மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

தனியார் பள்ளி ஆசிரியர்கள் : அமைச்சர் சொன்ன ஆறுதல்!

தனியார் பள்ளி ஆசிரியர்கள் : அமைச்சர் சொன்ன ஆறுதல்!

பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து இதுவரை பரிசீலிக்கவில்லை என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று (ஜூன் 14) தொடங்கியது. பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. குறிப்பிட்ட பாடப் பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், அந்தப் பாடப்பிரிவில் 15 சதவிகிதம் கூடுதல் இடங்களை ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று(ஜூன் 14) சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் மட்டுமே பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறாது. புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. மாணவர் சேர்க்கை முடிவடைந்தவுடன், ஒரு வாரத்திற்குள் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் 75 சதவிகிதம்தான் வசூலிக்க வேண்டும், அதையும் இரண்டு தவணைகளாகப் பிரித்து 30 சதவீதம், 45 சதவீதமாக மட்டுமே பெறவேண்டும் என்று கூறி இருக்கிறோம். 75 சதவீதக் கட்டணத்தை மீறி பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. ஆசிரியர்கள் சிலரே இதுகுறித்து என்னிடம் பேசினார்கள். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச்சென்று, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்பதுதான் பேச்சுவார்த்தையில் உள்ளது. கோவை கரூர், சேலம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தினோம். தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு வருவதற்கு முனைப்பு காட்டுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவ்வாறு கூடுதலாக மாணவர்கள் சேரும்போது உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் கல்வி தொலைக்காட்சி வழியாகதான் பாடம் நடத்த முடியும். தளர்வுகள் எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தும் முடிவெடுக்கப்படும். தற்போதுவரை பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கவில்லை.

கடந்த அதிமுக கட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடைபெற்றதாக தகவல் வந்தது. அந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து, தவறு நடந்தது உண்மையெனில், முதல்வர் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் இருக்காது என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதா அல்லது செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், அனுமானத்தின் அடிப்படையிலேயே ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படும் என்ற தகவல் வெளியானது” என்று கூறினார்.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

திங்கள் 14 ஜுன் 2021