிறார்களே சிலர்... அது ஏன்? பிரச்சினையையே திசைதிருப்ப முயற்சி செய்கிறார்களே... அது ஏன்?

சென்னை, கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஓர் ஆண் ஆசிரியரின் ‘பாலியல் சேட்டை’ முதலில் அம்பலத்துக்கு வந்தது. வந்தவுடனேயே, அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் குடும்பத்திலிருந்து ஒரு பெண், ‘இது பார்ப்பனர்களுக்கு எதிரான சதி’ என்று பேசுகிறார். அதனாலேயே, ‘சமூக வலைதளங்கள் தொடங்கி, முக்கிய நீரோட்ட ஊடகங்கள் (Mainstream Media) வரை பிரபலமடைகிறார். அது அவருக்கு பிரபலத்தைத் தரலாம். அடுத்து, சுப்பிரமணிய சுவாமி, இதே பிரச்சினையைக் கூறி, ‘பார்ப்பனர்களுக்கு எதிரான சதி’ எனக் குற்றம்சாட்டி, ‘அரசைக் கலைத்துவிடுவேன்’ என மிரட்டுகிறார். இந்தக் குறிப்பிட்ட பள்ளி பிரச்சினையில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரை அடிப்படையாகக்கொண்டு நடவடிக்கை எடுத்தால், ‘அது எப்படி பார்ப்பனருக்கு எதிரான சதியாக ஆகும்?’ என்பது நமக்குப் புரியவில்லை. இதில், ‘பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர்’ எங்கே வந்தது என்பதும் புரியவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ‘பார்ப்பனர் குடும்பத்தின் பெண் பிள்ளைகளும்’ இருக்கிறார்களே..!

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பள்ளி மாணவிகள், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்பதால், ‘குழந்தைகள் மீதான வன்முறைகள்’ என்பதாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதனால், அந்த வழக்குகள், சிறுவர்கள் மீதான வன்முறை எதிர்ப்பு வழக்குகள் என்பதால், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள். ‘கந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்புக் குழு’வும், பெண்கள் ஆணையமும் விசாரணை செய்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அங்கும் ‘சாதி’ வரவில்லை. பிறகு ஏன் பள்ளி நிர்வாகத்தின் பேத்தியும், சு.சுவாமியும் ‘சாதி’ பற்றிப் பேசுகிறார்கள்? தமிழ்நாட்டில் ‘பார்ப்பனர்’ என்று பேசுவதால், எந்தவோர் ஆதரவும், புதிதாக அவர்களுக்கு வரப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும் ஏன் பேசுகிறார்கள்? நடுவனரசு எனும் ஒன்றிய அரசை ஆட்சி செய்கின்ற பாஜகவின் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பேசுகிறார்களா? ‘பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர்’ என்ற பழைய பல்லவி இப்போதும் எடுபடும் என்று எண்ணுகிறார்களா?

அதையடுத்து, விளையாட்டுப் பயிற்சியாளர், விளையாட்டு வீராங்கனைகளிடம் செய்த பாலியல் தொல்லை குற்றம் சாட்டப்பட்டதே..! அடுத்ததாக, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை வெளிவந்ததே..! அதற்கடுத்து, செயின்ட் ஜார்ஜ் பள்ளி, பாலியல் வன்முறை வெளிச்சத்துக்கு வந்ததே..! அடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த பாலியல் சீண்டல் புகாரானதே..! அதுபோல, சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியும் அதன் உரிமையாளர் சிவசங்கர் பாபாவும் குற்றம்சாட்டப்பட்டனரே..! இப்போது பி.எஸ்.சீனியர் பள்ளியும் பட்டியலிடப்படுகிறதே..! இந்தப் பட்டியலில் ‘பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர்’ பிரச்சினை எழுப்பப்பட முடியாதே..? பிறகு ஏன் பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்துக்காக, அவர்களது குடும்பப் பெண்மணி, பார்ப்பனர்கள் மட்டுமே திறமையுள்ளவர்கள் என்பதாகவும் பார்ப்பனரல்லாதோர் அதை எதிர்க்கிறார்கள் என்றும் திசை திருப்புகிறார்? அவர் எதை மறைக்க பாடுபடுகிறார்?

