மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: சீமான் அரசியலின் அபாயங்கள், அபத்தங்கள்!

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: சீமான் அரசியலின் அபாயங்கள், அபத்தங்கள்!

ராஜன் குறை

சென்ற வாரம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சந்தித்த படுதோல்வியிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெற முடியும் என்று பரிசீலித்தோம். இந்த வாரம் சீமானின் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் தோல்வி குறித்தும், அதன் அரசியல் எத்தன்மையது என்பது குறித்தும் ஆராய்வோம். அரசியல் சிந்தனை என்பது விமர்சனபூர்வமாக இருப்பதுடன் கண்டிக்க வேண்டியதை கண்டிக்க தயங்கக் கூடாது. கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி இரண்டுமே தனிநபர்களை மையப்படுத்தியது. அவர்களைத் தவிர அந்தக் கட்சியில் உள்ள யாருமே முகமற்றவர்கள்; அடையாளமற்றவர்கள் என்ற நிலையிலேயே இந்தக் கட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையை விமர்சிப்பதில் ஒரு மிகப்பெரிய குழப்பம் பலர் மனதில் இருக்கிறது. எல்லா கட்சிகளுமே ஒரு தலைவரை, முதலமைச்சர் வேட்பாளரை, பிரதமர் வேட்பாளரை மையப்படுத்திதானே நடக்கிறது, அதுபோலத்தானே இந்தக் கட்சிகளும் என்று பலரும் எண்ணத் தலைப்படுகிறார்கள். குறிப்பாக தொலைக்காட்சி ஊடகம் இந்தத் தலைமையேற்கும் தனிநபர் மட்டுமே வெற்றி தோல்விக்கு காரணம் என்ற மனப்போக்கை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைந்ததும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக ஓர் அபத்தமான கற்பிதத்தைத் தொடர்ந்து அனுமதித்தார்கள்.

ஒரு கட்சியின் தலமட்ட தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் எனப் பலரையும் குறித்து அச்சு ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்கின்றன. ஆனாலும் அவர்களது முக்கியத்துவத்தைக் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து பேசுவதில்லை. பல நேரங்களில் வெற்றி தோல்விக்கு அவர்களது செயலாற்றும் திறமையும், மக்களிடையே அவர்களுக்கு உள்ள தொடர்புகளும் முக்கிய காரணம் என்றாலும் அது முழுமையாக உள்வாங்கப்படுவதில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளுமே பலமுறை ஆட்சிப்பொறுப்பில் இருந்தவை. அந்தக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்தவர்கள். மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர்கள். அதனால்தான் இந்த இரண்டு கட்சிகளும் சமூகப்பரப்பில் முழுமையாக வேரூன்றியுள்ளன. இந்தக் கட்சிகளைக் கடந்து இன்னொரு கட்சி வளர வேண்டும் என்றால் சமூகப் பரப்பில் அந்தக் கட்சி வேரூன்ற வேண்டும். அதற்கு தல மட்டத்தில் மக்கள் நம்பிக்கையை ஈட்டும் வண்ணம் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் தல மட்ட தலைவர்கள் உருவாக வேண்டும். இவர்கள் கட்சியின் செயல்பாட்டை தீர்மானிப்பவர்களாக, கட்சியின் தலைமைக்கு உரம் சேர்ப்பவர்களாக இருக்க வேண்டும். இப்படி ஒரு வலுவான கட்சி அமைப்பு உருவான பின் ஒரு தலைவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யலாம். ஆயிரக்கணக்கானவர்கள் தேரை இழுக்கும்போது தேர் நகர்கிறது. ஆனால், அது தானாக நகர்வதில்லை. இழுப்பவர்களின் உடலாற்றலால்தான் நகர்கிறது. அது போல கட்சி தானூர்தி வாகனமில்லை. தலைவர்கள் மட்டுமே அதை நகர்த்திவிட முடியாது. தொண்டர்களை உற்சாகப்படுத்தி இயக்கும், மக்களை கவரும் ஆற்றல் தலைவர்களுக்கு இருக்க வேண்டும். அதே நேரம் அப்படி உற்சாகப்படுத்த தொண்டர்களைக் கொண்ட கட்சி அமைப்பு முதலில் இருக்க வேண்டும்.

