மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

ஹைட்ரோ கார்பனை அரசு அனுமதிக்காது: முதல்வர் கடிதம்!

ஹைட்ரோ கார்பனை அரசு அனுமதிக்காது: முதல்வர் கடிதம்!

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இத்திட்டத்தை எதிர்த்த நெடுவாசல், கருக்காகுறிச்சி, கோட்டைகாடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் எனப் பல்வேறு கட்டங்களாக 200 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரை பிரபலங்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு தந்ததால் இந்தப் போராட்டம் வலுபெற்றது. இதையடுத்து, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது.

இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காய்குறிச்சி அருகே உள்ள வடதெரு உட்பட இந்தியா முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த 10ஆம் தேதி ஏல அறிவிப்பை வெளியிட்டது.

இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கூறி ஓஎன்ஜிசி மூலம் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தொன்றுதொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணி வேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது. ‘சோழ நாடு சோறுடைத்து’ என்ற சொல் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்று. இத்தனை பெருமைகொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

நேற்றைய தினம், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி, அப்பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

10.6.2021 அன்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், காவிரிப் படுகை பகுதியில் வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுகை பகுதியிலுள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், இந்தப் படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கையாகும்.

இக்காரணங்களை எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்க வேண்டுமென்றும், எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது. தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் கண்ணை இமை காப்பது போல எங்கள் அரசு காக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

திங்கள் 14 ஜுன் 2021