மேற்காணும் நிகழ்ச்சிகள் பற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களது ‘விடுதலை’ 11-06-21 நாளேட்டில், தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளார். ‘புற்றீசல்களாகப் புறப்படும் பாலியல் அத்துமீறல்கள்’ என்ற தலைப்பில் அது எழுதப்பட்டுள்ளது. அதில், ‘இதில் தேவையில்லாமல் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் பிரச்சினையைக் கிளப்பிவிட்டவர்கள் பார்ப்பனர்களே’ என்று எழுதியுள்ளார்கள். மேலும், ‘செட்டிநாடு பள்ளியைப் பற்றி கூடத்தான் புகார் கிளம்பி இருக்கிறது. செட்டிநாடு பள்ளி என்ன அக்கிரகாரத்தார் நடத்தும் பள்ளியா? அந்தப் பள்ளியிடத்திலும் விசாரணை நடந்து கொண்டுதானே இருக்கிறது’ என்றும் அதில் எழுதியுள்ளார்கள். அதே தலையங்கத்தில், நிறைவாக, ‘பத்திரிகைகளில் பலவாறாக எழுதுவதும், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் என்று எழுதுவதும், பிரச்சினையைத் திசை திருப்பும் யுக்தி’ என்றும் பதிவு செய்கிறார்கள்.

அப்படியானால், பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்ன? ஆண் ஆசிரியர்கள், பெண் மாணவிகளை காமநோக்கோடு அணுகக்கூடிய ஆணாதிக்கப் போக்கு நிலவும் சமூகம்தான் இது. அப்படிப் பள்ளிக்கூடங்களில், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நடக்குமானால், வெளியே தெரியும்போது, ‘பெற்றோர் - ஆசிரியர் சங்கம்’ மற்றும் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வழிவகை செய்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளில், நடக்கும் பாலியல் புகார்களை, கண்டு கொள்ளாமலோ, மூடி மறைத்தோ, திசை திருப்பியோ செய்ய வேண்டிய தேவை, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினருக்கு இருக்கிறது. அப்போதுதான், தாங்கள் தங்கள் பள்ளிக்கு வாங்கி வைத்திருக்கும் போலியான ‘பிரபலம்’ என்ற முகமூடி கிழியாமலிருக்கும். அந்தப் பள்ளிக்கூடத்தில் பாலியல் வன்முறையா என்று அதிர்ச்சியடையும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, அந்தக் குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் சேர்க்க மாட்டார்கள். அதனால்,பள்ளிக்கூடத்தின் வருமானம் அடிபடும். ‘கல்வியை வியாபாரமாக்கும்’ இதுபோன்ற தனியார் பள்ளிகளில், புகாராக வரும் பாலியல் குற்றங்களை அதற்காகவே நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்கிறது. அதனால், எந்த சாதி, எந்த மதம் என்பதல்ல. ‘தனியார் கல்வி வியாபாரமா? சேவை அடிப்படையில், அரசு கொடுக்கும் கல்வியா?’ என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மேற்கண்ட குற்றங்களை மூடி மறைக்க, திசை திருப்ப தனியார் பள்ளிகளின் ‘வியாபார நோக்கம்தான்’ தூண்டுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். ஆகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது, அரசு சரியான விசாரணையை, சார்பற்ற முறையில் நடத்தி, தண்டனையை விரைவில் வழங்க உறுதி செய்ய வேண்டும். அடிப்படையில், தனியார் பள்ளிகளின் ‘கல்வி வியாபாரிகள்’ கட்டாய நன்கொடை வசூலித்தல், மாணவ மாணவியர்களின் அறிவை சுதந்திரமாக வளர்க்க உதவாமல், இயந்திர ரீதியில் தேர்வில் மதிப்பெண் பெற மனப்பாட முறையை மாணவர்கள் மீது திணித்தல் (Broiler Schools), பாலியல் புகார்கள் வந்தாலும் கண்டிக்காமல், தண்டிக்காமல் இருத்தல், படைப்பாற்றல் சுதந்திரத்தை மாணவ மாணவியர் இடையில் செழுமைப்படுத்தாமல் இருத்தல் ஆகியவற்றைச் செய்கிறார்கள் என்பது பற்றி புரிய வேண்டியுள்ளது. அதேநேரம், பணம் விளைவிக்கக்கூடிய இயந்திரங்களாக, மாணவ மாணவியரைக் காணுதல் என்ற லாபநோக்கக் கோட்பாட்டை (Profit Motivated Concept) அடிப்படையாகக் கொண்டுதான், தனியார்கள் பள்ளிக்கூடங்களைத் தொடங்குகிறார்கள் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆகவே, மேற்கண்ட சிக்கல் நமக்கு நல்ல பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. ‘அரசுப் பள்ளிகள்’ பற்றி பெற்றோர்களுக்கு உள்ள, ஒவ்வாமையை நீக்க, ‘சிறந்த கல்வி, ஒழுக்கம், அறிவு’ வளர, அரசுப் பள்ளிகளே வேண்டும் என்ற மனோபலத்தை, மக்கள் மத்தியில் விதைக்கும் திட்டங்களைச் செயல்படுத்த, அரசு ஆவன செய்ய வேண்டும்.

.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 15 ஜுன் 2021