சீமானின் கட்சி அவருடைய உணர்ச்சிகரமான பேச்சை மட்டுமே நம்பியிருக்கிறது. ஆவேசமாக, நகைச்சுவையாக, உணர்ச்சி தெறிக்க அவர் ஏற்ற இறக்கங்களுடன் பேசுகிறார். அது கேட்பதற்கு நாடகீயமாக, சுவாரஸ்யமாக இருப்பதால் மக்கள் கூடுகிறார்கள். அதை ஆதாரமாகக் கொண்டு பலர் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாகி கட்சியை வளர்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். சீமானையே ஆதாரமாகக் கொண்டிருப்பதால் கட்சியின் தலமட்ட அமைப்புகள் வலுப்பெறுவதில்லை. அவற்றுக்கென செயல்பாடுகள் என சில காரியங்கள் நடந்தாலும், வெகுஜன அமைப்பாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், சீமானே கட்சியின் ஆதாரம் என்ற நிலைதான்.

தேர்தலில் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி தேர்தலைத் தனித்து நின்று சந்திக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு நாலரை லட்சம் வாக்குகளைப் பெற்றது. அடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்டு பதினாறு லட்சம் வாக்குகளை பெற்றது. நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு முப்பத்திரண்டு லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் ஆறு சதவிகித வாக்குகள் ஆகும். இந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போது கட்சி மெள்ள வளர்வதாகத் தோன்றலாம். ஆனால், நாம் கவனிக்க வேண்டியது இரண்டு முக்கிய கட்சிகளும், அவர்கள் அமைக்கும் கூட்டணிகளும் தொடர்ந்து எண்பது சதவிகித வாக்குகளைப் பெறுகின்றன என்பதைத்தான். சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியிலேகூட அவர் மூன்றாவது இடம்தான் பெற முடிந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு திரைப்பட இயக்குநராக, தமிழ் ஈழ ஆதரவாளராக, தமிழ் அடையாளவாத அரசியல் செய்பவராக ஊடக கவனத்தைத் தொடர்ந்து பெற்றுவரும் அவரால் அவர் போட்டியிடும் தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை என்பது சிந்தனைக்குரியது.

தமிழகத்தில் நிலைபெற்றுவிட்ட இரு கட்சி ஆட்சி முறை மீது பலருக்கு அதிருப்தி இருக்கிறது. தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பிற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே இருந்தாலும், இன்னும் மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படவில்லை என்பது உண்மைதான். அதனால் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மூன்றாவதாக ஒரு மாற்று சக்தி வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இவர்கள் மொத்த வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட இருபது சதவிகித வாக்குகளாக இருந்து வருகிறது. அதாவது திமுக, அஇஅதிமுக கூட்டணிகள் பகிர்ந்துகொண்ட எண்பது சதவிகித வாக்குகளைத் தவிர்த்த, இரு துருவ அரசியல் அதிருப்தியாளர்களின் இருபது சதவிகித வாக்குகளைத் தனித்து நிற்கும் சிறிய கட்சிகள், சுயேட்சைகள், நோட்டா எனப் பலரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். விஜய்காந்த் கட்சி தொடங்கி 2006 தேர்தலில் போட்டியிட்டபோது இந்த உதிரி அதிருப்தி வாக்குகளில் எட்டு சதவிகித வாக்குகளை ஒரே ஆண்டில் பெற்றார். பின்னர் அவர் 2011 தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மூன்றாவது மாற்று என்ற தகுதியை இழந்தார். அதனால் 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டாலும் மொத்தமாகவே அந்த கூட்டணி ஐந்து சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. அதே 2016 தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு சதவிகித வாக்கினைப் பெற்றது. அடுத்து நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் நலக் கூட்டணியின் பிரதான கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால் இருபது சதவிகித அதிருப்தி வாக்குகளில் நாம் தமிழருக்கு கணிசமாக ஆறு சதவிகித வாக்குகள் வரை கிடைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த வளர்ச்சி என்பது ஒருபோதும் இரண்டு பெரிய கட்சிகளையும் வெல்லும் சாத்தியத்தைக் காட்டும் வளர்ச்சி கிடையாது. அந்தக் கட்சிகள் ஈர்க்கும் வாக்குகளைச் சிறிதளவும் குறைப்பதற்கு நாம் தமிழர் கட்சியால் இயலவில்லை. இனி வரும் காலத்திலும் இயலாது என்பதுதான் உண்மை. ஏனெனில் அதன் அரசியல் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்குப் பொருத்தமற்ற, உள்ளீடற்ற ஓர் உணர்ச்சி அரசியல் என்பதுதான்.

