மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

தனக்கு கொரோனா வந்தது ஏன்?: முதல்வர் விளக்கம்!

தனக்கு கொரோனா வந்தது ஏன்?: முதல்வர் விளக்கம்!

தனக்கு கொரோனா தொற்று ஏன் வந்தது என்பது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய அளவில் கொரோனா இரண்டாம் அலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் பாரபட்சமில்லாமல் தொற்றுக்கு ஆளானார்கள். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில், தனக்கு ஏன் கொரோனா வந்தது என்பதன் காரணத்தைக் கூறி தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை மக்களிடையே எடுத்துக் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் நகர சுகாதார மையத்தின் கட்டடம் பழுதானதால் ரூ.5 கோடி செலவில் மூன்று மாடிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டடத்தை நேற்று (ஜூன் 14) முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “ஆரம்பத்தில் நான் முகக்கவசம் அணியாமலும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலும் சாதாரணமாகவே இருந்தேன். அதனால் முதல்வராக பதவியேற்கும்போது தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பினேன். கொரோனா வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

முன்பு தடுப்பூசி வருமா, வராதா என்று காத்து கொண்டு இருந்தோம். தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். அது முக்கியமானது. நான் தடுப்பூசி போடாததாலும், முகக்கவசம் அணியாததாலும்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். ஒருவேளை நான் தடுப்பூசி போட்டிருந்தால் எனக்கு கொரோனா வந்திருக்காது.

யாரோ ஒருவரால் பரப்பப்படும் வதந்தியை நம்பி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராமல் இருக்கக் கூடாது. இரண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால், எனக்கு சிகிச்சையின்போது 100 ஊசிகள் போடப்பட்டது. அந்த இரண்டு டோஸைப் போட்டிருந்தால் எனக்குப் பிரச்சினை வந்திருக்காது.

சிலர் நோயின் தீவிரத்தை புரிந்துகொள்ளாமல் காலதாமதமாக மருத்துவமனைக்குச் செல்வதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. நோயின் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மருத்துவர்கள் கூறுவதுபோல் அவசியம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

எதிர்காலத்தில் மூன்றாவது அலைவருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நேரத்தில் நாம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது” என்று பேசினார்.

-வினிதா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

செவ்வாய் 15 ஜுன் 2021