சீமானின் சாகசவாதம், கற்பனாவாதம், புனைவுரைகள்

ஆரோக்கியமான அரசியல் செயல்பாடு என்பது மக்களைச் சிந்திக்க தூண்டுவது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் பகுத்தறிவை முன்வைத்து அரசியல் செய்தன. அவை மக்களாட்சியின் அடிப்படைகள் என்ன, அதன் மூலம் எப்படி சமூக நீதியை நிலைநாட்டுவது, சமத்துவ மனப்போக்கை வளர்ப்பது என்பதையெல்லாம் மிக விரிவாக பிரச்சாரம் செய்தன. வெறும் அடையாளவாதமாகவோ, உணர்ச்சி அரசியலாகவோ அவை இருக்கவில்லை. மொழிப்பற்று, திராவிட இனம் என்றெல்லாம் பேசினாலும் அவற்றின் உள்ளார்ந்த உள்ளடக்கம் சாமானியர்கள் ஆட்சி, சமூக மறுமலர்ச்சி, சாதி இழிவு நீக்கம், முற்போக்கு சிந்தனை என்பதாகவே இருந்தது. இருபதாண்டுகள் நிகழ்ந்த மகத்தான பிரச்சாரத்தினால் பெரும் மக்கள் இயக்கமாக உருப்பெற்றதை உடைத்து தன் கதாநாயக ஆளுமை மூலம் பாதியைப் பிரித்துக் கொண்டார் எம்ஜிஆர். அதிலிருந்து திமுக, அஇஅதிமுக என்ற இருமுனை அரசியல் நிலைபெற்றது.

சீமானின் அரசியல் என்பது ஈழத்தில் விடுதலைப் புலிகள் போரில் அழித்தொழிக்கப்பட்ட தருணத்தில் தொடங்கியது. சீமான் விடுதலைப் புலிகள் போரில் வென்றுவிடுவார்கள் என்று கடைசி வரை உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார். போர் நிறுத்தம் கோருவது சிங்கள வீரர்களை அழிவிலிருந்து காப்பாற்றத்தான் என்று சூளுரைத்தார். தமிழகத்தில் இலங்கை பிரச்சினை குறித்தும், அங்கு நடந்த உள்நாட்டுப் போர் குறித்தும் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறைதான் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கிறதே தவிர, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை இருந்தது குறைவு. விடுதலைப் புலிகள் குறித்து உலக அரங்கில் அரசியல் சிந்தனையாளர்கள் என்ன கூறுகிறார்கள், அதன் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் தமிழில் யாரும் விவாதிப்பதில்லை. சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் அமைப்பு இரண்டுமே வன்முறையைத் தீர்வாக முன்னெடுத்ததை உலக அளவிலான மனித உரிமை அமைப்புகளும், அரசியல் சிந்தனையாளர்களும் கண்டிக்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் சிங்கள அரசை மட்டுமே கண்டிக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் எல்லா ராணுவ நடவடிக்கைகளும், அரசியல் படுகொலைகளும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இலங்கை உள்நாட்டுப் போரின் வரலாறு குறித்த தகவல்களே பலருக்கும் தெரியாது. விடுதலைப் புலிகள் மரணத்துக்கு அஞ்சாமல் போரிட்டார்கள், பிரபாகரன் இறுதிவரை போரிட்டு உயிர் நீத்தார் என்று அவர்கள் வீரம், தியாகம் ஆகியவற்றை போற்றுவதுடன் தமிழ்நாட்டு அரசியல் சிந்தனை நின்றுவிடுகிறது. அந்த வீரம், தியாகத்தால் விளைந்த அரசியல் நன்மை, தீமைகள் என்ன என்பதை குறித்து விவாதிப்பதில்லை. எப்படி சே குவாராவின் சாகச வாதம், கொச்சையான ராணுவ வாதம், வீரமாக, தியாகமாக விமர்சனமின்றி கொண்டாடப்படுகிறதோ அதேபோலத்தான் பிரபாகரன் விஷயத்திலும் நடக்கிறது.

இதற்கு மாறாக இந்திய விடுதலைப் போரில் முளைவிட்ட தீவிரவாதப் போக்கை காந்தி தன் மகத்தான அரசியல் தரிசனத்தால் முறியடித்தார். சுபாஷ் சந்திர போஸின் ராணுவ வாதம் அவரை ஹிட்லரின், ஜப்பானின் கூட்டாளியாக மாற்றியது. ஆனால் காந்தியும், காங்கிரஸும் உறுதியாக மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை வைத்து வெகுஜன அரசியலை முன்னெடுத்ததால் இந்தியாவின் அரசியல் விளைநிலம் பண்பட்டது. காந்தியை, காங்கிரஸை கடுமையாக விமர்சித்தவர்கள் அனைவரும் தொடர்ந்து இந்தியாவில் அரசியலை முன்னெடுக்க முடிந்தது. இன்று வரை அந்த அரசியல் முரண்கள் தேர்தல் களத்தில் மோதிக்கொள்கின்றன. வாக்குச் சீட்டு என்ற ஆயுதத்தின் மூலமே தீர்வுகளைக் காண்கின்றன.

காந்திக்கும், காங்கிரஸுக்கும் இணையாக பெரியாரும், அண்ணாவும் முழுக்க முழுக்க மக்கள் மனமாற்றத்தை நோக்கியே அரசியல் செய்தார்கள். வன்முறையை அறவே தவிர்த்தார்கள். அருவருத்தார்கள். மக்கள் கூட்டம் தன்னெழுச்சியாக வன்முறையில் ஈடுபட நேர்ந்தாலும் அதைக் கண்டித்தார்கள். பாராட்ட மறுத்தார்கள். தாங்கள் அறிவிக்கும் போராட்டங்களால் தொண்டர்கள் அளவுக்குமீறி இன்னல்களை அனுபவித்துவிடக் கூடாது என கவனமாக இருந்தார்கள். மனமாற்றத்துக்காகப் போராடினார்களே தவிர, தாங்கள் நினைத்ததை வன்முறையால் சாதிக்க நினைக்கவில்லை. இந்த மரபில் நின்று ஐம்பதாண்டுக் காலம் மக்களாட்சி விழுமியங்களைக் கட்டி எழுப்பினார் கலைஞர்.

ஆனால், இலங்கையில் தமிழர் உரிமைக்கான அரசியலை முழுக்க, முழுக்க ராணுவமயப்படுத்தினார் பிரபாகரன். இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்தாயகம் மட்டுமே ஒரே தீர்வு என்ற அதிகபட்ச தீர்வே முன்னிலைப்படுத்தப்பட்டது. மாற்று தீர்வுகளை முன்வைத்த பலர் துரோகிகளாகக் கருதி கொல்லப்பட்டனர். நீலம் திருச்செல்வன், ரஜினி திரணகம என்று சர்வதேச குடிமைச் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரசியல் கொலைகள் பல நிகழ்ந்தன. இவற்றை குறித்தெல்லாம் விமர்சனபூர்வமான சிந்தனை தமிழ் உணர்வாளர்களால் மேற்கொள்ளப் படுவதில்லை.

இந்த நிலையில் தனக்கும் பிரபாகரனுக்கும் உள்ள உறவைக் குறித்து பல கற்பனை கதைகளைப் பேசுபவராக சீமான் அறியப்படுகிறார். அதெல்லாம் ஊடகங்களில் நகைச்சுவைக்கான கச்சாப் பொருளாக மாறியுள்ளன. ஆமைக்கறி என்பன போன்றவை கேலிக்கான குழூஉக்குறியாக மாறியுள்ளன. ஆனாலும் இவை சீமானுக்கு விளம்பரமாகவும் மாறிவிடுகின்றன. நாம் தமிழர் கட்சியிலிருந்து கணிசமான பேர் தொடர்ந்து விலகுகிறார்கள். அவர்கள் பொதுக்களத்தில் வைக்கும் குற்றச்சாட்டுகள் பலவும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. சமீபத்தில்கூட சீமான் நட்சத்திர விடுதிகளில் அறை எடுக்கச்சொல்லி வற்புறுத்துவது குறித்து சில குற்றச்சாட்டுகள் வலம் வந்தன. இவையெல்லாம் உண்மையா, இல்லையா என்று யாரும் ஆராய்வதில்லை என்றாலும், குற்றம் சாட்டுபவர்கள் பகிரங்கமாக தங்கள் சொந்தப் பொறுப்பில்தான் கூறுகிறார்கள் என்பதையும் புறக்கணிக்க முடியாது. தனது பொருளாதாரப் பார்வை எனவும், திட்டங்கள் எனவும் மனம்போன போக்கில் சீமான் கூறுபவை அதிர்ச்சியளிக்கின்றன. கொச்சையான தமிழ் அடையாளவாதம், மீட்புவாதம் ஆகியவற்றுடன் இணைந்த நடைமுறைக்கு உதவாத நேட்டிவிசம் என்று சொல்லக்கூடிய கிராமிய வாழ்க்கைக் கற்பனைகளைச் சிறிதும் தயக்கமின்றி நாம் தமிழர் கட்சி வெளிப்படுத்துகிறது.

ஒருபுறம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், நாம் தமிழர் கட்சியின் மனோநிலை பாசிச கூறுகளைக் கொண்டது. திராவிட அரசியலுக்கு எதிராக இயங்கும் சனாதன சக்திகளின் கைப்பாவையாக மாறும் வாய்ப்புகளைக் கொண்டது. அதனால் அந்தக் கட்சியின் செயல்பாடுகள், அதன் உச்சரிப்புகள் ஆகியவை தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது அவசியம்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 14 ஜுன் 2021